பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Sunday, January 11, 2015

பெருமாள் முருகனும் போலி கலாசாரக் காவலர்களும்




சில நாட்களுக்கு முன் பெருமாள்முருகனின் 'மாதொரு பாகன்' புதினத்தை வாசித்தவுடன் முதலில் தோன்றியது இதுதான்.

'இந்த நூலில் உள்ள ஒரு விவகாரமான சமாச்சாரம் ஏன் போலி கலாசார காவலர்களின் கண்களில் இன்னமும் ஏன் படவில்லை?' அப்படியாவது எழுத்தாளரின் மீதும் அவரின் படைப்புகளின் மீதும் மேலதிக கவனம் குவியாதா என்கிற நப்பாசைதான் அதற்கு காரணம். நம்முடைய கலாசார தொன்மங்களின் பண்பாட்டு வழக்கங்களின் சொச்சங்களை  திணிக்கப்பட்டதின் மூலம் அறிகிறோம் அல்லது கண்மூடித்தனமாக பின்பற்றுகிறோமே ஒழிய அதை ஆய்வு நோக்கில் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக எவ்வித ஆர்வத்தையும் காட்டாத அதில் ஈடுபடாத ஓர் உழைப்பற்ற, சொரணையற்ற சமூகமாகத்தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். மிகுந்த உழைப்பிற்கும் ஆர்வத்திற்கு பின்னும் எழுதப்படும் ஆய்வுகள் அதன் மீது அமைந்த புதினங்களும் கவனிக்கப்படாமலேயே மறைந்து போகின்றன. ஆய்வாளர்களுக்கு சோர்வளிக்கின்றன.

ஆனால் இவைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தங்களின் அடிப்படைவாத கண்ணாடிகளின் மூலமே மேம்போக்காக தெரிந்து கொண்டு அவைகளை சர்ச்சையாக்கும் எதிர்க்கும் கும்பலும் இருக்கிறது. அப்படியாக திருச்செங்கோட்டில் இந்த நாவலை எரித்தும் தடைசெய்யக் கோரியும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டம் செய்திருக்கும் தொடர்பான செய்தியை வாசித்தேன். சிலர் எழுத்தாளரின் வீடு தேடி சென்று மிரட்டியதாகவும் தெரிகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் தம்முடைய குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக காவல்துறையிடம் மனுவொன்றையும் அளித்திருக்கிறார்.

பெருமாள் முருகன் கொங்கு சமூகம் சார்ந்து பல ஆய்வுகளையும் அதன் கலாசாரக் கூறுகள் விரவிக் கிடக்கும் புதினங்களையும் எழுதியிருக்கும் பண்பட்ட எழுத்தாளர். கொங்கு வட்டாரச் சொல்லகராதி ஒன்றை தொகுத்தளித்திருக்கிறார். முனைவர் பட்டம் பெற்றவர். அரசுக் கல்லூரியல் பேராசிரியராக பணியாற்றுகிறவர். கண்டனம் தெரிவித்திருக்கும் கும்பல் இவரின் இந்த அரிய பணிகளுக்காக இதற்கு முன் ஒருமுறையாவது பாராட்ட முன்வந்திருக்குமா என்று தெரியாது. அதைச் செய்ய வேண்டுமென்றால் எழுத்தாளர் எழுதிய நூல்களை எல்லாம் படித்திருக்க வேண்டும். அது கடினமான விஷயம். அதை விடவும் ஒரு நூலின் ஒரு பகுதியை மாத்திரம் தவறாக வாசித்து விட்டு அல்லது வேண்டுமென்றே தவறாக சித்தரித்து கும்பலில் கத்துவதும் நூலை எரிப்பதும் அதன் மூலம் அரசியல் செய்வதும் எளிதான விஷயம். இம்மாதிரி செய்வதில் எந்த மதத்தின் அடிப்படைவாதிகளின் முட்டாள்தனங்களும் விதிவிலக்கல்ல. சாத்தானின் வேதமும் லஜ்ஜாவும் டாவின்சிகோடும் ஆழிசூழ்உலகும் உதாரணங்கள்.

பெருமாள் முருகனின் நாவலில் அப்படி என்னதான் பிரச்சினை? ஆங்கிலேய ஆட்சியின் இறுதிக் காலக்கட்டத்தின் கொங்கு சமூக பின்புலத்தில் இயங்கும் இந்த நாவலில் குழந்தைப் பேறு இல்லாத ஒரு தம்பதியினரின் சிக்கல்கள் மிக விஸ்தாரமாக விவரிக்கப்படுகின்றன. இவ்வாறு குழந்தைப் பேறு இல்லாத பெண்களின் குறையைப் போக்குவதற்காக அச்சமூகத்தின் பண்பாட்டுக்கூறுகளிலேயே ஒரு தீர்வு உள்ளது. அதன்படி ஒரு திருவிழாவின் 13 வது நாளில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் எந்தவொரு ஆணும் பெண்ணும் பரஸ்பர விருப்பத்தின் பேரில் பாலுறவு கொள்ள முடியும். அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் சாமி தந்த பிள்ளைகள் என்பது ஐதீகம். இதில் பங்கேற்கும் ஆண்கள் சாமிகளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.

இந்த விஷயத்தை தமது நாவலில் மிகுந்த கலையுணர்வுடனும் அழகியலுடனும் மிக ஜாக்கிரதையாக கையாண்டுள்ளார் எழுத்தாளர் பெருமாள்முருகன். நாவலை பரபரப்பாக்குவதற்காக ஆபாசமாக கையாளவில்லை என்பது நாவலை வாசிப்பவர்கள் உணர முடியும். நாவலில் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் பகுதியை எழுத்தாளர் ஏதோ கற்பனை செய்து எழுதவில்லை. தாம் மேற்கொண்ட ஆய்வுகளில் வெளிப்பட்ட விஷயத்தை வைத்தே எழுதியுள்ளார். மேலும் எழுத்தாளர் இது போன்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவதன் மூலம் கவனஈர்ப்பு பெறும் மலினமான உத்திகளை கையாள்வதில் நம்பிக்கை கொண்டவரில்லை என்பதை முன்னுரையின் இந்தப் பகுதியை வாசித்தாலே விளங்கும்.
என் நாவல்கள் பற்றிய பரபரப்புகளை உருவாக்குவதில் எப்போதுமே நான் முனைவதில்லை. முந்தைய என் நாவல்கள் மிக மெதுவாகவே வாசகர்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. 'கங்கணம்' வெளியாகி மூன்றாண்டுகளுக்குப் பின் இப்போதுதான் பரவலாக கவனம் பெறுகின்றது. எனக்கும் ஒன்றும் அவசரமில்லை. இந்நாவல் தொடர்பாகவும் அதே மனநிலையில்தான் இருக்கின்றேன்.


வருகிற புத்தக கண்காட்சியில் இந்த நூலின் விற்பனையைப் பெருக்குவதற்காகத்தான் இந்த சர்ச்சை ஊதிப்பெருக்கப்படுகிறது என்று பெருமாள் முருகனின் மீது அபாண்டமாக குற்றஞ்சாட்ட முயல்கிறவர்கள் இந்த நூலையோ அல்லது எழுத்தாளரின் முந்தைய பணிகளின் மூலமோ அவரைப் புரிந்து கொள்ள முயல்வது நல்லது. கலைப் படைப்புகளின் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் இம்மாதிரியான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியன. ஒரு பத்திருபது பேர் கொண்ட அமைப்பு இணைந்து இம்மாதிரியான ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தி விடுவதின் மூலம் எத்தனை பதற்றத்தையும் கவனஈர்ப்பையும் செய்து விட முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களால் ஒரு திரைப்படத்தின் வெளியீட்டை தடுத்து விட முடிகிறது, சென்சார் ஆனதிற்குப் பின்னரும் அதை தாங்கள் பார்த்தபின்தான் அனுமதியளிக்க வேண்டும் என்று சாதிக்க முடிகிறது, அதன் பின் தங்களின் பேரங்களையும் அரசியல் ஆதாய லாபங்களையும் பெற்றுக் கொள்ள முடிகிறது என்பது போன்ற செயல்களெல்லாம் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள்தான். இம்மாதிரியான போலியான நபர்களின் போராட்டங்கள் குறைந்த பட்சம் கூட வெற்றி பெறுவதை அனுமதிக்கவே கூடாது. இம்மாதிரியான நபர்கள் செய்யும் மலினமான போராட்டங்களின் மூலம் இவர்களின் ஒட்டுமொத்த அமைப்பையும் பொதுச்சமூகம் கேலியாகத்தான் பார்க்கும் என்கிற எளிய உண்மையையாவது இவர்கள் உணர்வது நல்லது.

திருவள்ளுவரின் காமத்துப் பாடல்களிலிருந்து சங்கப்பாடல்கள்,, ஆண்டாளின் ஏக்கங்களில் வழிந்த அற்புதப்பாடல்கள் என்று காமத்தைக் கொண்டாடின கலாசார தொடர்ச்சியின் சமூகம் நாம். ஆனால் அதையெல்லாம் இடையில் பாசாங்குகளால் மூடிவிட்டு தங்களை பண்பாட்டு காவலர்களாக சித்தரித்துக் கொண்டு ஒருபுறம் பாலியல் வறட்சியால் துன்புற்றுக் கொண்டு இருட்டுப் பிரதேசங்களில் பெண்களின் மீதான பாலியல் வன்முறை நிகழ்த்திக் கொண்டு எத்தனை போலித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

எழுத்தாளர் பெருமாள் முருகனின் மீது நிகழும் இந்த கருத்து மற்றும் பெளதீக ரீதியான தாக்குதல்களும் தரப்படும் மனஉளைச்சல்களும் அறிவுசார் சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். ஓரணியாக இணைந்து அவருக்கு ஆதரவு தர வேண்டும். மாதொருபாகன் நாவலின் முன்னுரையில் "இந்த ஆயவில் கிடைத்திருக்கும் தரவுகளை வைத்து விரிவானதொரு ஆய்வு நூல் எழுதவிருக்கும் திட்டத்தைப் பற்றி" எழுத்தாளர் தெரிவித்திருந்தார். ஆனால் இது போன்ற எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் அந்த முயற்சிகளை ஒருவேளை சோர்வடையச் செய்ய வைக்கக்கூடும் ஆபத்துக்களையும் நாம் கவனிக்க வேண்டும். அதன் மூலம் ஏற்படும் கலை இழப்புகள் இச்சமூகத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

இந்தப் பதிவை வாசிக்கும் நண்பர்களிடம் நான் வேண்டிக் கொள்வது இதுதான். மாதொருபாகன் புதினத்தின் தொடர்ச்சியாக அதன் இரு வேறு பரிமாணத்தில் இரண்டு புதிய புதினங்களை பெருமாள்முருகன் எழுதியுள்ளதாக தெரிகிறது. வருகிற புத்தக கண்காட்சியில் அவை வெளியாகலாம். மாதொருபாகன் நுலோடு இணைத்து இந்த இருநூல்களையும் நண்பர்கள் வாங்கி வாசிக்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம்தான் எழுத்தாளருக்கு ஆதரவு தருவதோடு இதன் எதிர்ப்பாளர்களுக்கு நாம் தரும் பதிலாகத்தான் அது அமையும்.

என்னுடைய இந்த வேண்டுகோளை பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன்.

(பின்குறிப்பு: இந்தியர்களின் இணையத் தேடல்கள்கள் தொடர்பாக நிகழ்ந்த ஒரு ஆய்வின் முடிவின் படி இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் முதன்மையிடத்தைப் பிடித்துள்ளவர் பார்ன் வீடியோக்களில் நடித்துள்ள தோழர் சன்னி லியோன். இந்த தேடலில் மதஅடிப்படைவாதிகளுக்கும் கலாசார காவலர்களுக்கும் பங்கிருக்காது என நம்புகிறேன். ஏனெனில் அவர்கள் மானஸ்தர்கள்).


suresh kannan


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment