பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, September 24, 2014

மாறுபடும் இருதயத் துடிப்பா? - கவலை வேண்டாம்; நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியே என்கிறது ஆய்வுஇருதயத் துடிப்பு சீராக இருந்தாலும் இருதயத் துடிப்புகளுக்கு இடையே சற்றே காலமாறுபாடு இருப்பது நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியே என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருதயத் துடிப்பு மாறுபாடு (Heart rate variability) என்று அழைக்கப்படும் இதன் மூலம் நம் உடலில் ஏற்படப்போகும் நோய்களை சரியாகக் கணிக்க முடியும் என்கின்றனர். அதாவது திடீர் இருதய செயலிழப்பு (congestive heart failure) மற்றும் அழற்சி (inflammation)ஆகியவற்றை இருதயத் துடிப்பு மாறுபாடு கொண்டு கணிக்க முடியும் என்று இந்த அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

தடகள வீரர்களின் இருதயத் துடிப்பு மாறுபாடு அவர்கள் களைப்படைந்ததைக் காட்டக்கூடியது, அல்லது அளவுக்கதிகமாக பயிற்சி எடுத்துக் கொள்வதை எச்சரிக்கிறது.

பல்வேறு தடகள விளையாட்டு வீரர்களின் இருதயத் துடிப்பு தரவுகளைச் சேகரித்து, கணிதவியலில் கூறப்படும் ‘கண்ட்ரோல் தியரி’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கால்டெக் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

நம் உடல் பயன் தரும் வகையில் வேலை செய்ய வேண்டுமானால் அதற்கேற்ற சுற்றுச்சூழல் ஸ்திரத் தன்மை வேண்டும். இதைத்தான் ஹோமியோஸ்டேசிஸ் என்று அழைக்கின்றனர்.

உதாரணத்திற்குக் கூற வேண்டுமென்றால், அதி வெப்பம் அல்லது அதிகுளிர் நிலைகளிலோ, உடற்பயிற்சியின் போதோ ரத்த அழுத்தத்தை, உடல் உஷ்ண அளவை சீராக வைக்க முடிவதற்குக் காரணம் இருதயத் துடிப்பு மாறுபாடே. அதாவது எந்த ஒரு தீவிர சூழ்நிலையிலும் இருதயத் துடிப்பு மாறுபாடு உடலின் சமச்சீர் தன்மையை பேணுகிறது.

இளம் மற்றும் ஆரோக்கிய உடல்நிலை கொண்ட 5 தடகள வீரர்களை சைக்கிளிங் செய்யவிட்டு இருதயத் துடிப்பு மாறுபாடுகளைப் பதிவு செய்து மூச்சிரைத்தல், பிராணவாயு நுகர்வு, கரியமிலவாயு உற்பத்தி ஆகியவற்றைக் கணக்கிட்டுள்ளனர் இந்த ஆய்வாளர்கள்.

இந்தத் தரவுகளுடன் உடற்கூறியல் கட்டுப்பாட்டு முறைகளின் நிலையான மாதிரிகளை சேர்த்து பல்வேறு காரியங்களுக்கான ஆற்றல் உற்பத்தி அதற்கான உடல் சமச்சீர் தன்மை பராமரிப்பை இருதயத் துடிப்பு மாறுபாடு எப்படிக் கையாள்கிறது என்பதை ஆராய்ந்தனர்.

இருதயம், நுரையீரல், மற்றும் ரத்தச்சுழற்சி தசைகள் மற்றும் பிற உறுப்புகளுக்குத் தேவையான பிராணவாயு ரத்தத்தை அளிக்க வேண்டும், அதே தருணத்தில் அதிக ரத்தத்தை குறிப்பிட்ட தசைகளுக்கும் உறுப்புப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று உயர் ரத்த அழுத்தம் ஏற்படாதவாறு பரமாரிக்க வேண்டும்.

இதனை தசை மற்றும் மூளை ரத்தக்குழாய் சுருங்கி விரிதல் கட்டுப்பாடு மற்றும் மூச்சுவிடுதல் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு ஏற்ப பராமரிக்க வேண்டும். இதனை இருதயத் துடிப்பு மாறுபாடு என்ற இயல்பான நிகழ்வு திறம்பட செய்கிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

ஆகவே இருதயத் துடிப்பு மாறுபாடு என்பது நல்ல ஆரோக்கியத்திற்கான அறிகுறியே என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். இந்த ஆய்வின் விவரங்கள் நேஷனல் அகாடமி ஆஃப் சயன்சஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி : தி இந்து 

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment