
அஸ்ஸாம் மாநிலம், "கார்பி ஆங்லாங்' மாவட்டத்தை தனி மாநிலமாக உருவாக்க வலியுறுத்தி, தனி மாநிலத்துக்கான கூட்டு நடவடிக்கை குழு (ஜாகாஸ்) சார்பில் 1,000 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 5 மணிக்குத் தொடங்கிய இந்த முழு அடைப்புப் போராட்டம், அடுத்த மாதம் 9ஆம் தேதி இரவு 9 மணியுடன் நிறைவு பெறுகிறது. கார்பி ஆங்லாங் மாவட்டத்தைத் தன்னாட்சி மாநிலமாக உருவாக்குவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
எனினும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படாததை அடுத்து, இந்தப் போராட்டத்தை கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
இந்த முழு அடைப்பு குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உக்தஜ்யோதி தேவ் மஹந்தா கூறியதாவது:
மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்வி, நிதி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் குறைவான அளவிலேயே பணிக்கு வந்துள்ளனர். எனினும், வாகனங்கள் இயங்கின என்று தெரிவித்தார்.
முன்னதாக "கார்பி ஆங்லாங்' தனி மாநில உருவாக்கத்துக்கான ஜாகாஸ்-அஸ்ஸாம் மாநில அரசு-மத்திய அரசு ஆகியவை அடக்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி, கடந்த மாதம் ஜாகாஸ் குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமணி
0 comments:
Post a Comment