பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, September 2, 2014

நெஞ்சுரமிக்க பஞ்சாலைத் தோழர்,என்.ஜி.இராமசாமி - க.வேங்கடராமன்


கோவை மாவட்டம், பீர்மேடு பகுதியில் 11.3.1912 அன்று என்.ஜி.இராமசாமி பிறந்தார். உயர்நிலை பள்ளிப்படிப்புக்குப் பின், "இந்தியன் அச்சகம்' நிறுவி, மக்களை தனது ஆற்றல்மிக்க எழுத்தாலும், பேச்சாலும், எழுச்சியுறச் செய்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்ளச் செய்தார். பஞ்சாலைகள் நிறைந்த கோவையில் தொழிலாளர்களுக்கு, சங்கங்களை உருவாக்கினார்.
இவரது உறுதிமிக்க உள்ளத்தைக் கண்ணுற்ற தமிழக காங்கிரஸ் கட்சி 1937-இல் நடைபெற்ற தேர்தலில், கோவை - மலபார் தொழிலாளர் தொகுதியில் அவரை வேட்பாளராக நிறுத்தியது. நீதி கட்சி, ஆலை அதிபர்களின் ஆதரவுடன் பாசுதேவ் களம் இறங்கினார்.
போட்டி கடுமையாக இருந்தது. ஆனால், முடிவு அறிவிக்கப்பட்ட 15.1.1937 அன்று பெரும் வாக்கு வித்தியாசத்தில் ராமசாமி வெற்றி வாகை சூடினார்.
அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த ஆலை அதிபர்கள், தங்களது ஆவேசத்தை தொழிலாளர்கள் மீது திருப்பினர். வேலை நேரத்தை நீட்டித்தனர். இதனை எதிர்த்தவர்களை நீக்கினர்.
இதனை ராமசாமி கண்டித்து, பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகளை தீர்க்க விரும்பினார். ஆனால், அதிபர்கள் விடாப்பிடியாக இருந்தனர். இதனால், சங்கங்கள் முறைப்படி காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கின. மாவட்ட ஆட்சியரை நாடினர்.
அவர், சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசியதில், நியாயம் தொழிலாளர்கள் பக்கம் உள்ளதை உணர்ந்து, ஆலை அதிபர்களிடம் பிரச்னையை சுமூகமாக தீர்க்க கூறினார். அவர்கள் மறுக்கவே, 23.9.1937 அன்று தொழிலாளர் நல விரோத போக்கை கைவிட்டு கோரிக்கைகளை ஏற்க ஆணை பிறப்பித்தார்.
நிர்பந்தத்தின் காரணமாக ஏற்ற ஆலை அதிபர்கள், இராமசாமியை அழித்துவிட்டால் வழிகாட்டல் இன்றித் தொழிலாளர்கள் தவிப்பர் என்று சமூக விரோதிகளை அணுகினர்.
அவர்கள் இராமசாமியை நிழல் போல் தொடர்ந்து, தனித்து இருக்கும்போது தாக்கினர். அவர் கீழே விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக வீதியில் தூக்கி எறிந்தனர்.
இரத்த வெள்ளத்தில் கிடந்தவரை, மக்கள் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கச் செய்தனர். தொழிலாளர்கள் திரண்டு வந்து ஆலைகளை முற்றுகையிட்டனர்.
சட்டசபையில் கேள்வி கேட்கப்பட்டது. சென்னை ராஜதானியின் அன்றைய பிரதமர் ராஜாஜி, அங்கத்தினர்களைச் சமாதானப்படுத்தி, தொழிலாளர் நல அமைச்சர் வி.வி. கிரியை கோவைக்கு அனுப்பினார்.
அவர் மருத்துவமனையில் தலையிலிருந்து கால்கள் வரை கட்டுடன் கிடந்த இராமசாமியைக் கண்டு, இப்படிப்பட்ட கொடுமைக்கு காரணமான கயவர்களை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த ஆட்சியருக்கு கட்டளையிட்டதோடு, ஆலை அதிபர்களை அழைத்து, "இப்படிப்பட்ட சட்ட விரோதச் செயல்களுக்கு உடந்தையாக இருந்தது நிரூபணமானால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என எச்சரித்தார்.
அண்ணல் காந்தியடிகள் 1940-இல் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில்  கலந்து கொள்ள தமிழகத்திலிருந்து ராமசாமி தேர்வு செய்யப்பட்டார். சத்தியாக்கிரகம் செய்தபோது, கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி, வேலூர் சிறைகளில் வைக்கப்பட்டார்.
சிறைகளில் நிகழும் அசம்பாவிதங்களை எதிர்த்து உண்ணாநோன்பு பூண்டு, சீர்கேடுகளை களைந்தார். இவருக்கு கடுமையான வேலைகள் கொடுத்து கொடுமைப்படுத்தினர்.
உடல்நிலை பாதிக்கத் தொடங்கியது. சோர்வுடன் தென்பட்டாலும், கடமைகளிலிருந்து மாறாது உழைத்தார்.
விடுதலை பெற்ற சில மாதங்களிலேயே, 1942 ஆகஸ்ட் 9-இல் சுதந்திரப் போராட்டத்தின் திருப்புமுனையாக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் வரையப்பட்ட "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் கிராமந்தோறும் சென்று பிரசாரம் செய்து மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தினார்.
13.8.1942-இல் கைது செய்யப்பட்டு, கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் செக்கிழுத்த கோவை சிறையில் அடைக்கப்பட்டார். 144 தடை சட்டத்தை மதிக்காது முதியவர்களும், இளைஞர்களும் சிறையை நிரப்பினர்.
இவருக்கு இருக்கும் செல்வாக்கைக் கண்டு கலங்கி, தனிக் கொட்டடியில் வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டதில், உடல் மெலிந்து, கண்ணொளி மங்கி, குடல் புண்ணாகி, வாந்தியும் பேதியும் ஏற்பட்டு படுத்த படுக்கையானார். பயந்து போன சிறை அதிகாரிகள், எவ்வித நிபந்தனையுமின்றி ரகசியமாக விடுதலை செய்தனர்.
தொண்டராக, தோழராக, தலைவராக திகழ்ந்த என்.ஜி. இராமசாமி 12.2.1943 அன்று அமரரானார்.
நன்றி : தினத்தந்தி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment