பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, September 27, 2014


ல்லோருடைய உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கும் தீபாவளி நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான். பட்டாசு தொழிலின் தாய்வீடு


சிவகாசி. இந்த ஊரே பட்டாசு தொழிலை நம்பித்தான் இருக்கிறது. பட்டாசு தொழிலுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலையைக் கொண்டது சிவகாசி. தீபாவளி அன்று ஒருசில மணி நேரங்களில் கொளுத்திப்போட்டுவிட்டு, அடுத்த வேலை பார்க்கவைக்கும் இந்த பட்டாசு உற்பத்தி ஆண்டுக்கு 300 நாட்கள் இந்த பகுதியில் நடக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் உயிரை பணயம் வைத்து, ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றுகிறார்கள். ஆரம்ப காலத்தில் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள்தான் இருந்தன. அப்போது பட்டாசு என்பது மிகவும் அபூர்வம். 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டன. இந்தியாவில் முதன்முதலில் கொல்கத்தாவில்தான் பட்டாசு உற்பத்தி நடந்தது. சிவகாசியைச் சேர்ந்த ஏ.சண்முக நாடார், அய்ய நாடார் ஆகியோர்தான் முதலில் கொல்கத்தா சென்று பட்டாசு உற்பத்தியைக் கற்றுக்கொண்டு, சிவகாசியில் பட்டாசு தொழிலைத் தொடங்கினர். கம்பி மத்தாப்பில் தொடங்கி, இன்று நூற்றுக்கணக்கான ரகங்களில் மத்தாப்புகள், பட்டாசுகள் என்று சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்டு, நாடு முழுவதும் அனுப்பப்படுகிறது. 

ஆண்டுதோறும் பட்டாசு விலை கூடிக்கொண்டே போனாலும், விற்பனை கொஞ்சம்கூட குறையாமல் அதிகரித்துக்கொண்டே போனது. இதுவரையில் சிவகாசி பட்டாசுகளுக்கு போட்டியே இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது சீனப்பட்டாசு ரூபத்தில் சிவகாசி பட்டாசுக்கும் பலத்த போட்டி வந்துவிட்டது. இவ்வளவுக்கும் சீனப்பட்டாசு இந்தியாவுக்குள் கொண்டுவருவதற்கு சட்டபூர்வ அனுமதி கிடையாது. அனுமதி இல்லை என்பது சரிதான், ஆனால் எப்படியோ ஏராளமான கண்டெய்னர்களில் கப்பல் மூலம் கடந்த சில மாதங்களாகவே வந்து இறங்கிவிட்டது.

எப்படி சீன மின்னணு பொருட்கள், பொம்மைகள் குறைந்த விலையில் கிடைக்கிறதோ, அதுபோல சீனப்பட்டாசுகள் விலையும், சிவகாசி பட்டாசுகளைவிட விலை குறைவாகவும், பேன்சி ரகங்களிலும் இருப்பதால் பொது மக்கள் நிச்சயம் சீனப்பட்டாசுகளை நாடியே செல்லப் போகும் சூழ்நிலையில், சிவகாசி பட்டாசு விற்பனை 30 சதவீதத்துக்குமேல் குறைந்துவிடும் என உற்பத்தியாளர்கள் அச்சப்படுகிறார்கள். இவ்வளவுக்கும் சீனப் பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ள தரம்குறைந்த ரசாயன பொருட்களான குளோரைடு, பெர்குளோரேட்டால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் பல வண்ண நிறங்களில் விதவிதமான பட்டாசுகள், மத்தாப்புகளை உற்பத்தி செய்தாலும், இவையெல்லாம் அதை பயன்படுத்துபவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகும். ஏற்கனவே உற்பத்தி குறைந்துவிட்டது என்ற சூழ்நிலையில், சிவகாசி பட்டாசைவிட, விலைகுறைந்த சீனப்பட்டாசு மார்க்கெட்டுக்குள் வந்துவிட்டது என்றும் ஒரு பேச்சு இருக்கிறது.

சிவகாசி பட்டாசைப் பொறுத்தமட்டில், மூலப்பொருட்கள் விலை அதிகம், பல மூலப்பொருட்கள் பெருமளவில் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படவேண்டியது இருக்கிறது, தொழிலாளர் சம்பளம் உள்பட உற்பத்தி செலவு அதிகம், வரி அதிகம் என்பதால், சீனப்பட்டாசு விலையோடு போட்டியிட முடியவில்லை என்கிறார்கள். சீனப்பட்டாசுகள் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றும் என்பதால் சுற்றுச்சூழலையும் பாதிக்கும், அதிக சப்தம் ஏற்படுத்தும் என்று பல காரணங்களைச் சொன்னாலும், பொதுமக்களுக்கு விலைதான் கண்ணுக்கு தெரியும். இந்த சூழ்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் சட்டத்துக்கு விரோதமாக இந்த சீனப்பட்டாசுகள் எப்படி கொண்டுவரப்பட்டது? என்பதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும், சுங்க இலாகா, வருவாய் புலனாய்வு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் நாட்டின் பொருளாதாரத்துக்கும், சிறுகுழந்தைகளின் பாதுகாப்புக்கும் அபாயம் விளைவிக்கும் சீனப்பட்டாசுகளை தடுக்கவும், சோதனை செய்யவும், கண்டுபிடிக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பது உள்பட பல அம்சங்களைக்கொண்ட நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். மத்திய, மாநில போலீசார் இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். சிவகாசி பட்டாசும் ஓரளவுக்கு சீனப்பட்டாசு விலைக்கு நிகராக இருந்தால்தான், முற்றிலுமாக சீனப்பட்டாசு மீது மக்கள் பார்வை போகாமல் தடுக்கமுடியும். அதற்கு அரசும், உற்பத்தியாளர்களும் முயற்சிக்கவேண்டும்.

நன்றி :- தினத்தந்தி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment