பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, October 3, 2014

குற்றவாளிகள் விவர மத்திய தொகுப்பு


த்திய உளவு பிரிவு சமீபகாலங்களாக தமிழக கடற்கரையை தீவிரமாக கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. அண்டை நாடுகளோடு குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை, சீனாவோடு நட்புறவை ஏற்படுத்த இந்தியா முயற்சி எடுத்துவருகிறது. ஆனால், பாகிஸ்தானால் மூளை சலவை செய்யப்பட்ட, தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்ட பலர் இந்தியாவில் ஊடுருவி உள்ளனர். இது எந்த அளவுக்கு போய்விட்டது என்றால், காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய ராணுவம், விமானப்படை, கப்பல் படை வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நிவாரண பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவர்களின் ஒப்பற்ற பணிகளை கொச்சைப்படுத்தும் வகையில், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் ஸ்ரீநகரில் ஒரு பேனர் வைத்திருந்தார்கள். அதில், இந்திய ராணுவம் காஷ்மீரில் உள்ள இந்தியர்களுக்கு மட்டும் உதவுகிறதேயல்லாமல், காஷ்மீர் மக்களுக்கு உதவவில்லை, எங்களுக்கு இந்தியாவின் மீட்போ, உதவியோ தேவையில்லை என்று எழுதப்பட்டிருந்தது. எவ்வளவு பச்சை தேசதுரோகம்!. 



இதே உணர்வோடு உள்ளவர்கள் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பது, சமீபத்தில் தேசிய புலனாய்வு அமைப்பால் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள அருண் செல்வராசன் சம்பவத்தில் இருந்து புரிகிறது. இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யால் பயிற்சி பெற்றவர், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியால் அனுப்பி வைக்கப்பட்டவர். இப்போது தமிழக போலீஸ் கியூ பிரிவினர் ஒரு நல்ல முடிவை எடுத்துவிட்டார்கள். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இலங்கை தமிழர்களை கணக்கெடுக்கத்தொடங்கிவிட்டார்கள். அரசாங்கத்தில் பதிவு செய்தவர்களை மட்டுமல்லாமல், அரசின், போலீசின் கவனத்துக்கு வராமல் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதையும் நிச்சயமாக கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்கள் மிகவும் விழிப்புடன் செயல்படவேண்டும். பொதுமக்களும் இதை ஒரு சமுதாய கடமையாகக்கொண்டு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். 




இலங்கை தமிழர்களை கணக்கெடுப்பதுபோல, தமிழ்நாட்டில் போலீசாருக்கு இன்னும் ஒரு கடமை இருக்கிறது. இப்போதெல்லாம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ரோட்டில் நடந்துசெல்பவர்களிடம் சங்கிலிபறிப்பு என்பது தொடர்கதையாகிவிட்டது. குற்றவாளிகளையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இத்தகைய சம்பவங்களுக்கு தமிழக போலீசாரை மட்டும் குறைசொல்லி பயனில்லை. சேலத்திலும் இதுபோல தொடர் சங்கிலி பறிப்பு நடந்து கொண்டிருந்தது. சேலம் போலீசார் பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் இருந்து விமானத்தில் அவ்வப்போது வந்து இங்கு போலி பெயர்களில் வாங்கி வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள்களில் சுற்றிவந்து ஒரேநாளில் பல இடங்களில் சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்டுவிட்டு, மீண்டும் விமானத்தில் பறந்தோடுவதையே தொழிலாகக்கொண்டுள்ள இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையில், தமிழ்நாடு முழுவதும் தங்கள் கைவரிசையைக்காட்டி 300 பவுன் நகைகளை பறித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் போலீசார் திறமையுடன் புலன்விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிட்டனர். தமிழ்நாடு முழுவதும் இதே கோணத்தில் போலீசார் சங்கிலிபறிப்பு, திருட்டு போன்ற குற்றங்களைக் கண்டுபிடிக்க புலன்விசாரணை செய்யவேண்டும். ஏனெனில், இப்போதெல்லாம் வெளிமாநிலங்களில் இருந்து வரும் குற்றவாளிகளால்தான் சங்கிலிபறிப்பு, திருட்டுகள் நடத்தப்படுகின்றன என்ற சந்தேகம் இருக்கிறது. பல நேரங்களில் திறமைமிக்க நமது போலீசாரின் புலன்விசாரணையில் கிடைக்கும் இதுபோன்ற குற்றங்களை இழைக்கும் சமூகவிரோதிகளின் அங்க அடையாளங்கள், கைரேகைகள் தமிழ்நாட்டில் வழக்கமாக இதுபோன்ற குற்றங்களை செய்யும் குற்றவாளிகளின் அடையாளங்களோடு, கைரேகைகளோடு ஒத்துப்போவதில்லை. காரணம் நிச்சயமாக வெளிமாநிலங்களில் திருடுபவர்களின் கைவரிசையாகத்தான் இருக்கக்கூடும். வெளிமாநில குற்றவாளிகளை கண்டுபிடிக்க நாடுமுழுவதும் உள்ள இதுபோன்ற குற்றவாளிகள் தொடர்பான விவரங்களை நமது போலீசாரும் கண்டுபிடிக்கும் வகையிலான மத்திய விவர தொகுப்புகளை மத்திய அரசாங்கம் உருவாக்கவேண்டும். இதுபோல, அகில இந்திய அளவிலான விவர தொகுப்பு இருந்தால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் பலன் அளிக்கும். மேலும், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களை அவைகள் யாருக்கு சொந்தமானவைகள்? என்ற கணக்கும் உடனடியாக எடுக்கப்படவேண்டும்.

நன்றி : - தினத்தந்தி


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment