பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, August 26, 2014

தென்காசியில் ரசிகமணி டி.கே.சி. 133-ஆவது பிறந்த நாள் விழா

தென்காசி- குற்றாலம் சாலையில் உள்ள தாய்பாலா கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கல்கியின் பேத்தியும், சிறுகதை எழுத்தாளருமான சீதாரவி தலைமை வகித்துப் பேசியது:
ரசிகமணி டி.கே.சியின் 133-ஆவது பிறந்த நாள் விழா, தமிழிசைச் சங்கங்களும், இலக்கிய அமைப்புகளும் கொண்டாட வேண்டிய விழா.
யாரையும் ஏற்காத ராஜாஜி, டி.கே.சி. சொன்னார் என்ற காரணத்துக்காக கலையில் ஈடுபாடு கொண்டார். ராஜாஜியை இசையையும், நாட்டியத்தையும் நோக்கி திசைதிருப்பியவர் டி.கே.சி.
கல்கி பொன்னியின் செல்வன் எழுதுவதற்கு டி.கே.சி. எடுத்துக் கொடுத்த ஒரு பாடல்தான் அச்சாரம். சிவகாமியின் சபதம் என்ற நாவலை எழுதுவதற்கு டி.கே.சி.யின் வீட்டில் கண்ட பரதநாட்டிய நிகழ்ச்சிதான் காரணமாக அமைந்தது.
ரசிகமணி டி.கே.சி.யின் பிறந்த நாள் விழாவை தென்காசியில் மட்டும் கொண்டாடாமல், சென்னை, சேலம், திருச்சி, மதுரை போன்ற பகுதிகளிலும் நடத்த வேண்டும். இதுபோன்ற விழாக்களில் தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் நிறைய பேர் கலந்து கொள்வார்கள். கல்லூரி மாணவர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும். மாணவர், மாணவிகளுக்கு சிறிய அளவிலான போட்டிகளை நடத்தலாம்.
தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்போது, டி.கே.சி.யின் பண்பாடு, தமிழ்ப் பண்பாடு என்று தனியாக சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றார் அவர்.
விழாவில், தீப.நடராஜனும் கி.ராஜநாராயணனும் எழுதிய கடிதங்களின் தொகுப்பான "பஞ்சவடியும் ராஜபவனமும்' என்ற நூலை, தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தின் தலைவர் துரை.தம்புராஜ் வெளியிட, தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் ஆ.சிவராமகிருஷ்ணன், தீப.குத்தாலிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தீப.நடராஜன் கவிதை வாசித்தார்.
விழாவில், சென்னை காந்தி கல்வி நிலையத்தைச் சேர்ந்த சு.சரவணன் "இதயம் தொட்ட டி.கே.சி.' என்ற தலைப்பிலும், திருநெல்வேலியைச் சேர்ந்த முனைவர் பு.சி.கணேசன் "முன்னத்தி ஏர்' என்ற தலைப்பிலும் பேசினர்.
ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தைச் சேர்ந்த கோம.கோதண்டம், சேக்கிழார் மன்றத்தைச் சேர்ந்த செண்பகம், தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த நரேந்திரகுமார், தென்காசி பொதிகை இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜாமுகம்மது, புலவர் அ.செல்வராஜ், வழக்குரைஞர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ப.ராஜாராம் வரவேற்றார். இரா.தீத்தாரப்பன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ரசிகமணி டி.கே.சி. அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment