பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, September 17, 2014

இதுதான் என்னோட கதை


நான்தான் மாயா பஜார் பேசுறேன். ஒரு பேப்பர் எப்படிப் பேசும்னு பாக்கறீங்களா? நீங்கள்லாம் படிச்சுக்கிட்டு இருக்கிற 'தி இந்து' நாளிதழோட குழந்தை நான். இந்த நாளிதழ் தொடங்கி ஒரு வருஷம் ஆச்சு இல்லையா, அதுதான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்.

ஒவ்வொரு வாரமும் நான் எப்படிப் பிறக்குறேங்கிறத இந்த நேரத்துல சொன்னா பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு.

ஒவ்வொரு நாள் காலைலேயும் தேநீரோ, காப்பியோ குடிக்கும்போது கூடவே சுடச்சுட வந்திருக்கும் செய்திகளையும் படிக்கும் ஆர்வம் நிறைய பெரியவர்களுக்கும், சின்னஞ்சிறுசுகள் சிலருக்கும் இருக்கிறது. நம்மைச் சுத்தி என்ன நடக்குது, உலகத்தில என்னவெல்லாம் நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்தின் வெளிப்பாடுன்னு இதைச் சொல்லலாம். நான் வராத நாட்கள்ல "காலையில பேப்பர் வந்துருச்சா, ஏன் இன்னும் வரலைங்கிற" குரலை அடிக்கடி கேட்கலாம். காலைல ஆகிடுச்சுங்கிறத சொல்ற விஷயங்கள்ல நானும் ஒண்ணு.

அது ஒரு தனி உலகம்

ஒரு பேப்பருக்குச் செய்தி, அதாவது எழுத்துதான் அடிப்படை. பேப்பரில் பார்க்கும் வார்த்தைகள், வரிகள், பத்திகள்னு எழுத்து சார்ந்த எல்லாமே கம்ப்யூட்டரில் டைப் அடிக்கப்படுது. முன்பெல்லாம் கையில் எழுதி, அதைப் பார்த்து எழுத்தை அச்சுக்கோத்து பின்னர் அச்சடித்துக் கொண்டிருந்தார்கள்.
நவீனத் தொழில்நுட்பம் இந்தச் சிக்கல்களைக் குறைத்து எளிதாக்கிவிட்டது. கம்ப்யூட்டர் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் ஒரு செய்தியோ, கதையோ, கட்டுரையோ அடித்து அனுப்பப்பட்டாலும், அடுத்த விநாடி அது உரிய இடத்தைச் சென்று சேர்ந்துவிடும்.

இந்த எழுத்தை ஒரு செய்தியாளரோ, உதவி ஆசிரியரோ, எழுத்தாளரோ சுயமா எழுதுறாங்க, இல்லேன்னா ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கிறாங்க. எழுதுறதுக்காக ஆட்களை, நிகழ்ச்சிகளை, சம்பவங்களை நேர்ல பார்க்கிறாங்க. முக்கியமானவர்களைப் பேட்டி எடுக்குறாங்க. புத்தகங்களைப் படிக்கிறாங்க. நிறைய தகவல்களைச் சேகரிக்கிறாங்க. பிறகுதான் எழுதிக் கொடுக்குறாங்க.

அழகுபடுத்துதல்

இந்தக் கட்டுரை அல்லது செய்தி ஒரு நாளிதழின் செய்தி ஆசிரியருக்கோ, தலைமைப் பொறுப்பில் உள்ள ஆசிரியருக்கோ போகிறது. பிறகு குறிப்பிட்ட பக்கத்துக்குப் பொறுப்பாக இருக்கும் உதவி ஆசிரியருக்குப் போகிறது. உதாரணத்துக்குச் சொல்லணும்னா இந்த மாயா பஜாரை தயாரிக்கும் பொறுப்பில் ஒரு உதவி ஆசிரியர் இருக்கார். அவர் விஷயங்களைச் சரிபார்த்து, சுவாரசியப்படுத்தி, மேம்படுத்திப் பக்கத்தை வடிவமைப்பவருக்கு அனுப்புகிறார்.

உதவி ஆசிரியரும் வடிவமைப்பாளரும் சேர்ந்து ஒரு கட்டுரை-செய்திக்குப் பொருத்தமான ஒளிப்படம், ஓவியம், கணினி ஓவியம் போன்றவற்றை சேர்க்குறாங்க. பக்கத்தை வடிவமைப்பதும் கம்ப்யூட்டரில்தான் நடக்கிறது. நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் பக்கங்களை வடிவமைப்பதற்கு என்று தனிக் கணினி மென்பொருட்கள் இருக்கின்றன.

மெருகேற்றுதல்

பக்கம் வடிவமைக்கப்பட்ட பின் கட்டுரை தவறின்றி, சரியாக வந்திருக்கிறதா என்று படித்துப் பார்ப்பார்கள். படங்கள் சரியாக வந்திருக்கின்றனவா, ஏதாவது தவறாகவோ, விலகியோ, உறுத்தலாகவோ இருக்கிறதா என்று பிழை திருத்துபவரும் ஆசிரியர் குழுவும் வடிவமைப்பாளரும் சரி பார்ப்பார்கள். எல்லாம் முடிந்த பிறகு. அச்சுக்கு அனுப்பப்படும்.

அந்தக் காலத்தில் செய்தியைத் தனியாகவும், படத்தைத் தனியாகவும் எடுத்துப் பக்கத்துப் பக்கத்தில் வைத்து ஒட்டி, நெகட்டிவ் எடுத்து அச்சிட்டார்கள். இப்போது முழுக்க முழுக்க வண்ணத்தில் வடிவமைத்து அச்சிடுவதற்கு முந்தைய நிலையான, பிளேட் போடும் நிலைக்கு அனுப்பப்பட்டுவிடுகிறது.

இறுதி கட்டம்

நீங்கள் கையில் வைத்திருக்கும் பேப்பரை விரித்தால் அகலமான காகிதம் கிடைக்கிறதில்லையா, அந்த அளவுக்கு அகலமான காகித உருளைகள் அச்சகத்தில் பேல் பேலாக இருக்கும். வண்ணத்தில் அச்சிடும் பெரிய இயந்திரத்தில் அந்த உருளைகள் பொருத்தப்பட்டு நாளிதழ் அச்சிடப்படுகிறது. இயந்திரத்தில் அச்சாகி வெளியே வரும்போது, நாம் கையில் வைச்சிருக்கிறது மாதிரி மடிக்கப்பட்டே வந்து விழும்.

இந்த நாளிதழ்கள் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான அளவு பிரித்து எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் ஏஜெண்ட்களிடம் தரப்படும். அவர்களிடம் இருந்து பேப்பரை வாங்கி, வீட்டுக்குப் பேப்பர் போடுபவர் சைக்கிளில் வந்து பேப்பரைப் போடுகிறார். கடையிலும் வச்சு விக்கப்படுது. இதுதான் அன்றாடம் நான் பிறந்து, வளர்ந்து உங்களிடம் வந்து சேரும் கதை.

ஆறு கேள்விகள்

ஒரு செய்தி-கட்டுரையில் கீழ்க்கண்ட விஷயங்கள் முக்கியமாகக் கருதப்படும் - யார்?, என்ன?, எங்கே?, எப்போது?, ஏன்?, எப்படி?

ஒரு செய்தி / கட்டுரை இந்த ஆறு கேள்விகளுக்கும் பதில் அளித்தால் முழுமையானதாகக் கருதப்படும். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் முதல் பத்தியில் சுருக்கமாக இடம்பெற்றிருக்கும். அதேநேரம் இணைப்பிதழ் கட்டுரைகள், தலையங்கப் பக்கக் கட்டுரைகள் இதே பாணியில் எழுதப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

உலகின் முதல் நாளிதழ்

முதன்முதல் நாளிதழ் எந்த ஊரிலிருந்து, எந்தக் காலத்தில் வந்தது? கல்விக்கும் அறிவுக்கும் புகழ்பெற்றிருந்த ரோம் நகரத்தில் கி.மு. 56-லேயே முதல் நாளிதழ் வந்துவிட்டது. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசராக இருந்த ஜூலியஸ் சீசர், போரிட்டு வென்று பல புதிய பகுதிகளை ரோமுடன் இணைத்து வந்தார். 'தினசரி' என பொருள்படும் நாளிதழை முதன்முதலில் ஆரம்பித்தவர் இவர்தான்.

'ஆக்டா டையூர்னா' (லத்தீன் மொழியில் 'அன்றாட நிகழ்வுகள்') என்பதுதான் அந்தச் செய்தி இதழின் பெயர், அது பேப்பரில் வெளியாகவில்லை. ஃபாரம் ஆஃப் ரோம் - போன்று மக்கள் கூடும் இடங்களில் கல்லிலோ அல்லது உலோகத்திலோ உருவாக்கப்பட்ட தகவல் பலகைகளில் செய்திகள் எழுத்துகளாகப் பொறிக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டன. நாட்டில் நடக்கும் விஷயங்களை மக்கள் தெரிந்துகொள்வதற்காகவே இவை உருவாக்கப்பட்டன. இன்றைய நோட்டீஸ் போர்டுகளுக்கு இதுவே அம்மாவாக இருந்திருக்க வேண்டும்.

யார்? என்ன?

ஆசிரியர்: ஒரு செய்தி எப்படி வர வேண்டும். எந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், எதெல்லாம் இருக்கக் கூடாது என்று முடிவு செய்பவர்.

உதவி ஆசிரியர்: செய்திகள், கட்டுரைகளை மொழிபெயர்த்து அல்லது சரிபார்த்து, மேம்படுத்திப் பக்கத்தில் வெளியிடுவதற்குத் தேவையான வேலைகளைச் செய்பவர்.

நிருபர் / செய்தியாளர்: ஒரு பகுதியில் நடக்கும் சம்பவங்கள், நிகழ்ச்சிகள், சாதனைகள், வேதனைகளை நேரில் சென்று பார்த்து, தகவல் சேகரித்து எழுதுபவர்.

ஒளிப்படக் கலைஞர்: அன்றாட நிகழ்வுகள், படச் செய்திகள் போன்றவற்றுக்குத் தேவையான படங்களை எடுத்துத் தருபவர்.

தலைப்புச் செய்தி: நாளிதழின் முதல் பக்கத்தின் மேற்பகுதியில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பெரிதாக வெளியிடப்படும் செய்தி.
தலையங்கப் பக்கம் / நடுப் பக்கம்: சமூகம் அக்கறை செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்துத் தலையங்கம், அலசல் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள் போன்றவை வெளியாகும் பகுதி.

இணைப்பிதழ்: ஒவ்வொரு நாளிதழுடனும் வழங்கப்படும் இணைப்பு இதழ்கள். தினசரிச் செய்திகளுக்குப் பதிலாக, விஷயங்களைச் சுவாரசியமாகப் படிக்கும் வகையில் பலதரப்பட்ட விஷயங்களை கட்டுரையாக எழுதப்பட்டிருக்கும்.

நன்றி : தி இந்து

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment