பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 2, 2014

எனது பர்மா குறிப்புகள் – செ.முஹம்மது யூனூஸ்

 ‘விடுதலைப் போரில் தான் பெற்ற தியாக வடுக்களை,
அரசியல் சந்தையில் விலை கூறாதவர் முஹம்மது யூனூஸ்’
- அறிஞர் அண்ணா. “
burma cover front
குழந்தைகளுக்குத் தமிழுணர்வை ஊட்டுவதை ஹாங்காங் தமிழர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்! என்று துவங்கி, ஹாங்காங் தமிழர்கள் காட்டும் வழி என்றதொரு கட்டுரை தி இந்து தமிழ் நாளிதழில் அண்மையில் வெளிவந்தது. அக்கட்டுரையின் மூலம் அறிமுகமானவர் மு,இராமனாதன்.
அதன் தொடர்ச்சியாக http://www.muramanathan.com/  வலைப்பூவும் அறிமுகமானது. முஹம்மது யூனூஸ் எழுதிய  எனது பர்மா குறிப்புகள் நூலைப்பற்றியும் தெரிந்து கொள்ளும்  நல்வாய்ப்பும் கிடைத்தது. மு.இராமனாதன் மேற்கொண்ட பல்வேறு தொடர்ந்த அயாரா உழைப்பின் வெளிப்பாடே  பர்மா குறிப்புகள் என்னும் அரியதொரு நினைவுப் பெட்டகம். இந்நூலைனைத் தொகுத்திட தாம் மேற்கொண்ட முயற்சிகளைப் பதிவுகளின் கதையாக்கித் தந்துள்ளார், மு.இராமனாதன். இதனைப் படித்தாலே நூல் முழுவதையும் வாங்கிப் படிக்கவேண்டும் என்ற உள்ளுணர்வு நிச்சயம் ஏற்படும்.
முஹம்மது யூனூஸின் பர்மா நினைவுகள் நூல் வெளியீட்டு விழா, சென்னை, காரைக்குடி, ஹாங்காங் ஆகிய இடங்களில் நடந்துள்ளன.
  மதிப்புரைகள் பின்வரும் பகுதிகளில் வலைத்தள வாசிப்புக்காகக் காத்திருக்கின்றன.

முஹம்மது யூனூஸ் குறித்து மு.இராமனாதன் குறிப்புகளில் சில.

பர்மீயத் தமிழ்ச்சமூகத்தைக் குறித்தும், வரலாற்றைக் குறித்தும் பேசுவதில் யூனூஸ் பாய்க்கு இருந்த ஆர்வம், தனது சொந்த வாழ்க்கையைக் குறித்துப் பேசுவதில் இருக்கவில்லை. நேத்தாஜியின் இந்திய சுதந்திர லீக்கில் அங்கம் வகித்ததைப் போன்ற பொதுவாழ்வு ஈடுபாட்டைப் போலும் அவர் குறைவாகவே சொன்னார்.

 அறிஞர் அண்ணாவின் மீது யூனூஸ் பாய்க்கு அபிமானம் அதிகம். பல நேர்காணல்களில் அவரைப் பற்றிச் சொன்னார். பர்மாவில் அண்ணாவுக்காகக் காத்திருந்ததையும், ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம் அண்ணாவுக்கு அளித்த வரவேற்பைக் குறித்தும் விரிவாகப் பேசினார். அப்போதெல்லாம் யூனூஸ் பாயின் நண்பர் மூலம் 13 ஆண்டுகளுக்கு முன்னால் நான் கேள்விப்பட்ட அறிஞர் அண்ணாவின் புகழுரையைக் குறித்து ஏதேனும் சொல்வார் என்று காத்திருந்தேன். பலனில்லை. கடைசியில் ஒரு நாள், ‘அண்ணா  உங்களைப் பற்றி இன்ன விதமாகச் சொன்னாராமே’ என்று கேட்டேன். சற் பெரிய மனிதர். மற்றவர்களை உயர்த்திச் சொல்வது அவரது பண்பு. அதனால் அந்தப் புகழ்ச்சிக்கு நாம் தகுதியானவர்கள்றே நாணத்துடன் தலையசைத்தார். ‘ஏன் இதைப் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை?’ என்று கேட்டேன்’. ‘அண்ணா என்று எண்ணிக் கொள்ளக் கூடாது’ என்றார். பதினாயிரம் பாட்டெழுதிவிட்டு,  ‘ஆசை பற்றி அறையுயலுற்றேன்’ என்று சொன்னவனின் மரபில் வந்தவர் யூனூஸ் பாய். எளிமையும், தன்னடக்கமும் அவரது பண்பு நலன்கள். அவரை அறிந்தவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நூலை வாசிக்கிறவர்களுக்கும் அது புலப்படும்.

தன்முகம் காட்டாத் தகைமையாளராகத் திகழும் முஹம்மது யூனூஸ் குறித்த சிந்தனையை 68-வது இந்திய சுதந்திரத் திருநாளில் விதைக்கும் வாய்ப்பாக  இன்றையப் பதிவு குறித்து பெருமகிழ்வு கொள்கின்றோம். இத்தகைய சிறப்பனதொரு வாய்ப்பை உருவாக்கித்தந்த மு.இராமனாதன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

பதிவுகளின் கதை

மு இராமனாதன்ஹாங்காங் இந்தியர்களால் ‘யூனூஸ் பாய்’ என்று அழைக்கப்படும் முஹம்மது யூனூஸ் அவர்களை நான் முதன்முதலாக சந்தித்தது 13 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பொது நிகழ்ச்சியில். நான் ஹாங்காங் போய் சில மாதங்களே ஆகியிருந்தன. யூனூஸ் பாயின் நண்பர் ஒருவர் எனக்குப் பழக்கமாகியிருந்தார்.  நிகழ்ச்சியின் போது நண்பர் சொன்னார்: “அறிஞர் அண்ணா ஹாங்காங் வந்திருந்தபோது, யூனூஸ் பாயைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா? ‘விடுதலைப் போரில் தான் பெற்ற தியாக வடுக்களை, அரசியல் சந்தையில் விலை கூறாதவர் முஹம்மது யூனூஸ்’ என்றார்.” 

பார்த்தவுடனே மதிப்பு ஏற்படுத்தும் தோற்றம் யூனூஸ் பாயுடையது. வாய்ப்புக் கிடைக்கும்போது, அவரிடம் இதைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பிறகு மறந்து போனேன்.

ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழக நிகழ்ச்சிகளில் யூனூஸ் பாய் கலந்து கொள்வார். சில நிகழ்ச்சிகளில் பேசவும் செய்வார். எனில் அவரை எமக்கு நெருக்கமாக்கியது இலக்கிய வட்டக் கூட்டங்களே. டிசம்பர் 2001-இல் இலக்கிய வட்டத்தை(www.ilakkyavattam.com) ஆரம்பித்தோம். எல்லாக் கூட்டங்களிலும் பாய் கலந்து கொள்வார்; நிறைவுரை ஆற்றுவார்; பேச்சாளர்களை உற்சாகப்படுத்துவார். அந்த உரைகள் அவருள் தளும்பி நிற்கும் சமூக அக்கறையையும் இலக்கிய ஈடுபாட்டையும் எமக்குப் புலப்படுத்தின. ஜனவரி 2003-இல் ‘புலம் பெயர் வாழ்க்கை’ எனும் பொருளில் நடந்த கூட்டத்தில் சுமார் ஒரு மணிநேரம் பர்மீயத் தமிழர்களின் கலை, கலாச்சாரம், சமயம் முதலியவை குறித்துப் பேசினார். அவர் பேசியவை எதுவும் நாங்கள் முன்னெப்போதும் கேட்டிராதவை. அப்போதுதான் இதை எழுத்தில் பதிவு செய்து வைக்க வேண்டும் என்று முதன்முதலாகத் தோன்றியது. அதற்குப் பிறகு நான் அவரை இரண்டு முறை சந்திக்கவும் செய்தேன்.

புதுவெள்ளம் போல் சுழித்துக் கொண்டு ஓடியது அவரது பேச்சு. எட்டாம் எட்வர்ட் முடி துறந்தபோது பள்ளிக்கூடத்தில் உலவிய இட்டுக்
கட்டப்பட்ட கதைகளைச் சொன்னார். பர்மாவை பீதியும் அச்சமும் கவ்வியிருந்த ஒரு போர்க்கால இரவில், கருதறுக்கப்பட்ட நெல் வயலில் வைக்கோலைப் போர்த்திப் படுத்திருந்த அனுபவத்தை விவரித்தார். நேத்தாஜியின் பேச்சுகளில் மிகுந்திருக்கும் எழுச்சியை விளக்கினார்.  பிறகு கோவலன், கட்டபொம்மன் நாடகங்களை எப்படி மக்கள் ஒன்றிப் போய்ப் பார்த்தார்கள் என்று  சொன்னார். ‘சகுந்தலை’ படத்தில் கன்வ ரிஷி மகளுக்கு விடை கொடுத்து அனுப்பும் பாடலை உருக்கமாகப் பாடினார். தியாகராஜ பாகவதருக்கும் செருகளத்தூர் சாமாவிற்கும் ஒரு படத்தில் பாடல் மூலம் நடைபெறும் உரையாடலை விவரித்தார். கால வரிசையோ பொருள் தொடர்ச்சியோ இல்லாத அந்தப் பேச்சை நான் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். எனில் இதை எப்படித் தொகுப்பது? தன் வரலாறாகவா, வாழ்க்கை வரலாறாகவா, தேசத்தின் கதையாகவா, சமூகத்தின் கதையாகவா?. குழப்பமாகவும் மலைப்பாகவும் இருந்தது. சோம்பலும் வந்து மூடிக்கொண்டது. என்றாலும் இதை ஆவணப்படுத்த வெண்டும்  என்கிற எண்ணம் மட்டும் கனன்று கொண்டே இருந்தது.

நவம்பர் 2007-இல் நடந்த இலக்கிய வட்டக் கூட்டத்தில் ‘எழுதப்படாத பர்மா குறிப்புகள்’ என்ற பொருளில் பேசினார் யூனூஸ் பாய். பேச்சாளரைப் பற்றியும் உரையைப் பற்றியுமான அறிவிப்பு திண்ணை.காமில் வெளியானது. அதை வாசித்த ‘காலச்சுவடு’ கண்ணன் உரையின் ஒலிப்பதிவை அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்டிருந்தார். இந்த உரையை மட்டுமல்ல, அவரது அனுபவங்கள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கவிருக்கிறோம் என்று பதில் எழுதினேன். ஏதோ தைரியத்தில்தான் அப்படிச் சொன்னேன்.

யூனூஸ் பாயின் அந்தப் பேச்சும் மறக்க முடியாதது. இந்தியர்கள் பர்மாவிற்குப் போனதில் தொடங்கி அவர்கள் வெளியேற்றம் வரையிலான அந்த உரைக்குள் உலகப்போர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, விடுதலை இயக்கம், ராணுவ ஆட்சி என்று எல்லாவற்றையும் தொட்டுச் சென்றார். இனிப் பொறுப்பதில்லை என்று முடிவு செய்தேன். அப்போதும் இதை எப்படித் தொகுப்பது என்பதில் எனக்குத் தெளிவில்லாமல் இருந்தது.

அவ்வமயம் நண்பர் எம்.ஸ்ரீதரன் (‘பயணி’) பெய்ஜிங் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரைக் கேட்டேன். அவரது ஆலோசனை எனக்கு வாராது போல் வந்த மாமணியாய் அமைந்தது. அவர் சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல் வரிசையை வகைமாதிரியாய் வைத்துக் கொள்ளலாம் என்றார். ஜீவா, கிருஷ்ணன் நம்பி, தி.ஜானகிராமன், க.நா.சு போன்ற இலக்கிய ஆளுமைகளுடனான தனது அனுபவங்களை இந்த நூல்களில் சுந்தர ராமசாமி நினைவு கூர்கிறார். அரவிந்தன் அவற்றைத் தொகுத்திருந்தார். சு.ரா. வின் நினைவிலிருந்து பெருகும் அனுபவங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, எழுதப்பட்டு, பின் தொகுக்கப்பட்டு நூலாகியிருந்தன. இந்த நூல்களை வாசித்ததும் எனக்கு உற்சாகமேற்பட்டது. இதைப் போலவே யூனூஸ் பாயின் நினைவுகளினூடே விரியும் பர்மீய அனுபவங்களை ஒலிப்பதிவு செய்யலாம், நண்பர்களின் உதவியுடன் தட்டச்சு செய்யலாம், பிறகு எடிட் பண்ண வேண்டியதுதான், நினைவோடை என்பதால் அவை எந்த வரிசைக் கிரமத்திலும் இருக்க வேண்டுமென்பதில்லை. அப்படி நினைத்தேன்.

நவம்பர் 2007-இல் ஒரு ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் நண்பர்கள் திரு.ராஜேஷ் ஜெயராமன், திருமதி.ஜெய்னப் கதீஜா, திருமதி.கவிதா குமார், திரு.காழி அலாவுதீன், திரு.எஸ்.பிரசாத், திரு.அ.சுவாமிநாதன், டாக்டர்.கீதா பாரதி, திரு.அ.செந்தில்குமார், திரு.கே.ஜி.ஸ்ரீனிவாசன் மற்றும் திரு.கே.எஸ். வெங்கட்ராமன் ஆகியோர் கூடி ஆலோசித்தோம். அனைவரும் உற்சாகப்படுத்தினர். ஒலிப்பதிவைக் கேட்டு தட்டச்சு செய்துதர முன்வந்தனர். குழுவாக உரையாட ஒரு கூகிள் மின்னஞ்சல் குழுமம் அமைத்தோம். வெளியூர்களிலிருந்த திரு.எம்.ஸ்ரீதரன், திருமதி.எஸ்.வைதேஹி மற்றும் திரு.எஸ்.நரசிம்மன் ஆகியோரும் குழுமத்தில் இணைந்தனர். நேர்காணல்களைத் தட்டச்சு செய்தபின் உறுப்பினர்கள் அனைவரும் வாசிக்கத்தக்க விதத்தில் கூகிள் ஆவணங்களில் அவற்றைப் பகிர்ந்து கொள்வது என்றும் முடிவானது.

உடனடியாக நேர்காணல்களைத் துவங்கினேன். அவற்றை இலக்கக் கோப்புகளாகப் பதிவு செய்து, கணினியில் பதிவிறக்கிக் கொண்டேன். அவற்றை மீண்டும் ஒருமுறை கேட்டு, ஒலிப்பதிவுக் கோப்புகளை எடிட் செய்து, நண்பர்களுக்குப் பகிர்ந்தளித்தேன். ஒற்றை விரலில் தட்டச்சு செய்யும் என் கணினித் திறனை நண்பர்கள் அறிவர். ஆதலால் மேற்படி எடிட்டிங்கிற்காக, பச்சைப்பிள்ளை போலும் கையாளத்தக்கதான ஒரு மென்பொருளை எனக்கு அனுப்பி வைத்தனர். பாகங்களாகப் பிரித்த பின்னரும் கோப்புகள் அளவில் பெரியதாக இருந்தன. இணையதளங்கள் மூலமாக இவற்றை அனுப்பி வைத்தேன். நண்பர்கள் அவற்றைப் பதிவிறக்கிக் கொண்டு, கூகிள் ஆவணங்களில் தட்டச்சு செய்து குழுமத்தில் பகிர்ந்து கொண்டனர். இவை குறித்த உரையாடலும் குழுமத்தில் நடைபெறலாயிற்று. வார இறுதிகளில் நானும் நேர்காணல்களைத் தொடர்ந்தேன். எல்லாம் நன்றாகவே நடந்தது.

சரி, தொகுப்பு வேலையையும் தொடங்கலாம் என்று நண்பர்கள் எழுதியவைகளை வாசிக்கலானேன். சிலர் அவர் சொன்னபடிக்கே எழுதியிருந்தனர். சிலர் வாக்கிய அமைப்பை மாற்றியிருந்தனர். ஒருவர் ஜாதியைப் பற்றி யூனூஸ் பாய் சொல்லியிருந்த குறிப்புகளை நீக்கியிருந்தார். ஒருவர் அவரது கருத்து நீளமாக இருக்கிறது என்று கருதி வெட்டிக் குறைத்திருந்தார். உறுப்பினர்கள் அவரவர்க்குச் சரி என்று பட்டதையே செய்திருந்தனர். ஆனால் இது இவ்விதம் தொடரலாகாது என்று கருதி, உறுப்பினர்கள் அவரது நடையையோ உள்ளடக்கத்தையோ  நீளத்தையோ மாற்றலாகாது என்று குழுமத்தில் தெரிவித்தேன். சில உறுப்பினர்களிடம் அவர்கள் எழுதிய பகுதிகளை மீண்டும் எழுத வேண்டும் என்றும் கோரினேன். இது சிலரை அயர்வடையச் செய்தது. ஹாங்காங்கின் பணி அழுத்தமும் சேர்ந்து கொண்டது. திட்டத்தின் முன்னேற்றத்தில் தொய்வு ஏற்பட்டது. இதற்கு என் ஒருங்கிணைப்பில் இருந்த குறைபாடுகளும் காரணம்.

இன்னொரு பிரச்சனையும் இருந்தது. யூனூஸ் பாய் இயன்றவரை ஒவ்வொரு அமர்விலும் ஒரே பொருளைக் குறித்துத்தான் பேசினார். எனில் வேறொரு அமர்வில் பிறிதொரு பொருளைக் குறித்துப் பேசும்போது, முந்தைய பொருளையோ காலத்தையோ சார்ந்த கருத்துக்களையும் சொன்னார். அவை முக்கியமானவையாகவும் இருந்தன. ஆகவே இவற்றை பொருள்வாரியாகத் தொகுப்பதுதான் வாசகனுக்குச் செய்யும் நீதியாக இருக்க முடியும் என்று தோன்றியது. நூலைப் பல இயல்களாகப் பிரித்துக் கொண்டு, அவர் பல்வேறு அமர்வுகளில் கூறியவற்றை குறிப்பிட்ட இயல்களில் பொருத்த வேண்டும் என்பது புலப்பட்டது.

இந்த இடத்தில் ஒன்று புரிந்தது. இந்தத் திட்டத்தில் பங்குபெறும் யாரும் அனுபவமிக்க எழுத்தாளர்கள் அல்லர். இத்திட்டத்தைக் குறித்தும், இதில் உள்ள பணியைக் குறித்துமான முழுமையான பார்வையின்றி நான் இதில் இறங்கியிருப்பதும் புரிந்தது. இது காலதாமதத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அதைரியப்படாமல் நேர்காணல்களைத் தொடர்ந்தேன். திட்டத்தில் நம்பிக்கை கொண்டிருந்த நண்பர்களும் தொடர்ந்து உதவினர்.

நவம்பர் 2007 முதல் ஜூலை 2009 வரையிலான கால அளவில் சுமார் 20 அமர்வுகளில் யூனூஸ் பாயை நேர்கண்டேன். ஒவ்வொரு அமர்வும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை நீண்டது. அவரும் கால தாமதத்தைப் பொருட்படுத்தாது முதல்முறை காட்டிய அதே உற்சாகத்தோடு ஒவ்வொரு முறையும் பேசினார். தவிர, விளக்கங்கள் கேட்பதற்காக பல முறை தொலைபேசியிலும் தொடர்பு கொண்டேன். அப்போதும் பல முத்துகள் கிட்டின.

இந்தக் குறிப்புகளில் ஆண்டுகள், மாதங்கள், பெயர்கள், இடங்கள் எல்லாம் இடம் பெறுகின்றன. அவை இயல்பாக அவரது பேச்சில் வெளியாயின. நேர்காணல்களின் போது ஒரு துண்டுக் காகிதம் போலும் அவர் கையில் வைத்துக் கொண்டதில்லை.

இந்த நூலில் வாசிப்பு வசதி கருதி பலவற்றை நான் முன்பின்னாக மாற்றியமைத்திருக்கிறேன். ஒரே பத்தியில் இடம்பெறும் சில கருத்துகள், அவர் தனித்தனி அமர்வுகளில் சொன்னவையாக இருக்கக் கூடும். இதற்காக, பல பகுதிகளை மீள எடுத்து எழுதியிருக்கிறேன். எனில் இயன்றவரை இறுதி வடிவம் அவரது வாய்மொழிக்கு வெகு நெருக்கமாக இருக்குமாறு அமைய முயற்சித்திருக்கிறேன்.  ஏனெனில், யூனூஸ் பாயின் தமிழ்நடை செழுமையானது. சாதாரண உரையாடல்களில்கூட இயன்றவரை தமிழ்ச் சொற்களையே அவர் பயன்படுத்துவார். அவரது தமிழில், நேர்ப் பேச்சிற்கும் மேடைப் பேச்சிற்குமான இடைவெளி குறைவு. தொகுக்கப்பட்டபின் கரட்டு வடிவங்களைப் படித்து யூனூஸ் பாயும் பல திருத்தங்களைச் செய்தார்.

பர்மீயத் தமிழ்ச்சமூகத்தைக் குறித்தும், வரலாற்றைக் குறித்தும் பேசுவதில் யூனூஸ் பாய்க்கு இருந்த ஆர்வம், தனது சொந்த வாழ்க்கையைக் குறித்துப் பேசுவதில் இருக்கவில்லை. நேத்தாஜியின் இந்திய சுதந்திர லீக்கில் அங்கம் வகித்ததைப் போன்ற பொதுவாழ்வு ஈடுபாட்டைப் போலும் அவர் குறைவாகவே சொன்னார்.

பர்மாவிலிருந்து வந்தபோது 40 ஆண்டு வாழ்வின் நினைவாக அவர் கொண்டு வந்தவை குறைவு. ஆகவே நூலில் வெகு சொற்பமான படங்களே இடம்பெறுகின்றன. அவற்றை தேடி எடுத்தபோது ஒரு படம் கிடைத்தது. பர்மாத் தேக்கினால் செய்யப்பட்ட ஒரு பெரிய வாயிற்கதவின் முன்னால் நன்றாக உடுத்திய பெரிய மனிதர்கள் இரண்டு வரிசைகளில் நிற்கிற ஒரு சம்பிரதாயமான படம் அது. பர்மீயர்கள் மத்தியில் இளைஞரான யூனூஸ் பாயும் நிற்கிறார். ‘இது என்ன படம்?’ என்று  கேட்டேன். ‘ரங்கூன் நகராட்சி உறுப்பினர்களின் படம். இதோ நடுநாயகமாக அமர்ந்திருப்பவர்தான் மேயர்’ என்றார் யூனூஸ் பாய்.

‘நீங்கள் எப்படி இதில் நிற்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘நான் நகராட்சி உறுப்பினராக இருந்தேன்’ என்றார்.

‘தேர்தலில் போட்டியிட்டீர்களா?’.

‘இல்லை, ஒரு வெள்ள நிவாரணப் பணியில் எல்லோரையும் போல நானும் என்னாலானதைச் செய்து கொண்டிருந்தேன். பார்வையிட வந்த மேயருக்கு ஏனோ என்னைப் பிடித்துப் போய்விட்டது. ஓராண்டு காலம் நகராட்சியின் நியமன உறுப்பினராக்கி விட்டார்’.

‘இதைப் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே, ஐயா’

‘இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது தம்பி, உறுப்பினராக நான் ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை. மேலும், இதை வாசிக்கிறவர்களுக்கு இதனால் என்ன பலன் ஏற்படும்?’  என்றார்.

இந்த இடத்தில் இன்னொரு உரையாடலையும் சுட்ட விரும்புகிறேன்.  அறிஞர் அண்ணாவின் மீது யூனூஸ் பாய்க்கு அபிமானம் அதிகம். பல நேர்காணல்களில் அவரைப் பற்றிச் சொன்னார். பர்மாவில் அண்ணாவுக்காகக் காத்திருந்ததையும், ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம் அண்ணாவுக்கு அளித்த வரவேற்பைக் குறித்தும் விரிவாகப் பேசினார். அப்போதெல்லாம் யூனூஸ் பாயின் நண்பர் மூலம் 13 ஆண்டுகளுக்கு முன்னால் நான் கேள்விப்பட்ட அறிஞர் அண்ணாவின் புகழுரையைக் குறித்து ஏதேனும் சொல்வார் என்று காத்திருந்தேன். பலனில்லை. கடைசியில் ஒரு நாள், ‘அண்ணா  உங்களைப் பற்றி இன்ன விதமாகச் சொன்னாராமே’ என்று கேட்டேன். சற்றே நாணத்துடன் தலையசைத்தார். ‘ஏன் இதைப் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை?’ என்று கேட்டேன்’. ‘அண்ணா பெரிய மனிதர். மற்றவர்களை உயர்த்திச் சொல்வது அவரது பண்பு. அதனால் அந்தப் புகழ்ச்சிக்கு நாம் தகுதியானவர்கள் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது’ என்றார். பதினாயிரம் பாட்டெழுதிவிட்டு,  ‘ஆசை பற்றி அறையுயலுற்றேன்’ என்று சொன்னவனின் மரபில் வந்தவர் யூனூஸ் பாய். எளிமையும், தன்னடக்கமும் அவரது பண்பு நலன்கள். அவரை அறிந்தவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நூலை வாசிக்கிறவர்களுக்கும் அது புலப்படும்.

அவர் சொன்னவை குறைவு. அதிலும் குறைவு நூலில் இடம் பெறுபவை. அதீதக் காலதாமதமின்றி நூலைக் கொணர வேண்டும் என்பதால் ஒரு கட்டத்தில் இதை முடிக்க வேண்டியதாயிற்று. இதற்கு நானே பொறுப்பு.

ஒலிப்பதிவுகளையும், அவற்றிலிருந்து பெயர்த்து எழுதிய குறிப்புகளையும் தொடர்ந்து எழுதித் தந்தவர்கள் திரு. ராஜேஷ் ஜெயராமன், திருமதி.ஜெய்னப் கதீஜா மற்றும் திருமதி. கவிதா குமார். இவர்களின் உதவியின்றி இந்நூல் உருவாகியிருக்க முடியாது. தொடர்ந்து இத்திட்டத்திற்கு உதவி புரிந்தவர் திரு.காழி அலாவுதீன். பதிவுகளை எழுதிய மற்றவர்கள்: திருமதி. கீதா பாரதி, திரு.அ.செந்தில்குமார், திரு.எஸ்.பிரசாத், திரு.கே.ஜி.ஸ்ரீனிவாசன், திருமதி.எஸ்.வைதேஹி மற்றும் திரு.எஸ்.நரசிம்மன். யூனூஸ் பாயின் சமீபத்திய படங்களை எடுத்தவர் திரு.அ.சுவாமிநாதன். தொகுக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும் படித்துக் கருத்துக்களும், திருத்தங்களும் சொன்னவர் திரு.எம்.ஸ்ரீதரன்.

யூனூஸ் பாயின் துணைவியாரை நான் அறிவேன். எனில் இந்நூலுக்காக நேர்காணல்கள் நிகழ்த்தியபோது அவரது விருந்தோம்பலில் திளைக்கிற பேறு எனக்குக் கிட்டவில்லை. எனில் எல்லாச் சந்திப்புகளின்போதும் அக்குறையை நான் உணராதவாறு என்னை உபசரித்தவர்கள் யூனூஸ் பாயின் மகன் நாஸீர் மற்றும் அவரது உதவியாளர் நூகு ஆகியோர். என்னைச் சந்திக்கிற போதெல்லாம் இந்த நூலைக் குறித்து விசாரித்து என்னை உற்சாகப்படுத்தியவர்கள் திரு.ஜே.வி.ரமணி மற்றும் திரு.எஸ்.எம்.உஸைர்.

நூலின் பணி தொடங்கியதிலிருந்து ஊக்கமூட்டி வருபவர் ‘காலச்சுவடு’ கண்ணன். பிரதி நிறைவுற்றதும் காலச்சுவடிற்காக  அதைப் படித்துப் பார்த்தவர் கவிஞர்.சுகுமாரன். அவரது மனம் திறந்த பாராட்டைக் கேட்டபோது நிறைவாக இருந்தது. நூல் உருவாக்கத்தில் உதவியவர் காலச்சுவடு அலுவலக மேலாளர் எஸ்.நாகம். நூலைச் சிறப்பாக வடிவமைத்தவர் கீழ்வேளூர் பா.ராமநாதன். நூலுக்கு ஏற்றமாதிரி பொருத்தமாக அட்டைப்படம் அமைத்தவர் சந்தோஷ்.

இவர்கள் அனைவரையும் இப்போது நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

இந்நூலின் நிமித்தம் யூனூஸ் பாயோடு பலமுறை உரையாடச் சந்தர்ப்பம் வாய்த்ததிலும், அவரது குறிப்புகளை இப்போது நூலாகக் கொண்டுவருவதிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் குறிப்புகளுக்கு நல்லுலகில் வரவேற்பிருக்கும் என்று நம்புகிறேன். இனியும் பேசுவதற்கு யூனூஸ் பாய் தயாராயிருக்கிறார். எழுதித்தர நண்பர்களும். இந்நூலின் இரண்டாம் பகுதியைக் கொண்டு வரும் விருப்பமும் இருக்கிறது.
[நூல்: செ. முஹம்மது யூனூஸின் "எனது பர்மா குறிப்புகள்", தொகுப்பு: மு. இராமனாதன், பிரசுரம்: காலச்சுவடு பதிப்பகம், 669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001, தொலைபேசி: 91-4652-278525, தொலைநகல்: 91-4652-231160, மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in பக்கங்கள்: 220, விலை: ரூ. 165/=]
 http://www.muramanathan.com/burma/intro

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment