பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, October 2, 2014

யாழ்ப்பாணம் : கோப்பாய் குதிரையடிக் குளம்


குதிரையின் காற்தடம் போலக் காட்சியளிக்கும் சங்கிலி மன்னன் நீராடிய கோப்பாய் குதிரையடிக் குளம். யாழ்ப்பாண இராட்சியத்திற்கும் வலி கிழக்கிற்கும் நெருக்கமான தொடர்புகள் உண்டு. யாழ்ப்பாண இராட்சியத்தின் போது தமிழ் நாட்டிற்கு செல்வதற்கு பாக்கு நீரிணை வழியாக கடல்வழி படகுச்சேவை இடம்பெற்றது. இதன் காரணமாக இரு பகுதி மக்களிடையும் குடும்ப உறவு நெருக்கமாக இருந்தது. வலி கிழக்கின் வடக்கெல்லையின் பாக்குநீரினை கடல் இருப்பதால் நல்லூரை தலைநகராக கொண்டு ஆட்சிசெய்து கொண்டிருந்த யாழ்ப்பாண மன்னர்கள், பிரதானிகள் என்போர் தமிழ்நாட்டுக்கு நாளாந்தம் சென்று திரும்பியதும் குடும்ப உறவுகளை தமிழ்நாட்டுடன் நிலை நிறுத்தியிருந்ததும் வரலாற்று உண்மையாகும்.

நல்லூரின் வடக்குப் புறமாக அமைந்துள்ளது வலிகிழக்குப் பிரதேசமாகும். தமிழ் மன்னர்களின் பாதுகாப்பிற்கும் அந்தரங்க அரசியல் நடவடிக்கைக்கும் ஏற்புடையதாகவும் பாதுகாப்பானவையாகவும் இருந்து வந்துள்ளன.

இந்தவகையில் வலிகிழக்கில் உள்ள புராதன ஆலயங்கள் தமிழ் மன்னர்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டுத் தலங்களாகவும் நேர்த்திகளை நிறைவு செய்யும் புனித தலமாகவும் திகழ்ந்தன.

நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோயில் நிறுவப்பட்டமையும் அதன் பூசைவழிபாட்டுக்களில் யாழ்ப்பாண இராட்சியத் தமிழ் மன்னர்களில்அமைச்சர்களும் பிரதானிகளும் கலந்து கொண்டு வழிபட்டமையும் வரலாற்று ஆதாரபூர்வமான நிரூபணமாகிறது. நல்லூர் கந்தசாமி கோயிலின் மேற்கு வீதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று அச்சுவேலியில் முடிவடையும் இராச வீதி யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்களின் அந்தரங்க வழிப்பாதையாக உபயோகிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு செல்வதற்கும் இந்த வீதி பயன்படுத்தப்பட்டது. மன்னர்களின் பயன்பாட்டில் இருந்தமையால் தான் இராச வீதி என்ற நாமம் வந்ததாகவும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாண மன்னர்கள் தமது பாதுகாப்புக்கருதி பல மறைவிடங்களையும் கொண்டிருந்தனர். கோப்பாய் மாவடி வளவு, இது அவர்களது விசுவாசமான பயன்பாட்டுக்குரிய இடமாக விளங்கியது. மாவடி வளவில் தங்கியிருந்த சங்கிலி மன்னன் நீராடுவதற்கு பயன்படுத்தப்பட்ட தடாகமே குதியடிக்குளமாகும். குளத்தின் வடிவமைப்பு குதிரையின் கால் அடிக்குளம்பு போல் காணப்படுவதால் குதியடிக்குளம் எனப் பெயர் வந்ததாக கூறப்படுகின்றது. இவ்குளம் யாழ்ப்பாணப் பருத்துறை பிரதான வீதியில் கோப்பாய் சந்திக்கும் பிரதேச செயலகத்திற்கும் கிழக்குப் புறமாக இருக்கும் பரந்த பிரதேசத்தினை உள்ளடக்கிய கோப்பாய் சந்திக்கு வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ள உணவகத்திற்கு முன்பாக கிழக்கு நோக்கிச் செல்லும் ஒழுங்கையில் 150 மீற்றர் தூரத்தில் தாமரைகள் நிரம்பிய தடாகம் காணப்படுகின்றது. குதியடிக் குளத்தை சூழவுள்ள பிரதேசம் மக்கள் இயல்பு நிலையில் நடமாட முடியாதவாறு முட்புதர்களால் சூழப்பட்டு காணப்படுகிறது. தற்பொழுது நீர் அருந்துவதற்கு ஏற்றவகையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. முக்கால் வட்டவடிவமாக குதியமைப்பில் சீமெந்தினால் சுவர் அமைக்கப்பட்டு 2004 இல் கமநல சேவைத்திணைக்களத்தினால் நீர்ப்பாசன குளம் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் புணரமைப்பு செய்யப்பட்டதாக தெரிய வருகின்றது.

நீர்வளமும் நிலவளமும் கொண்ட இந்தப் பிரதேசம் புதர் மண்டிக் காணப்படுகிறது. யுத்த நடவடிக்கைக்குட்பட்ட பிரதேசமாக இருந்தமையால் அந்தப்பிரதேசம் பாதுகாப்பிற்குட்பட்டதாக இருந்தது. அண்மைக்ககாலத்தில் இந்த இடத்தில் வெடிகுண்டுகள் அகற்றப்பட்ட போதிலும் பொதுமக்களின் இயல்பான பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாமல் புதர்மண்டிக் காணப்படுகிறது. அங்கு சமகால சந்ததியினர் அறிய வேண்டிய வரலாற்று உண்மைகள் பல மறைந்து கிடக்கின்றன.

யாழ்ப்பாண மன்னர்களின் தலைநகரான நல்லூருக்கு வடக்குப்பக்கமாக அமைந்திருந்த வலி கிழக்குப் பிரதேசம் மன்னர்களிற்கு வளம் சேர்க்கும் பெருநிலப்பரப்பாக அமைந்தது. வலி கிழக்கின் கிழக்கெல்லையான குடாக்கடல் நீரேரியில் உப்பும் அதை அண்டிய தாழ்நிலத்தில் செந்நெல்லும் விளைகின்றன. அதை அடுத்த பிரதேசத்தில் தென்னையும் மேட்டு நிலத்தில் பல்வேறு வகையான உணவுப் பொருட்களும் செய்கை பண்ணப்பட்டு வளங்கொளிக்கும் பிரதேசமாக விளங்குகிறது.

யாழ்ப்பாண இராட்சியத்தில் அமைந்துள்ள சைவக் கோயில்களில் பூசை வழிபாடுகளை செய்வதற்கும் மன்னர்களின் யாகங்கள் மற்றும் ஓமங்களை நிறைவு செய்வதற்கும் அந்தணர்கள் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டு வளமான வசதியான இடங்களில் குடியமர்த்தப்பட்டார்கள். இவ்வாறு குடியமர்த்தப்பட்ட குடியிருப்புக்கள் குதியடிப்பிரதேசத்தை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது.

கோப்பாயில் விசாலமான பிரதேசத்தை உள்ளடக்கிய பிராமணக்குடியிருப்பு அமைந்திருந்தது என்பதற்கு அந்தணர் பெயர் கொண்ட பிராமண ஓடை, குருக்கள் குடியிருப்பு, குருக்கள் ஒழுங்கை என்ற பெயர்கள் வழக்கில் உள்ளன.

இந்தப்பகுதியில் அமைந்திருந்த ஆலயங்களின் பூசகர்களாக இருந்த அந்தணர்கள் இந்துக்களுக்கான கிரியையினை மேற்கொண்டனர். இப்பிரதேசத்தில் அமைந்திருந்தவைரவர், நாச்சியார், காளி, அம்மன், வீரபத்திரர் போன்ற ஆலயங்கள் மன்னர்களின் வீரம்சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் களமாகவும் போர் வீரர் பயிற்சி பெறும் இடமாகவும் விளங்கின.

அந்தணர்களுக்கும் மன்னன் சங்கிலியனுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தமையால் குதியடிக்குளம் சார்ந்த குடியிருப்பில் பாதுகாப்புக் கருதி மன்னன் தங்கியிருந்து செல்வதாகவும் தங்கியிருந்த காலங்களில் குதியடிக்குளத்தை நீராடும் தடாகமாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. சங்கிலி மன்னனின் பாவனைக்குரியது என்பதை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் அதனை நினைவு கூரவும் குதியடிக்குளத்திற்கு செல்லும் ஒழுங்கையில் வளைவு அமைக்கப்பட்டதாகவும் இது பிற்காலத்தில் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

குதியடிக்குளத்தோடு சேர்ந்த அயல் பிரதேசங்களை நேரில் சென்று அவதானித்தால் பெருமளவில் செங்கல் மேடுகள் அகழிகள் காணப்படுகின்றன. இதன் மூலம் இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் செங்கல் கொண்டு நிர்மானிக்கப்பட்டிருந்தமையும் அவற்றின் அழிபாடுகள்தான் மேடுகள் என்பதையும் வெளிப்படையாக கண்டுகொள்ள முடிகிறது.

1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை யாழ் பருத்தித்துறை பிரதான வீதியூடாக யாழ் நகர் நோக்கி முன்னேறிய போது குதியடிக்குளத்துடன் சேர்ந்த பகுதியில் பெரும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்ததாகவும் அந்தப்பிரதேசம் பெரும் தாக்குதலுக்கு சேதமடைமந்ததாகவும் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் கட்டடம் யாவும் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

By – Shutharsan.S

பதிப்பாசிரியர் :- ourjaffna.com

     சி. சுதர்சன்

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

1 comments:

  1. தங்களின் மீள் வெளியீட்டுக்கு நன்றி

    ReplyDelete