பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, September 7, 2014

ஆசைகளும் தீர்வுகளும்! - ஆர். ஹரிஹரன், கோவை.


வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் மாபெரும் மன்னர்கள் நாடு பிடிக்கும் ஆசையாலும், உலகை தன் காலடியில் கிடத்த வேண்டும் என நினைத்தவர்களும் விரைவிலேயே அழிந்து போயுள்ளனர். ரோமாபுரி மாவீரன் அலெக்ஸாண்டர் அளவோடு தன் ராஜ்யத்தை விஸ்தரித்திருந்தால் ரோமாபுரி சரித்திரமே மாறியிருக்கும். மாறாக, பல நாடுகளை அவரது புஜ பலத்தால் வென்று வெற்றிச் சலிப்பு ஏற்பட்டு, இளமையிலேயே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணம் நேர்ந்தது.
அதேபோல, மாவீரன் நெப்போலியன் ஐரோப்பிய நாடுகளை தன் குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை வலிமையினால் மடமடவென மடக்கிப் பிடித்தான். நிமிர்ந்து பார்த்தபோது ரஷ்யா தெரிந்தது. அதையும் பிடித்துவிடலாம் என எண்ணிப் போர் தொடுத்து, ரஷ்யாவின் பாதுகாப்பு மாதமான நவம்பர், டிசம்பர் பனி நாள்களில் பாதிக்கப்பட்டு லட்சம் வீரர்களோடு சென்றவன் சொற்ப வீரர்களோடு நாடு திரும்பியதால் வலுவிழந்து "வாட்டர்லூ' போரில் நெப்போலியனது சரித்திரம் முற்றுப் பெற்றது!
இரண்டாம் உலகப் போரில் அடால்ப் ஹிட்லர், "ஜெர்மானியர்கள் தான் உலகை ஆளப்பிறந்தவர்கள்' என்று ஆணவத்தோடு தன் படைப்பிரிவின் பெரும் பகுதியை சோவியத் யூனியனை பிடிக்க அனுப்பினான். பனியின் கொடுமை, சோவியத் மக்களின் தேசப்பற்று காரணமாக ஜெர்மன் வீரர்கள் பெர்லின் வரை துரத்தியடிக்கப்பட்டனர். ஜெர்மனி கிழக்கு, மேற்கு என்று அப்போதுதான் பிரிக்கப்பட்டது.
ஹிட்லர் மட்டும் தன் ஆதிக்கத்தை ஐரோப்பாவோடு நிறுத்தியிருந்தால், இப்போதைய ஐரோப்பாவின் வரைபடமே இருந்திருக்காது! அமெரிக்கா சூப்பர் பவராகவும், உலக போலீஸ்காரனாகவும், இன்றைக்கு இருந்திருக்குமா? என்றும் எண்ணத் தோன்றுகிறது! இவையெல்லாம் எதைக் காட்டுகிறது, உணர்த்துகிறது என்றால், அதிகமான ஆசைகளை அமலாக்க நினைத்தால் அஸ்தமனம் விரைவில் ஏற்படும் என்றுதான் அர்த்தம்! இதை இன்றைய அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்வது அவசியம்.
தான் பிறந்த பயனை அனுபவிக்க வேண்டுமென்றால், ஒரு முறையாவது மந்திரியாக வேண்டும் என்று பல மாந்தரீக யாகங்களை செய்து பதவி நாற்காலியைப் பிடிக்கின்றனர். அதற்குத் தடையாக சக தோழனே இருந்தால்கூட அவனை அழிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை! சாதிச் சண்டை, மதக் கலவரம் இவைகளை அறவே அழிக்க நினைக்காமல், அதனால் மக்கள் சிந்தும் ரத்தத்தின் துளிகளை ஓட்டாக மாற்றும் தந்திரசாலியாக உள்ளனர்!
"ஏ' முதல் "இசட்' பிரிவு வரை ஏதாவது ஒரு எழுத்து படையினர் தனக்கு பாதுகாப்பளித்தால்தான் சமுதாய அந்தஸ்து என கருதுகின்றனர். காரிலோ ரயிலிலோ செல்லும் இடங்களுக்குகூட ஹெலிகாப்டரில் சென்றால்தான் மதிப்பு உயரும் என கருதி மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் தலைவர்களும் பலர் உள்ளனர்.
"தோட்டத்திலே பாதி கிணறு' இருந்தால் விவசாயம் எப்படி உருப்படும்? திட்டத்திலே பாதி மந்திரியின் பயணச் செலவு என்றிருந்தால் நாடு எப்படி உருப்படும்? அப்படி நம் ஊர் மந்திரிகள் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து மக்கள் சேவையாற்றியிருப்பின், நாம் ஏன் நம்பர் 1 நாடாக திகழவில்லை? அப்படியானால், நெல்லுக்கு பாய வேண்டிய நீர், புல்லுக்கு பாய்கிறது என்று தானே அர்த்தம்!
அதற்காக அரசு பதவிகளின் அதிகாரச் சுவைகளை முற்றிலும் துறக்க வேண்டும் என்று கூறவில்லை! சிவப்பு விளக்கு காரில் ஏறி சைரன் ஒலியோடு வலம் வரும் வேளையில், நாட்டில் உள்ள சிவப்பு விளக்கு பகுதி மகளிருக்கு மாற்று வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்ய நினைக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அடைய போராடும் தலைவர்கள் கன்னியாகுமரி முதல் தில்லி வரை ரயிலில் பொதுமக்கள் பயணிக்கும் பெட்டியில் பயணித்து அதன் சிரமங்களை உணர்ந்து ஆரோக்கியமான, நெரிசலற்ற பயணத்திற்கு முதலில் திட்டமிட வேண்டும்!
சுகாதாரமான தண்ணீர் பாட்டில்களை கிராமங்களுக்கு விநியோகிக்க வேண்டாம்! புழு பூச்சியில்லாத குடிநீரை விநியோகம் செய்தால் போதும்! இளைஞர்களுக்கு மாதம் 50,000/- வருமானமுள்ள வேலை வேண்டாம். விலைவாசிக்கேற்றபடி இளமையில் வறுமை வாட்டாமல் உயிர் வாழ வேலை தந்தால் போதும்! வாடும் விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் சிக்கன் பிரியாணி விருந்தோம்பல் தேவையில்லை! கஞ்சித் தொட்டிகள் பல திறந்து கேவலப்படுத்தாமல் உழைக்கின்ற கைகளுக்கு வேலை கொடுத்தாலே போதும்!
கல்விச் சாலைகளை ஒழுங்குபடுத்தினாலே புண்ணியம் பல கோடி கிட்டும்! இன்றைய தினங்களில் மத்திய, மாநில மந்திரிகள் தங்கள் கட்சியின் முதலமைச்சர்கள், பிரதமர்கள் நீடுழி வாழ அவர்கள் பிறந்த நாளை மண் சோறு சாப்பிடுவதற்காகவும், பல ஆலயங்களில் பூஜைகளும் செய்து அரசு இயந்திரத்தின் நேரங்களை வீணடிக்கிறார்கள். அந்நேரங்களில் மக்கள் நலத் திட்டங்களின் கோப்புகளை படித்து கையொப்பம் இட்டால் மக்களும் வாழ்வார்கள். அவர்களின் ஆட்சிக்கும் புகழ் கிடைக்கும்.
மேற்கண்ட மக்கள் பணிகளை ஓரளவாவது, ஒவ்வொரு மந்திரியும் தனது பதவிக் காலத்தில் செய்திட்டால்தான், தான் வகித்த பதவிக்கு அவர் கொடுக்கும் உண்மையான மரியாதையாகும்! நம் முன்னோர்கள் வெள்ளைக்காரனிடம் குண்டடிபட்டும், தடியடிபட்டும்சிந்திய ரத்தம் இந்தியாவின் பாதி நிலப்பரப்பினை நனைத்திருக்கும்! அத்தியாகிகளை அவ்வப்போது இன்றைய அரசியல் தலைவர்கள் நினைத்துக் கொண்டால் இந்தியா விரைவில் நம்பர் 1 நாடாக மாறி விடும்!
நன்றி : கருத்துக்களம், தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment