பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 2, 2014

உலக மகாகவியின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்ட சரித்திரம்

மகாகவி பாரதியின் பாடல்கள் பொதுஉடைமை ஆக்கப்படவேண்டும் என்று உரிமைக்குரல் எழுப்பவேண்டிய அவசியம் 1940-களின் பிற்பகுதியில் ஏற்பட்டது. டி.கே.சண்முகம் சகோதரர்கள், தங்களது பில்கணன் நாடகத்தைத் திரைப்படமாக்கினர். பாரதியின் பாடல்களைத் திரைப்படத்தில் இடம்பெறச் செய்திருந்தினர்.அப்பொழுது ஏவி.மெய்யப்ப செட்டியார், பாரதி படல்களின் உரிமையளாராக இருந்தார்.சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுவக்ககீல் மூலம் அறிிவித்தார்.
பாரதியின் தம்பி சின்னசாமி ஐயர்; “பாரதி பிரசுராலயம்” மூலமாகப் பாரதியின் பாடல்களைப் பிரசுரித்து வந்தார். பாரதி பிராசுராலயம் பாரதி பாடல்களை குஜராத்தி சேட் ஒருவருக்கு விற்றிருந்தது. அவரிடமிருந்து ஏவி மெய்யப்ப செட்டியார் அதிக விலைக்குப் பாரதி பாடல்களைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்றுக் கொண்டார். இசைத்தட்டுகளிலும், தமது திரைப்படங்களிலும் பயன்படுத்தி வந்தார். எனவேதான் மேற்படி அறிவிப்பு நிகழ்ந்தது.
தோழர்.ப.ஜீவானந்தம், பாரதியின் பாடல்கள் பொதுவுடைமையாக்கப்பட வேண்டும் என்று எழுதியும் பேசியும் வந்த கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமானது.
டி.கே.சண்முகம் முயற்சியில்”பாரதி விடுதலைக் கழகம்” அமைக்கப்பட்டது. அதன் தலைவர் எழுத்தாளர் நாரணதுரைக்கண்ணன்;
செயலாளர்கள், எழுத்தாளர்கள் திருலோக சீதாராம், வல்லிக்கண்ணன்; துணைத்தலைவர் பேராசிரியர் அ.சீனிவாசராகவன். முக்கிய எழுத்தாளர்கள். அனைவரும் உறுப்பினர்கள். கழகத்தின் செயல்திறனால், அனைத்து நாளிதழ்களும், முக்கியப் பத்திரிக்கைகளும் பாரதியின் பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று ஆதரவுக் குரல் கொடுத்தன.
அப்போது, ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் தமிழக முதல்வராக இருந்தார். அவர், பாரதியார் மனைவியிடம், ஒப்புதல் கடிதம் வாங்கிவரும்படி பாரதி விடுதலைக் கழகத் தலைவர்களிடம் கூறினார்.
நாரண துரைக்கண்ணன், அ.சீனிவசராகவன், வல்லிக்கண்ணன், டி.கே.சண்முகம், திருச்சி வனொலியில் பணியாற்றிவந்த எழுத்தாளர், கே.பி.கணபதி ஆகிய ஐவர் குழுவினர் நெல்லை சென்றனர்.பாரதியின் மனைவி செல்லம்மாளையும், மகள் தங்கம்மாவையும் சந்தித்தனர். சம்மதக் கடிதம் வாங்கினர். பாரதி பிரசுராலயத்திடமிருந்தும் இசைவுக்கடிதம் வாங்கப்பட்டது. இம்முயற்சியில், அப்போதைய நெல்லை நகரசபைத் தலைவராகவும், பி.எஸ். இராமையாவுக்குப்பின் “மணிக்கொடி” இலக்கியப் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவருமான ப.இராமசாமியும் துணை நின்றார்.இதுசமயம், பாரதியின் வரலாற்று ஆசிரியர் வ.ரா. என்கிற வ.ராமசாமியும் பாரதி விடுதலைக் கழகத்தில் சேர்ந்து கொண்டார். அதன்பிறகு, அவர் தலைவராகவும், நாரண துரைக்கண்ணன் துணைத் தலைவராகவும் செயலாற்றினர். பாரதி விடுதலைக் கழகக் குழுவினர் வாங்கிவந்த இசைவுக் கடிதங்கள் முதல்வர் ஓமந்தூரரிடம் கொடுக்கப்பட்டன. முதல்வர் இராமசாமி ரெட்டியார்,ஏவி மெய்யப்ப செட்டியாரை அழைத்துப் பேசினார்.செட்டியார்
மனமுவந்து பாரதியார் பாடல்களின் உரிமையை அரசுக்கு அளித்தார். பணம் எதுவும் வாங்கவில்லை
தமிழக முதல்வர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அரசும் பாரதி பாடல்களை நாட்டுடைமையாக்கியது. பாரதியார் குடும்பத்தினருக்கு அரசு ஒரு தொகையும் வழங்கியது. வெற்றியிவிழாவினைப் பாரதி விடுதலைக் கழகம் உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடத்தி மகிழ்ந்தது.பத்திரிக்கைகளும் பாராட்டின.
குறிக்கோள்-நோக்கம் நிறைவேறிவிட்டநிலையில் அத்துடன் பாரதி விடுதலைக் கழகம் கலைக்கப்பட்டது. இந்த தகவலைத் தருபவர், சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர், வல்லிக்கண்ணன்!
உதவியநூல்
“சிறியன சிந்தியாதான்,வல்லிக்கண்ணன்”  

தொகுப்பாசிரியர்:அ.நா.பாலகிருஷ்ணன்
வெளியீடு
ஞானியாரடிகள் தமிழ் மன்றம், 

7, நாகமணி தெரு, 

சிந்தாதிரிப்பேட்டை, 

சென்னை-600002
விற்பனை உரிமை:
விஜயா பதிப்பகம், 

20, இராஜவீதி, 

கோயமுத்தூர், . 

641001 (டிசம்பர்-௨000)

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment