பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, November 8, 2014

தென்னைமரவாடியில் 1970க்கு முந்தைய உரிமையாளர்களுக்கு அனுமதி44 ஆண்டுகளுக்கு முந்தைய உறுதிப்பத்திரம் வைத்துள்ள தமிழ் விவசாயிகளுக்கு அனுமதி


இலங்கையில் திருகோணமலை, குச்சைவெளி பிரதேசத்திலுள்ள தென்னைமரவாடி கிராமத்தில் 1970க்கு முற்பட்ட காணி உரிமைப் பத்திரங்களை வைத்துள்ள தமிழ் விவசாயிகளை பயிர்ச்செய்கையில் ஈடுபட அனுமதிக்குமாறு கிழக்கு மாகாண காணி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அதிகாரிகளை பணித்துள்ளார்.
தென்னைமரவாடி பகுதி தமிழ் விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியாதவாறு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து ஆராயும் பொருட்டு மாகாண காணி அமைச்சில் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான கூட்டமொன்றிலேயே அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மாகாண காணி ஆணையாளர் மற்றும் மாவட்ட நில அளவையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்திற்கு திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
1970க்கு முற்பட்ட காணி உரிமைப் பத்திரங்களை வைத்திருக்கின்ற 129 பேரும் தமது காணிகளில் விவசாய செய்கையில் ஈடுபடுவதில் உள்ள தடைகளை நீக்குமாறு காணி அமைச்சர் மாகாண காணி ஆணையாளரை பணித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரான சி. தண்டாயுதபாணி கூறினார்.
குறித்த காணிகளில் அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களினால் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமானால் பொலிஸாரின் உதவியை நாடுவது தொடர்பாகவும் அமைச்சரது பணிப்புரையில் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

2013 உறுதிப் பத்திரங்கள் மீளாய்வு

எனினும், 2013 ஆண்டு வழங்கப்பட்ட 31 காணி உரிமைப் பத்திரங்கள் தொடர்பாக ஆராயப்பட்டபோது, அதில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி அதனை மீளாய்வு செய்து தகுதியானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாகாண காணி ஆணையாளரால் கூறப்பட்டதை அமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளமை தமக்கு ஏமாற்றம் அளித்ததாகவும் தண்டாயுதபாணி கூறினார்.
போருக்குப் பின்னர் தென்னைமரவாடியில் மீள்குடியேறிய தமிழ் விவசாயிகள் தமது வயல் நில உரிமை தொடர்பாக பிரச்சனைகளுக்கு தொடர்ந்தும் முகம் கொடுக்க வேண்டிய நிலையே காணப்படுகின்றது.
அந்த நிலங்களில் அத்துமீறி வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுவரும் சிங்கள விவசாயிகளும் அந்நிலங்களுக்கு உரிமை கோருவதையடுத்தே இந்த பிரச்சனையை தமிழ் விவசாயிகள் எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பான தீர்மானமொன்றுக்கு வரும்வரை இந்த ஆண்டுக்கான பெரும்போக நெல் வேளாண்மைக்கு மாகாண காணி ஆணையாளரால் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment