ஓவியத் துறையில் சாதிக்க துடிக்கும் ஓவியர்களை ஒன்றிணைத்து ஓவிய முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சி முகாம் நடத்தி வருகிறார் புதுச்சேரியை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ரவி (59). புதுச்சேரி நைனார் மண்டபத்தை சேர்ந்த இவர், பான்சியோனா அரசு பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். புதுச்சேரி அரசின் குழந்தைகள் நல மேம்பாட்டு குழு உறுப்பினராகவும் செயல்படுகிறார்.

ஆசிரியர் ரவியின் கோட்டோவி யங்கள் 20-க்கும் மேற்பட்ட சிறுகதை, நாவல், கவிதை நூல் களில் முகப்பு ஓவியங்களாகவும், உள் ஓவியங்களாகவும் அலங்கரித்துள்ளன.
கவிதைக்கு ஏற்ற உருவம் கொடுத்துள்ளார். 2000-ம் ஆண்டு புதுச்சேரி மாநில நல்லாசிரியர் விருது, 2010-ம் ஆண்டு கலைமாமணி விருது, கலை, சமூக சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய ஓவியர் விருது, செந்தமிழ் கலைச்செம்மல் விருது என 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன் எல்லோரா நுண்கலை மற்றும் பண்பாட்டு அமைப்பை நிறுவி 30-க்கும் மேற்பட்ட ஓவியர்களை ஒன்றிணைத்துள்ளார். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி அடையாளம் தெரியாத ஓவியர்களை ஒன்றிணைத்து முகாம் மற்றும் கண்காட்சி நடத்துவது, நுண்கலையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு விருது வழங்குவது, ஏழை மாணவர்களுக்கு இலவச ஓவிய வகுப்பு என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து, ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

கடந்த 35 ஆண்டுகளாக நுண்கலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். எனது தந்தை ரெங்கராஜன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரை பார்த்துதான் நான் 5 வயதில் ஓவியம் வரையத் தொடங்கினேன். எனக்கு கோட்டோவியங்கள் மீது அதிக ஈடுபாடு உண்டு. கோட்டோவியத்தை வைத்தே ஓவியனின் திறமை, அனுபவத்தை தெரிந்துகொள்ள முடியும். கணினிமயமான இன்றைய காலத்திலும் ஓவியம் கோலோச்சுவது பெருமையாக உள்ளது.
திறமை உள்ள ஓவியர்களை ஒன்றிணைத்து குழு ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறேன். அதற்கு நல்ல வெற்றி கிடைத்துள்ளது. என்னதான் கணினிமயமானாலும் அனிமேஷனில் ஓவியர்கள்தான் முக்கியப் பங்காற்றுகின்றனர். எனவே, ஓவியத் துறையின் வளர்ச்சி குன்றாது. எனினும், நவீனத்துக்கேற்ப ஓவியத்தில் புதுமையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ப ஒவ்வொரு ஓவியரும் புதுமை ஓவியங்களை வரைந்தால் தொடர்ந்து சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கோட்டோவியம்.

இவரது மாணவர்கள் கூறும் போது, ‘‘புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் அண்மையில் நடந்த முகாமில் ஓவியர் ரவி வரைந்த நடராஜர் ஓவியத்தை ஜப்பான் சுற்றுலாப் பயணி வியந்து பாராட்டி வாங்கிச் சென்றார். புதுச்சேரி அருங்காட்சியகம் இவரது ஓவியங்களை காட்சிக்கு வைத்துள்ளது. தஞ்சை தென்னக கலை பண்பாட்டு மையம், லலித்கலா அகாடமி ஆகியவற்றில் இவரது ஓவியங்கள் உள்ளன. பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இவரது ரசிகர்களாக உள்ளனர்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

நன்றி ;தி இந்து