பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, October 7, 2015

யுத்தபூமி : அத்தியாயம் - 1. - யுத்தமும் பண்பாடும் -த.பார்த்திபன்



இன்று மனித இனம் மேற்கொள்ளும் யுத்தத்துக்கான காரணங்கள் விதவிதமானவை. இவற்றில், பிரக்ஞையுடைய நாகரிக மனிதன், தனியனாய் தனக்குத்தானே எள்ளி நகையாடிக் களிக்கும் காரணங்களே மிகுதி. நம்மிடையே ஒருவகை யுத்தம், பண்பாட்டின் செழுமையான அடையாளத் தோடு இருந்தது என்பது ஆச்சரியமான உண்மை. அப்பண்பாட்டினைப் போற்றி வளர்த்த நம் முன்னோர்களுடைய சமுதாயத்தின் பண்பு நலன்கள் குறித்துச் சான்றோர்கள் இலக்கணம் வகுத்தும், திணைத் துறை வகுத்தும் இருந்தனர். வீரம், அப்பண்பாட்டின் பெருமைமிகுப் பண்பு; அது எல்லாவற்றுக்கும் மேலாகப் போற்றப்பட்ட பண்பு. அன்று அவ்வீரம் சமுதாயத்தின் நன்மைக்காக, சமுதாயத்தின் மேன்மைக்காக, சமுதாயத்தின் விழுமியங்களுக்காக மட்டும் செலவிடப்பட்டது. அச்செலவே விரும்பப் பட்டது. அவ்வீரமே, பண்பாட்டு அடையாளம் கொண்ட யுத்தங்களாக விளைந்தன.

அச்சமுதாயம் வாழ்க்கையை அகம் - புறம் என இரண்டாகப் பகுத்துக் கொண்டு, அகவாழ்வை காதலாலும், புறவாழ்வை வீரத்தாலும் கொடையாலும் சிறப்புள்ளதாக்கிக் கொண்டிருந்தது. இதனையொட்டி எழுந்த வாழ்வியல் சிந்தனை, மனித வாழ்க்கையின் நிலைகளை ‘காதல்வீரம்மரணம்மரணத்திற்கு பிறகு’ என நான்கு பெருநிலைகளாகப் பகுத்து, தமது கொள்கைகளை வெளிப்படுத்தியது.
ஆதி மனிதச் சமுதாயத்தின் உணர்வுலகில் அச்ச உணர்வு, நம்பிக்கை உணர்வு, நன்றி உணர்வு ஆகியவையே முதன்மையாக இருந்தன. மனிதனின் அச்ச உணர்வின் காரணமாக அவனிடமிருந்து எழுந்த இயற்கை வழிபாடு, அடுத்தகட்டத்தில் மரணத்துக்குப் பிறகு என்ன என்ற மற்றொரு அச்ச உணர்வின் வழி, ஆவி வழிபாட்டுக்கு அழைத்துச் சென்றது. மனிதச் சிந்தனைக்கு எட்டாத மீஅச்ச உணர்வே, சமுதாயத்துள் சில நெறிகளை வளர்த்தது. அது, ஆவியை தீயது, நன்மையது; இழிவானது, போற்றத் தகுந்தது போன்ற எதிர் எதிர் நெறியாகப் பாகுபடுத்தியது. நன்மையது, போற்றத்தகுந்தது என்பதில், மரபு சிலவற்றை தலையாயதாக்கியது. நடுகல் எழுப்புவதும், அதனை வழிபடுவதும் இதன்பார்ப்பட்டதே. வரலாற்றுப் போக்கில் நடுகல் எழுப்புதல், வழிபடல் என்பவை, மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியின் பல படிநிலைகளில் ஒரு படிநிலை. தவிர்க்கமுடியாது, அப் படிநிலையானது மனிதன் புரிந்த யுத்தத்தோடு தொடர்புடையதாக உள்ளது.
பின்நோக்கியப் பார்வையில், காட்டுமிராண்டி மனிதனும், நாடோடி மனிதனும், வேட்டை மனிதனும், உணவு சேகரித்த மனிதனும், உணவை உற்பத்தி செய்த மனிதனும் புரிந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் யுத்தங்களுக்கான காரணங்களை, அவன் விட்டுச்சென்ற மிகக் குறைவான தொல்பொருள் சான்றுகளைக் கொண்டு தொகுத்துக்கொள்ள முடிகிறது. இவ்வாறான வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நிகழ்த்தப்பட்ட யுத்தங்களில், அக்காலப் பண்பாட்டின் அடையாளத்தைக் காண முடிகிறது. அது, அப்பகுதியின் அல்லது மனித குலத்தின், ஒரு இனத்தின் தனித்த பண்பாடாக இருக்கிறது.
வரலாற்றுக்கு முற்பட்ட கால இயற்கை, காலந்தோறும் அவ்வப்போது யுத்தங்களுக்குப் புதிய நியதிகளை வழங்கியுள்ளது. இந்த நியதி, வளங்களை எல்லா உயிர்களுக்கும் பகிர்தல் என்பதுடன் தொடர்புடையது. இயற்கை நியதிகள் எந்த மொழியில், எந்த எழுத்துருவில் எழுதப்பட்டவை என கிளப்பப்படும் கேள்விகள் அறிவுபூர்வமானவையே. அவை விதாண்டா வாதங்கள் அல்ல. அது, எந்த மானுடவியளாலராலும், தொல்லியல் அறிஞராலும், விஞ்ஞானியாலும், தத்துவவாதியாலும் விடை காண முடியாதவை என்பதல்ல.
சென்ற நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட இரு பெரும் உலக யுத்தங்களுக்குப் பிறகு நாடுகளுக்கு இடையே நிகழும் யுத்தங்களிலாகட்டும், உள்நாட்டுச் சமூகங்களுக்கு இடையே நிகழும் யுத்தங்களிலாகட்டும், யுத்தங்களுக்கான காரணங்கள் அறியமுடிவதைவிட அறிய முடியாதிருக்கும் காரணங்களே மிகுதியாக இருப்பதை உணரமுடிகிறது. ஒன்று மட்டும் தெளிவாக உள்ளது - மக்களின் நலம் புறக்கணிக்கப்பட்ட இன்றைய அரசியல், சரியாகச் சொன்னால் மனிதனின் வாழ்வியலில் எல்லா நிலைகளிலும் ஊடாடும் அரசியல் போர்வையில் உள்ள வலிமையான ஒன்று காரணமாக இருக்கிறது என்பதுதான் அது. இன்றளவில் அதற்கு வார்த்தைக் குறியீடோ, உருவக் குறியீடோ இல்லை.
உலக யுத்தங்களுக்குப் பிறகு நாகரிக மனிதனின் கனவு, யுத்தமற்ற பூமி’யைப் படைத்து சந்ததிகளுக்கு வழங்குவதாக இருந்தது. உலகைப் பிரதிநிதித்துவம் கொண்ட உயர்ந்த நோக்கிலான பன்னாட்டு அமைப்பு (ஐக்கிய நாடுகள் சபை) அதற்காகவே அமைக்கப்பட்டது. அந்த உலகில், உரையாடல்களால் அனைத்தும் சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உரையாட வார்த்தைகள் இருந்தும், விசாலமான இட வசதிகள் இருந்தும், பாதுகாப்பு உத்திரவாதங்கள் இருந்தும், பிரச்னைகளின் முகமும் ஆழமும் துல்லியமாக அறிந்திருந்தும், உரையாடல்கள் நிகழ்த்தப்படுவதில்லை. தற்காலத்தில் ஒவ்வொரு நாடும் போரிட்டுக்கொண்டிருக்கிறது அல்லது போருக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது என்பதில் இது மேலும் உறுதியாகிறது. உரையாடல்கள் நிகழ்த்தப்படாமல் இருப்பதற்கான காரணங்கள், அறிதல் புலத்துக்கு அப்பாற்பட்டு இருப்பதாகத் தோன்றுகிறது.
இன்றைய யுத்தங்கள் குறித்து நம்முடைய திகைப்பு நிலைக்கு தனிமனித விருப்பும், கட்டுப்பாடற்ற வியாபார நோக்கிலான ஆயுதங்களின் உற்பத்தியும், அவற்றின் கட்டுப்பாடற்ற விற்பனையும் முதன்மையான காரணங்கள் என்பது எளிதில் விளங்குகிறது. உற்பத்திப் பொருட்களின் தரமும், தரவீழ்ச்சியும்கூட கூடுதல் காரணமாக இருக்கிறது.
விலங்குலகில் மனித இனம் ஓர் அங்கம் எனில், விலங்கினத்தின் பொதுவான குணங்களில் இருந்து மனித இனத்தை அந்நியப்படுத்திக் காண்பதில் எந்த நியாயமும் இருக்கமுடியாது. மனித இனம் தவிர வேறு எந்த உயிரினமும், இயற்கையிடமிருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொண்ட தலைமுறையை உருவாக்கியிருந்ததாக, நாம் அறிந்த அறிவியல் சொல்வதில்லை. நவீன மனிதன் இன்று பயணித்துக்கொண்டிருக்கும் நுகர்வுக் கலாசாரம், அவனை இயற்கையிடமிருந்து அந்நியப்படுத்தி வைத்துள்ளது. இதன் விளைவுதான், இயற்கையின் நியதிகளை மீறுவதும், அதற்கு எதிராகச் செயல்படுவதும். நுகர்வுக் கலாசாரத்தின் விதைகள், தொழில்மயமாதலில் விதைக்கப்பட்டதாக இருக்கிறது. தேவைக்கு உற்பத்தி என்பது இயற்கை நியதி. உற்பத்திக்குத் தேவையை, அதாவது சந்தையை உருவாக்குவது இயற்கைப் புறனே. முன்னர் குறிப்பிட்ட பொருள்களின் தரம், தரவீழ்ச்சி முறையே நியதி மற்றும் புறன் பக்கங்களை அலங்கரிக்கலாம்.
நுகர்வுக் கலாசாரத்தில், நுகர்வுக் கலாசாரத்தின் உற்பத்தியாளர்களும் அதன் காவலர்களுமாக விளங்கும் தொழில் நிறுவனங்களின் ஆதிக்கம், அரசுகளை வழிநடத்திக்கொண்டிருக்கின்றன; அரசியல் நிகழ்வுகளில் அவற்றின் சாயல்கள் துலக்கமாக இருக்கின்றன. அதனால், அரசுகளை மீறி அவை செயல்பட்டு வருகின்றன. எதோச்சதிகார அரசுகளுடன் இவை கைகோர்த்துள்ள விளைவுகளைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகளுடன் இவை கைகோர்த்துள்ள விளைவுகளின் கேடு அதீதமானவை; நமது கற்பனைகளுக்கும் புரிதல்களுக்கும் எளிதில் வசப்படாதவை.
பகிர்தலை முற்றாக நிராகரித்துள்ள நுகர்வுக் கலாசாரக் காலத்தில், எல்லாமும் நுகர்வுப் பண்டமாக இருப்பதில் யாரும் கேள்வி கேட்கமுடியாது; இங்கு எல்லாமும் என்பதில் தலைமையும், அரசும், அதிகாரமும், நிறுவன அமைப்புகளும், பொருளாதாரமும், அரசியலும், தத்துவமும், மதமும், நேயமும், அன்பும், பரிவும் அடங்கி, அவை அனைத்தும் நுகர்வுப்பண்டமாக இருப்பதையும் யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்தப் பின்னணியில், இன்றைய யுத்தங்கள்கூட ஒரு நுகர்வுப் பண்டமாக இருப்பதுதானோ என ஐயப்படாமல் இருக்க முடியவில்லை. எனில், அதில் பண்பாட்டின் சுவடுகளைத் தேடுவது வீண் செயல் மட்டுமே.
இப்பின்புலத்தில், தானொரு சமூகத்தின் அங்கமா அல்லது தனிமனிதனா என்ற புதிருக்குள் அகப்பட்டுள்ள தனிமனிதனிடத்தில், ஒருவகை கையறு நிலையை உருவாக்கியுள்ளது. இதுவே, அவனது எல்லா செயல்களுக்கும் ஊரைப்போல் நானும் மற்றும், தற்காலத்தின் பிரதிநிதி நான் எனும் ஒரு தர்க்கமற்ற கருத்துருவத்தின் வசதியை அவனுக்கு அளித்துள்ளது. ஒரு தத்துவ உருவகத்தை இந்நிலைக்கு வழங்கமுடியும் என்றால், அதில் நிச்சயமாக இந்தவார்த்தைகள் இருக்கும் – ‘தற்காலத்தில் ஒவ்வொரு தனியனும் தனக்கான சமூகத்தைப் படைக்க விரும்பி, அவ்விருப்பத்தின்படியே தன் செயல்களை அமைத்துக்கொள்கின்றான். ஆனால், அவனுள் இருக்கும் பிரச்னை, தற்போது அவன் தான் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதியா அல்லது தான் படைக்க விரும்பும் சமூகத்தின் பிரதிநிதியா என்ற உளவியல் சார்ந்ததுதான். ஏனெனில், தற்காலத்துச் சமூகம் குறித்து அவனுக்கு எவ்வளவு வெளிப்படுத்தப்படும் அவநம்பிக்கை உள்ளதோ, அதைவிட பலமடங்கு கூடுதலான வெளிப்படுத்தப்படாத நம்பிகை இழப்பு, தான் படைக்க விரும்பும் சமூகத்தின் மீது உள்ளது’.
அதனால்தான், மனிதன் புரியும் இன்றைய யுத்தங்களுக்குப் பொருள் புரியாமல் திகைக்கின்றனர். காரணம் தேடுவோர், எக்காலத்திலும், எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், சரி செய்யவே முடியாத, எப்போதும் எங்கும் ஒன்றுபோலவே இருக்க முடியாத பொருளாதாரக் காரணங்களையும், சமூகத்தில் எல்லாவற்றிலும் நிகழும் ஏற்றத்தாழ்வுகளையும், பரஸ்பர நம்பிக்கை இழப்பையும் சுட்டுகின்றனர். இதனால்தான், இன்றைய யுத்தங்கள் ஒரு சமூகத்தைப் பிரதிபலிப்பதாகவோ, ஒரு நாட்டைப் பிரதிபலிப்பதாகவோ, ஒரு மதத்தைப் பிரதிபலிப்பதாகவோ, ஒரு இனத்தைப் பிரதிபலிப்பதாகவோ இருப்பதில்லை.
‘யுத்த பூமி’யின் பக்கங்களின் நோக்கம், இன்றைய யுத்தங்களின் காரணங்களை தேடுவதோ, அவை மேன்மையானவை, கீழ்மையானவை என்ற மதிப்பீடுகளை வழங்குவதும் அல்ல. அவை பண்பாட்டினைச் சுமந்திருக்கின்றனவா; பண்பாட்டின் சாயலைக் கொண்டிருக்கின்றனவா; கிஞ்சித்தும் பண்பாடு என்ற ஒன்று அவற்றுள் உள்ளதா என்ற தேடுதலை முன்னிறுத்துவதும் அல்ல. மேலாக, இன்றைய யுத்தங்களை வேறு எவற்றுடனும் ஒப்பிடுவதும் அல்ல. இருந்தும், வலிமையாக உள்ள முரண்களை அடையாளப்படுத்திக்கொள்வதே நோக்கம்.
நமது முன்னோர்களுக்கு, போர்கள் அவர்களது பண்பாட்டின் அங்கமாக இருந்தன. அப்படி ஒரு பண்பாட்டின் அடையாளத்தை வழங்கி இருப்பவைதாம் ‘நடுகற்கள் சுட்டும் போர்கள்’. நடுகற்கள், நினைவுச் சின்ன வகைகளில் ஒன்று. நடுகற்களில் இருந்து கிளைத்தது ‘வீர வழிபாடு’. ‘மூத்தோர் வழிபாடு’ என்று குறிக்கப்படும் ‘நீத்தோர் வழிபாடு’ம் ‘வீர வழிபாடு’ம், வழிபாட்டு மரபின் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. இவை இன்றைக்கு ஐயமற்று 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டு, தொடர்ச்சியாகத் தொடரப்பட்டு வரும் ஒரு மரபின் நிச்சய வெளிப்பாடுகள். மூத்தோர் வழிபாடுகள், இன்னும் பழமையான காலகட்டத்தில் இருந்து குறிப்பாக புதிய கற்காலப் பண்பாட்டிலிருந்து தொடரப்படும் ஒன்றாக இருக்கக்கூடும்.
குந்தாரஅல்லி (எ) குதிரைவல்லி நடுகல்
 
நடுகல்
 
நடுகற்கள் சுமந்திருக்கும் கல்வெட்டுகள், ஆநிரை தொடர்பாக நடுகல் வீரன் புரிந்த போர்களை ‘பூசல்’ என்று குறிப்பிடுகின்றன. பூசல் என்ற சொல்லுக்கு இன்று அறிப்படும் அகராதிகள் தரும் விளக்கமான ‘தகராறு’, ‘கருத்து முரண்பாடு’ ‘ஆரவாரம்’, ‘ஓசை’, ‘கழுவல்’, ‘வருத்தம்’ என்பனவற்றில் இருந்து கல்வெட்டுப் பயன்பாடு முற்றிலும் மாறுபட்டது. நடுகற்களில் பூசல் என்பது போரையே குறிக்கும். பூசலை அடியொட்டியே, ‘பூசல் மயக்கம்’, ‘பூசல் மாற்று’, ‘பூசல் விலக்கு’, ‘பூசல் நெற்றி’, ‘பூசற்களம்’, ‘பூசற்களரி’, ‘பூசற்கோழை’, ‘பூசற்பறை’, ‘பூசற்றுடி’ (பூசல்துடி), ‘பூசற்பாக்கியம்’, ‘பூசற்றண்ணுமை’என்ற தொடர்கள், போர் தொடர்பாகவும், போர் நிகழ்வின் பகுதிகளைச் சுட்டவும் தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன.
‘யுத்த பூமி’யின் பக்கங்கள், ‘பூசல்’, ‘போர்’ மற்றும் ‘யுத்தம்’ ஆகிய சொற்களை சமமானப் பொருளிலேயே பயன்படுத்துகிறது.
நடுகற்கள், இன்றைய தமிழகத்தின் வடபகுதியில் குறிப்பாக வரலாற்றுத் துவக்கம் முதல் அறிய முடிகின்ற அதியமான் மரபினர் ஆட்சி புரிந்த சங்ககால தகடூர் நாட்டிலும், அதில் இருந்து பிரிந்த மற்றும் அதன் அண்டை நாட்டுப் பகுதிகளான செங்கம், திருக்கோவிலூரிலும், ஆந்திரத்தின் சித்தூர், கர்நாடகத்தின் கோலார் மற்றும் மைசூர்ப் பகுதிகளிலும் நிரக்கக் கிடைத்து வருகின்றன. குறிஞ்சி - முல்லை நிலங்கள் நிறைந்த மேய்ச்சல் சமூகம் வாழ சாதகமான இப்பகுதியின் இயற்கை அமைப்பு என்பது இதற்குக் காரணமாக இருக்கிறது. நடுகல் வகைகளைக் கணக்கில் கொண்டால், நடுகல் எழுப்பும் மரபு ஐவகை நிலத்துக்கும் உரியதாக இருந்திருக்க சாத்தியக்கூறுகள் மிகுதி. மருத நிலத்தின் வளர்ச்சியும், பெருந்தெய்வ வழிபாட்டின் மிகை வளர்ச்சியும், பிற பகுதிகளில் நடுகல் மரபை தேய்வடையச் செய்துள்ளன. இது குறித்து, வரும் அத்தியாயங்களில் ஒன்றில் விரிவாக ஆலோசிக்கப்போகிறோம்.
பெண்ணேசுவரமடம் நடுகல்
 
பெண்ணேசுவரமடம் நடுகல்
 
நடுகற்களின் வரலாறு தொடர்ச்சியாக இருக்கிறது. கிடைக்கப்பெற்ற தொல்பொருள் சான்றுகளும் இலக்கியங்களும், ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அறுபடாத தொடர்ச்சியைக் காட்டுகின்றன. வடஇந்தியாவில் மகாஜனபதங்களை விழுங்கி எழுந்த நந்தப் பேரரசுக் காலத்திலும், வடமேற்கே சிந்து இந்தியாவை மகா அலெக்சாண்டர் தாக்கியபோதும், தமிழரசுகளின் நிலத்தில் மௌரியர் ஊடுருவ முயன்று கொண்டிருந்த காலகட்டத்திலும், 1300 ஆண்டுகள் (113 ஆண்டுகள்?)* நீடித்த தமிழகக் கூட்டுப்படையை தகர்த்ததாகப் பெருமைபட்டுக்கொண்ட கலிங்கத்தின் காரவேலன் காலத்திலும், சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இமயம் வரை திக்விஜயம் செய்து இமயத்தில் தம் முத்திரைகளைப் பதித்த காலகட்டத்திலும், சங்க காலத் தமிழரசுகளின் சமநிலைக் குறைவுக்கும், வீழ்ச்சிக்கும் வித்திட்ட ‘தகடூர்ப் பெரும் போர்’ நிகழ்ந்த காலகட்டத்திலும், தமிழ் நிலத்தில் தமிழரசுகள் நீங்கி, அந்நியர் முதன்முதலில் ஆட்பட்ட களப்பிரர் ஆட்சிக்காலங்களிலும், களப்பிரர் ஆட்சியை நீக்கிய வடதமிழகப் பல்லவர் – தென் தமிழக இடைக்காலப் பாண்டியர் காலகட்டத்திலும், பல்லவர் - சாளுக்கியர் தொடர் போர்களின் போதும், பிற்காலச் சோழப் பேரரசுக் காலத்திலும், சோழப் பேரரசுக் காலத்துக்குப் பிறகு இரண்டாம் முறையாக தமிழகம் தமிழ் அரசுகளற்ற அந்நியர் வசம் ஆட்சியை இழந்த போசளர், விஜயநகர் ஆட்சிக் காலங்களிலும் அறுபடா தொடர்ச்சி என்பது தமிழ் / தமிழ்க் கிளைச் சமுதாயத்தின் பண்பாட்டின் செழுமையின் அடையாளமே தவிர, நிலையான தன்மைகொண்ட மாறா சமுதாயத்தின் அடையாளம் அல்ல.
காலந்தோறும் இச்சமுதாயத்தில் கோட்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அறிவியல் முன்னேற்றம் கண்டுள்ளது. இயற்கையின் மாறுபாடுகளை உள்வாங்கிக்கொண்டிருக்கிறது. சுற்றுச் சூழலின் மாறுபாடுகளுடன் இயைந்துள்ளது. கனிம வளங்களைத் தக்கவாறு பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. தொழில்நுட்பத்தின் மாறுபாடுகளை தனக்குள் ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான திணைக் கோட்பாட்டு வாழ்க்கையில், மேலே குறிப்பிட்ட மாற்றங்கள் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இது, ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் பாண்பாட்டுக் கூறுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை அளித்துள்ளது. இவை பற்றிய அக்கறை தமிழக அரசியல், சமுதாய, பண்பாட்டு வரலாற்றின் மீள் உருவாக்கத்தில் போதாமையையும் தேக்கத்தையும் நீக்கும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றது. இவ்வாறு கிடைத்துள்ள வெளிச்சத்தை கருவியாகக் கொண்டும், புதியதாகப் பரந்துபட்டுக் கிடைத்துவரும் முதன்மைச் சான்றுகளின் துணையில் ‘யுத்த பூமி’யின் பக்கங்கள் புதிய முன்னிருப்புகளை வைக்கிறது. குறிப்பாக, போர்க் கருவிகளின் குணங்கள், பயன்பாடு, போரின் நோக்கம், இவற்றின் ஊடாகப் பிணைந்துள்ள அக்கால பண்பாடு ஆகியவை குறித்து ‘யுத்த பூமி’யின் பக்கங்களில் கூடுதல் அக்கறை காட்டப்பட்டுள்ளது.
நடுகற்கள் ஊடே மேற்கொள்ளப்பட்ட மாந்தரினத்தின் பரிணாம வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் தேடும் தொல்லியல் பயணம்தான் இந்த ‘யுத்த பூமி’ என்பதை நினைவுக்குக் கொண்டுவருவோம்.
குறிப்பு
* : காரவேலனின் மு.பொ.ஆ.165-ல் (மு.பொ.ஆ.174 - எனக்கொள்வாரும், காலத்தில் முரண்படுவாரும் உண்டு) பொறிக்கப்பட்ட அத்திக்கும்பா கல்வெட்டு, விருப்பு வெறுப்பான மற்றும் அனுமானமான வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டதாக உள்ளது. கல்வெட்டின் 10-11-ம் வரிகளில் குறிப்பிடப்படும் 1300 ஆண்டுகள் என்பது, 113 ஆண்டுகள் நீடித்திருந்த தமிழர் கூட்டணிப் படையை உடைத்ததாகத் திருத்த வாசிப்பு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கல்வெட்டு 1300 ஆண்டுகள் என்றே தெளிவாக உள்ளதாகப் பல ஆங்கில, ஹிந்தி, சமஸ்கிருத மொழிபெயர்ப்புகள் தெரிவிக்கின்றன. தமிழ்க் கூட்டணிப் படை 1300 ஆண்டுகள் பழமையுடையதாக இருக்கமுடியாது எனவும், 1300 ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட காலக்குறிப்பு எனக்கொண்டு, உண்மையில் இது 113 ஆண்டுகளாகவே இருக்கமுடியும் எனவும் திருத்த வாசிப்பு நிகழ்த்தப்பட்டது. காரவேலன் கல்வெட்டு குறித்த மேல்விவரங்களும், ஆய்வுக் குறிப்புகளும், ‘காரவேலன் கல்வெட்டும் தமிழகமும்’ என்ற தலைப்பில் அடுத்து வரும் அத்தியாயங்களில் வெளியாகின்றன.

நன்றி :- தினமணி


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment