பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, September 24, 2014

தன்னைத் தான் உணர்வதே ஞானம்..

முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும்
முடிவுகளால் தளர்ந்தவர்கள்,
நினைத்ததைச் சாதித்தும்
நடக்காததில் நோகும் பிறப்புகள்;

ஏக்கப் பெருமூச்சினுள் வெந்துவெந்தே
நித்தம் வாழ்பவர்கள்,
என்றேனும் மாறும் வாழ்க்கைக்கு
என்றென்றும் கனாக்காணும்; ஈசல் பூச்சிகள்;

வந்தவர் போனவர் பற்றியெல்லாம்
பகடி பேசும் பழையப் போர்வாள்கள்;
அடிப்பவன் ஓங்கியடித்தால் - அதிர்ச்சியிலேயே
மூச்சைவிடும் அற்ப உயிரின் பாவப் பிராணிகள்;

எதிலெல்லாம் ஏற்றம் உண்டென
தேடித் தேடியே இருப்பதை தொலைப்பவர்கள்,
இருக்க இருக்க மேலேறி
பேராசையின் பள்ளத்தில்வீழ்ந்து தானேஒழிபவர்கள்;

குடிக்க கஞ்சு போதும்
உடுத்த ஆடை போதும் என்றிருந்திருந்தால்
அடுத்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி என்பதை
அறிந்தும் ஆழ்கடலை தொடாதவர்கள்;

பிடித்தது பிடிக்காதது என்று பகுத்துப் பகுத்தே
உணர்ச்சிகளைக்கூட ஏற்றயிறக்கத்துள் தள்ளியவர்கள்,
பின் தவிக்கத் தவிக்க மூச்சடக்கி
வாழ்க்கையை ஞானம்தேடியே இழப்பவர்கள்;

இருப்பது ஒரு வாழ்க்கை யென்றதே - நாம்
இருப்பதைச் சிறப்பாக வாழ்வதற்கன்றி வேறென்ன? இன்னும்
நீள்வது உண்டெனில் பிறப்புகள் நீளட்டுமே – நாம்
பெறுவதைப் பேறென்று வாழுவமே' என உணர்தலேப் பேரறிவு;

இருப்பதும் மறைவதும் இயல்பு தானே
கிடைப்பதும் தொலைப்பதும் இயல்பு தானே
பிறப்பதும் அழிவதும் கூட இயல்பு தானே,
இயல்பில் - மாற்றமும் தோற்றமுமே மாறாதது;

ஏற்றத்தை இறக்கத்தை கண்டதும் ஆடாத
கிடைத்ததும் தொலைத்ததும் சட்டென மாறாத
இருப்பதை பகிர்ந்து இருப்பதில் சிறந்து
இயல்பின் அசைவுகளை முடியக் கண்களுள் பார்த்தால் -

மூளும் நெருப்பிலிருந்து பெய்யும் மழை
வீசும் காற்றுவரை தன்னுள் அடக்கமென்று தானே தெரியும்,
அதற்கும் ஆடாத எதற்கும் அசையாத மனமது
எப்போதும் தனித்திருக்கும், ஏகத்திலும் சுகித்திருக்கும்.
,
கலங்காத மனம் அறியாமை நோயின்றி
கேட்பதையெல்லாம் பெற்றுத்தரும், எதைக்
கேட்பது கேட்க மறுப்பதென்பதையும்
இயல்பிலடங்கி எண்ணம்வழியே எடுத்தியம்பும்!

எங்கும் அமைதி நிலவும், எவ்வுயிரும் சுகம் பெரும்!!
யாவருக்கும் மங்களம் மங்களமே யுண்டாகும்!!
----------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்

வித்யாசாகர் vidhyasagar1976@gmail.com

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment