பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, September 7, 2014

வல்லினம் மிகுதலும் மிகாமையும் - திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் - பகுதி I


முன்னுரை : -

தமிழின் இயல்பான ஒலிநயத்திற்கும், தெளிவான பொருள் விளக்கத்திற்கும் சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் முறையை நன்கு அறிந்து கடைப்பிடிப்பது இன்றியமையாதது.

சொற்புணர்ச்சியுள் வல்லொற்று மிகுதலும், மிகாமையும் பற்றிய பகுதி சிறப்பாகக் குறிக்கத் தக்கது.

விரிவான இலக்கண நூல்களில் இவற்றைக் கற்றுத் தெளிவது, பொதுநிலைக் கல்வியாளர்க்கும் இலக்கியம் மொழியியல் அல்லாத பிறதுறை மாணாக்கர்களுக்கும் இயலாததாக இருக்கின்றது.

இலக்கணச் சுருக்கமாகவும் மொழிச் செம்மை குறித்தும் இந்நாளில் வெளிவந்துள்ள சிற்சில நூல்கள் இலக்கணக் குறியீடுகளால் கூறி மிகப் பழைய எடுத்துக்காட்டுக்களையும் தந்திருக்கக் காண்கிறோம்.

இலக்கணக் குறியீடுகள் தெரிந்தார்க்கின்றி அவை விளங்குவதில்லை. பழைய எடுத்துக்காட்டுகள் சலிப்பையும் உண்டாக்குகின்றன. ஆகவே, கற்போர் முகஞ் சுளிக்கின்றனர். 

இந்நிலைக்கு மாறாகப் புதிய முறையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலில் நடைமுறையில் பெருவழக்காக உளள எடுத்துக்காட்டுகள் பற்பல தரப்பட்டுள்ளன.

இந்நூலின் முதற்பதிப்பு வெளிவந்தவுடன் அதனைக் கண்ணுற்ற பாவலறேறு ஐயா அவர்கள் அது முழுவதையும் சிறுவர் கலை இதழான தமிழ்ச் சிட்டில் சிறுமாற்றத்துடன் தொடராக வெளியிட்டார்கள். அதற்கு அவர்கள் எழுதிய முன்னுரை மறுபதிப்பில் சேர்க்கப்பட்டுத் தொடர்கிறது.

இந்நூலின் முதற்பதிப்பைப் பைந்தமிழ்ப் பாசறையும் மறுபதிப்பைநூழில் பதிப்பகமும் வெளியிட்டன. இம் மூன்றாம் பதிப்பு இறையக வெளியீடு.

தமிழைத் திருத்தமாகக் கையாள வேண்டும். ஒற்றுப் பிழியின்றி எழுத வேண்டும் என விறும்புகிறவர்களுக்கு இக் கைநூல் கைகொடுக்கும்.

                                                                                                                                                    -இறை


பெருஞ்சித்திரனார்

அணிந்துரை

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள் ‘வல்லினம் மிகுதலும் மிகாமையும்’ என்னும் சிறிய , கையடக்கமான ஒரு நூலை வெளியிட்டுள்ளார்.

அதில் வல்லினம் மிகும் இடங்களையும் எல்லோர்க்கும் விளங்குமாறும் மனத்தில் இறுத்திக்கொள்ளுமாறும் எளிய நடையில், ஆசிரியர் பல இலக்கணக் கூறுகளையும் நல்ல எடுத்துக்காட்டுகளுடன் கூறியிருக்கின்றார்.

இந்த நூலைத் தமிழ் மாணாக்கர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பாவலர்கள் முதலியோர் அனைவரும் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டும். மற்றவர்களையும் படிக்கச் செய்ய வேண்டும்.

                                                                                                                      - பெருஞ்சித்திரனார்

வல்லினம் : மிகுதலும் மிகாமையும்

தமிழில் இரு சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் சேர்க்கை புணர்ச்சி என்று குறிக்கப்படுகின்றது.

புணர்ச்சி இலக்கணத்தைச் செம்மையாகத் தெரிந்து கடைப்பிடித்தல் வேண்டும். அல்லாக்கால் ஒலிநயமுங் கெடும்; பொருள் மயக்கமும் உண்டாகும்.

வாழைப் பழத்தை ‘வாளப்பளம்’ என்பது போலவே ‘வாழை பழம்’ என்பதும் பிழையானது; நகைப்புக்கு உரியது. 

‘கலைக் கழகம்’ என்று வல்லெழுத்து மிகுந்திருத்தால்தான் கலை வளர்க்கும் கழகமாக அதி தலைநிற்கும். ‘கலைக் கழகம்’ என்றால் அது கலந்து போகும் கழகமாக நிலை குலையும்.

‘வேலை கொடு’ என்றால் செய்வதற்கு ஏதேனும் வேலை ( பணி ) கொடு என்றும், ‘வேலக் கொடு’ என்றால் போர்க் கருவியாகிய வேலைக் கொடு என்றும் பொருள்.

இவ்வேறுபாடுகளை எண்ணிப் பாருங்கள் ! 

இனிப் புணர்ச்சிக்குரிய இரு சொற்களுள் முதலில் நிற்பது நிலைமொழி என்றும், அடுத்து வருவது வருமொழி என்றும் வழங்கப்படும்.

நிலைமொழிக்கும் வருமொழிக்கும் இடையில், நிலைமொழியை யொட்டி, க், ச், த், ப்  என்னும் வல்லின ஒற்றெழுத்துக்களைச் சேர்த்து எழுதுதலே வலிமிகுதல் - வல்லெழுத்து மிகுதல் என்று குறிப்பிடப்படுகின்றது.

நிலைமொழியைப் பொறுத்தவரை உயிரெழுத்துக்களையும், மெய்யெழுத்துக்களில் ‘, ர், வ், ழ் என்பனவற்றையும் இறுதியாகக் கொண்ட சொற்கள் இங்கு நமக்குப் போதுமானவை.

வருமொழிகளில் ‘க, கா, கி, கீ ‘ முதலான அவ்வரிசை உயிர்மெய் எழுத்துக்கள் அனைத்தையும் குறிக்கும் ‘ச், த், ப்’ ஆகிய எழுத்துக்களுக்கும் அப்படியே கொள்க. 

நன்றி :

வல்லினம் மிகுதலும் மிகாமையும்

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்

இறையகம்

5 / 731 , நடுவண் புலனாய்வுத் துறைக்காவல் அலுவலர் குடியிருப்பு

( C.B.I. POLICE OFFICER"S COLONY )

மேடவாக்கம், சென்னை - 600 100

விலை : உரு.10/-

 ( இன்னும் வரும் )

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment