
இந்திய நிறுவனமாகிய ஜி. எம்.ஆர். வசமிருந்த, 500 மில்லியன் டாலர் மதிப்புடைய மாலே சர்வதேச விமானநிலையத்தை, மாலத்தீவு அரசு தன் பொறுப்பில் எடுத்துகொண்டுவிட்டது. டிசம்பர் 1- தேதி நள்ளிரவுக்குள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வெளியேறுங்கள் என்று மாலத்தீவு அரசு நவம்பர் 27 - ஆம் தேதி சொன்னது. அதேபோல் செய்தது.
ஜி.எம்.ஆர். நிறுவனம் மாலத்தீவு அரசுடன் 2010-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி, மாலே சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம்செய்து, பராமரித்து 25 ஆண்டுகளுக்கு அதில் கிடைக்கும் வருவாயைப் பெறலாம். ஆனால் இந்த ஒப்பந்தம், மாலத்தீவு அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் சாதகமாக இல்லை என்பதால், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது, மாலத்தீவு அரசு.
இந்தியாவில் இதே ஜி.எம்.ஆர். நிர்வகிக்கும் புதுதில்லி சர்வதேச விமான நிலையத்தின் வருமானத்தில் இந்திய அரசு 45% பெறுகிறது. ஆனால், மாலத்தீவு அரசுக்கு 1% மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு பயணியிடமும் வசூலிக்கப்படும் விமானநிலைய மேம்பாட்டுக்கட்டணமும் 25 டாலர்.
இது மிக அதிகம். மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப்ப்யணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. நிகழாண்டில் மட்டுமே இக்ககட்டணம் மூலம் 7 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. எந்தவக்லையிலும் மாலத்தீவு அரசுக்குப் ப்யன் கிடைக்காவிட்டால் எதற்காக தனியார்வசம் எங்கள் விமானநிலையம் இருக்கவேண்டும் ? என்கிறது மாலத்தீவு அரசு.
மாலத்தீவு மிகச் சிறிய நாடு. ஆனால் அவர்களால் ஒரு இந்திய நிறுவனத்தை ஒரு வார காலத்தில் வெளியேற்ற முடிகிறது. இதை இந்தியாவில் நம்மால் செய்ய முடியுமா?
இந்தியாவில் நாற்கரச்சாலைகளை அமைத்துள்ள தனியார் நிறுவனங்கள் பல இடங்களில் டோல்கேட் அமைத்துக் கட்டணம் வசூலிக்கின்றன. எந்தெந்தப் பகுதிகளில், இவர்கள் செலவழித்த முதலீட்டையும், அதற்குரிய நியாயமான லாபத்தையும் மீட்டெடுத்தனர் என்று கணக்கிட்டு, நாற்கரச்சாலைகளை அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளமுடியும் ? “கட்டு - உரிமைகொள் - செயல்படுத்து - ஒப்படை” (பி.ஓ.ஓ.டி.) என்ற அடிப்படையில்தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில், ப்ல இடங்களில் ஒப்பந்தப்படி சாலைப் பராமரிப்புகூடக் கிடையாது. ஆனாலும் மக்கள் நலன்கருதி இவர்களது ஒப்பந்தத்தை ரத்துசெய்ய இந்திய அரசினால் முடியுமா ?
பிரான்ஸ் மிகச் சிறிய நாடு. அந்த நாட்டில் தேனிரும்புத் தொழிற்கூடம் வைத்துள்ள இந்திய வம்சாவளித் தொழிலதிபர் மிட்டல், பிரெஞ்சு அரசுக்கு உறுதிகூறியப்டி, சில நூறு பேருக்கு வேலை வாய்ப்புக்களை அளிக்கவில்லை என்பதற்காகவும், தொழிற்சாலை விதிமுறைகளை மீறியதற்காகவும் “ ஒழுங்காக இருந்தால் இரு, இல்லையேல் வெளியேறு” என்று கூறிவிட்டது பிரெஞ்சு அரசு.
இப்போது அந்நாட்டுடன் சமாதானம் பேசி, “உடன்படிக்கையில் உள்ளபடி நடந்து கொள்கிறேன்” என்று உறுதி கூறியிருக்கிறார்.
அமெரிக்க மக்கள் ரகசிய வங்கிக்கணக்கு வைத்துக்கொள்ள உதவிய மத்திய ஸ்விட்சர்லாந்து வங்கிக்கு, அமெரிக்கா சுமார் 750 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஆனால் இதை நன்கறிந்தும் ஸ்விஸ் யுபிஎஸ் வங்கி இந்தியாவில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இங்குள்ள மிகவும் முக்கியமானவர்களுக்கு அது உதவியதற்கான பரிசோ என்னவோ ?
பன்னாட்டு நிறுவனங்களிலேயே ஓரளவிற்கு நியாயமானது என்றும், இந்தியாவில் முக்கியமானது என்றும் கருதப்பட்ட சீமென்ஸின் அதிகாரிகளும் அர்ஜெண்டினாவில் கையூட்டுக் கொடுத்ததற்காக அமெரிக்காவில் 2011- டிசம்பரில் தண்டிக்கப்பட்டனர். பின்னர் நடந்த புலனாய்வில் இந்த நிறுவனம், 2001 முதல் 2007 வரையிலான காலத்தில் வங்காளத்திலும், சீனா, ரஷ்யா, வெனிசுலா மற்றும் பிற நாடுகளில் 1.4 பில்லியன் டாலர்வரையில் சட்டவிரோதமாகக் கையூட்டுக் கொடுத்து வந்துள்ள செய்தி அம்பலமானது. இது எப்போதும் தரகர்கள் மூலமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிகழ்த்திய சட்டவிரோத கையூட்டுக்களுக்காக அமெரிக்கா, ஜெர்மனி அரசுகளுக்கு 1.6 மில்லியன் டாலர்களை தண்டமாக மட்டுமே கட்டியுள்ளது.
ஆனால், உலகமயம், தாராளமயமாக்கல் என்கிற பெயரில் இந்தியாவில் இன்று நடப்பதென்ன ? வோடஃபோன் நிறுவனம் வெளிநாட்டில் பங்குகளை விற்றதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பை நம்மால் பெற முடியவில்லை. போபால் விஷவாயு வழக்கில் இன்றளவும் கார்பைடு நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீட்டைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் பெற்றுத்தர முடியவில்லை. அந்தத் தொழிற்சாலையில் இருக்கும் விஷக்கழிவான சயனடை அப்புறப்படுத்த முடியவில்லை. இந்திய மக்கள் பணம் 25 கோடி ரூபாய் செலவிட்டு சயனைடு குப்பையை அள்ள நினைத்தாலும் முடியவில்லை.
இந்நிலையில் அந்நிய நேரடி முதலீட்டை சில்லறை வணிகம் உட்பட அனைத்துத் துறைகளிலும் அனுமதித்துவிட்டோம். குறிப்பாக, காப்பீட்டுத்துறையில் அந்நிஒய முதலீடு அனு,மதிக்கப்படுவது சில்லறை வணிகத்தைவிட மிக ஆபத்தானது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தும் அரசு கவலைப்படவில்லை.
சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தில் வெற்றிபெறுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன்வசப்படுத்த வால்மார்ட் நிறுவனம் 125 கோடி செலவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இது பொய் என்று யாருமே சொல்லமாட்டார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே - பல தியாகங்கள் செய்திருக்கும்போது, இந்தியாவில் மிகப்பெரும் சந்தையை வளைத்துக் கொழிக்கப்போகும் வால்மார்ட், தனது சில்லறை வணிகத்துக்காகச் சில்லறையைச் சிதறவிடாதா என்ன !
உள்ளே நுழைவதற்கே லஞ்சம் கொடுத்து வருவார்கள் என்றால் இவர்கள் மத்திய அரசு சொல்லும் எந்த நிபந்தனைகளைப் பின்பற்றுவார்கள், எந்த வேலை வாய்ப்புகளை உறுதி செய்வார்கள் ? விவசாயிகளும் நுகர்வோரும் பயன்பெறுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?
சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது மாநில அரசின் விருப்பம் என்கிறார்கள். இந்த நிறுவனங்கள், முதலீட்டுக்காக அனுமதிக்கப்பட்ட விதிகளை மீறுமாயின் அல்லது கடைப்பிடிக்கப்படவில்லையாயின் அதற்கு அவற்றைப் பொறுப்பாக்குவது யாருடைய வேலை ? மத்திய அரசினுடையதா ? மாநில அரசினுடையதா? 30% உள்நாட்டுக் கொள்முதல் கட்டுப்பாட்டை இந்திய அளவில் இந்நிறுவனம் கணக்குக் காட்டுமா ? அல்லது மாநில அளவிலா ? எதுவுமே தெளிவில்லை. ஆனால் கதவுகள் மட்டும் திறக்கப்பட்டுவிட்டன. இப்போதே 3 மில்லியன் டாலர் இறக்கியுள்ளது வால்மார்ட் என்கிறார்கள்.
மாலே போன்ற குட்டித்தீவுக்கு இருக்கும் தேச நலனிலான அக்கறையும் துணிவும் மிகப்பெரிய இந்திய அரசுக்கு இல்லாமல் போனதேன் ? அதுதான் நமது பிரச்சினை !
பொருளாதார தாராளமயம் என்பது லஞ்சமும், ஊழலும், முறைகேடுகளும் தாராளமயமாக்கப்படுவதன் மறுபெயராகிவிட்டது என்றால் அது மிகையல்ல.
நன்றி :- எசு.ராமு, அம்பத்தூர், தமிழர் எழுச்சி, 94435 24166
thamizharezhuchi@yahoo.com thamizharezhuchchi.blogspot.in
0 comments:
Post a Comment