
ஆதிதிராவிடர் அரசுக் கல்லூரி மாணவிகள் விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு, 25 சென்ட் நிலத்தை தானமாக வழங்கினார் ஓய்வு பெற்ற ஆசிரியர்.
சொத்து வேண்டுமா? ரத்த சொந்தம் நிலைக்க வேண்டுமா? என்று கேட்டால்- நிதானமாக யோசித்த பிறகும்கூட சொத்துதான் வேண்டும் என்று கூறும் காலம் இது.
விட்டுக் கொடுத்தல், பொறுமையாக இருத்தல், தானம் செய்தல் போன்ற பண்புகள் அருகிவிட்ட இந்தக் காலத்திலும் இந்தச் சமூகம் உயிர்ப்புடன் இருக்க மனிதநேயமிக்க- சமூக நலனில் அக்கறை கொண்ட சிலர் இருப்பதுதான் காரணம். அப்படி போன்றவர்களில் ஒருவர்தான் பாக்கியநாதன் என்றால் மிகையல்ல.
திண்டுக்கல் நிலக்கோட்டையில் ஆதிதிராவிடர் அரசுக் கல்லூரி மாணவிகள் விடுதி செயல் படுகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாமல் மாணவிகள் அவதிப்பட்டு வருவதால், புதிய விடுதிக் கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், நிலம் இல்லாததால் கட்டிடம் கட்டுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதையறிந்த நிலக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாக்கியநாதன், கல்லூரி விடுதியையொட்டி உள்ள தனக்குச் சொந்தமான 25 சென்ட் நிலத்தை விடுதிக் கட்டிடம் கட்டுவதற்காக தானமாக வழங்கினார்.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் ந. வெங்கடாசலத்தை சந்தித்து, நிலத்தை தானம் வழங்குவதற்கான பத்திரத்தை பாக்கியநாதன் ஒப்படைத்தார்.
ஆசிரியரின் தயாள குணத்தை பெரிதும் பாராட்டிய ஆட்சியர், அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும், மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களும் அரசு ஊழியர்களும் கைத்தட்டி பாக்கியநாதனுக்கு கவுரவம் சேர்த்தனர்.
பாக்கியநாதன், ஏற்கெனவே அரசு மகளிர் கலைக் கல்லூரி அறக்கட்டளைக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கி பெண் கல்வி முன்னேற்றத்துக்காக உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :- தி இந்து
0 comments:
Post a Comment