பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, August 31, 2014

24 கைவினைஞர்களுக்கு விருது: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்


தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 
கோயில் கட்டடக் கலையில் சிறந்து விளங்கும் காரைக்குடியைச் சேர்ந்த 90 வயது எஸ்.கே.ஆச்சாரிக்கு "வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருதை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் வழங்கினார். 
உடன், ஊரகத் தொழில்-தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ப.மோகன், 
கைத்தறித் துறை முதன்மை செயலர் ஹர்மந்தர் சிங், 
தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தின் 
மேலாண்மை இயக்குநர் ஷீலா ராணி சுங்கத்

கோயில் சிற்பங்களை வடிவமைத்தல், சித்திரைத் தையல் வேலை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் 24 கைவினைஞர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. இதன் அடையாளமாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழு கைவினைஞர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அண்மையில் விருது வழங்கினார்.
24 விருதுகள்: இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு தமிழக அரசு உருவாக்கிய உயரிய விருதான "வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருதுக்கு 10 கைவினைஞர்களும்,
பூம்புகார் மாநில விருதுக்கு 14 கைவினைஞர்களும், தேர்வு செய்யப்பட்டனர். "வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருதுக்கு காரைக்குடியைச் சேர்ந்த கோயில் கட்டடக் கலை கைவினைஞர் எஸ்.கே.ஆச்சாரி (90 வயது) உள்பட 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதே போன்று பூம்புகார் மாநில விருதுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சித்திரைத் தையல் கைவினைஞர் மேரி சாந்தா உள்பட 14 தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.கே.ஆச்சாரி, மேரி சாந்தா உள்பட 7 பேருக்கு அடையாளமாக முதல்வர் ஜெயலலிதா விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
பொக்கிஷம் விருது: ஜப்பான் நாட்டில் வாழும் தேசிய பொக்கிஷங்கள் எனும் விருதை 7 விதமான கலைப்பொருள்கள் தயாரிக்கும் கைவினைஞர்களுக்கு ஜப்பான் அரசு வழங்கி வருகிறது.
இதே போன்று தமிழகத்திலும் கைத்திறன் தொழிலில் சிறந்து விளங்கி அதற்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் என்ற உயரிய விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த மே 8-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். கைவினைஞர்களைப் பொக்கிஷமாகக் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருது நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சலோகச் சிற்பங்கள், பித்தளை விளக்குகள், பித்தளை கலைப்பொருள்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், மர சிற்பங்கள், கற்சிற்பங்கள், சுடுகளிமண், கலம்காரி, பத்திக், அப்ளிக் துணி ஓவியங்கள், காகிதக் கூழ் பொம்மைகள், பாய் நெசவு, மூங்கில் மற்றும் பனை ஓலை பொருள்கள், நெட்டி வேலை, நார் பொருள்கள், கோவில் நகைகள், சித்திரத் தையல் வேலை, இதர கைவினைப் பொருள்கள் ஆகிய 16 விதமான கைத்திறன் தொழில்களில் இருந்தும் கைதேர்ந்த 65 வயதுக்கும் மேற்பட்ட 10 கைவினைஞர்களை தேர்வுக்குழு மூலம் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது பெறும் கைவினைஞர்களுக்கு ரூ.1 லட்சம், தாமிரப் பத்திரம், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது.
பூம்புகார் விருது: கைவினைஞர்களுக்கு வழங்கப்படும் பூம்புகார் விருது, 2002-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் மாநில விருது என்ற அங்கீகாரத்துடன் வழங்கப்படுகிறது.
இந்த விருது ரூ. 50 ஆயிரம், 4 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், தாமிரப்பத்திரம், சான்றிதழ் ஆகியவைக் கொண்டதாகும்.
இதுவரை 237 பேருக்கு விருது: 2010-11-ஆம் ஆண்டு தொடங்கி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 237 விருது கைவினைஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கியுள்ளது.
நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment