பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Friday, September 12, 2014

தில்லியில் இருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள்



பல நூறு ஆண்டுகள் பழைமையான நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள், தில்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.
நீதிமன்ற வழக்கு காரணமாக, அந்த இரண்டு சிலைகளும் வரும் 17-ஆம் தேதி அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த ஸ்ரீபுரந்தானில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து நடராஜர் சிலை கடந்த 2008-ஆம் ஆண்டு திருடு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதனிடையே, விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இருந்த அர்த்தநாரீஸ்வரர் சிலையும் திருடு போனது கண்டறியப்பட்டது.
ஆஸ்திரேலியா சென்ற சிலைகள்: பாரம்பரியமிக்க பல ஆண்டுகள் தொன்மையான இந்த இரு சிலைகளையும், இந்தியாவில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற சுபாஷ் சந்திர கபூர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடியது தெரியவந்தது.
அவர், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பழைமையான பொருள்களைக் காட்சிக்கு வைத்து விற்பனை செய்யும் அங்காடியை நடத்தி வந்தார். அந்த அங்காடிக்கு தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட இந்த இரு சிலைகளும் கொண்டு செல்லப்பட்டன. அந்த அங்காடியில் இரு சிலைகளையும் பார்த்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிகாரிகள், அவற்றை விலைக்கு வாங்கி தங்கள் நாட்டின் அருங்காட்சியகத்தில் வைத்தனர். அந்தச் சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருப்பது குறித்த தகவல் தமிழகத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குக் கிடைத்தது.
விமானத்தில் பயணித்த சிலைகள்: இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகளை மீட்பதற்கான பணிகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மேற்கொண்டனர். அந்தச் சிலைகள் தொடர்பான அத்தனை விவரங்களையும் தொகுத்து, அவை தமிழகத்தைச் சேர்ந்தது என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களை தயார் செய்தனர். அவற்றை ஆஸ்திரேலியா அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்கள் கேட்ட பல்வேறு வினாக்களுக்கும் பதில்களை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்தச் சிலைகள் தமிழகத்தைச் சேர்ந்ததுதான் என்பதை ஆஸ்திரேலியா அரசுத் துறை அதிகாரிகள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு உறுதிப்படுத்தினர். ஆனால், அவற்றை எப்படி யாரிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி-ஆஸ்திரேலிய பிரதமர் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, நல்லெண்ண அடிப்படையில் அந்த இரு சிலைகளையும் இந்தியாவிடம் அளிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்தது. அதன்படி, இந்தியா வந்த ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட், பிரதமர் நரேந்திர மோடியிடம் சிலைகளை அளித்தார்.
நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளைப் பெற சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., அசோக் நடராஜன் தலைமையிலான குழு தில்லி சென்றது. அங்கு அந்தச் சிலைகளைப் பெற்று விமானத்தில் அனுப்பி வைத்தனர். அந்தச் சிலைகள் ஏர்-இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு வந்தன.
பாதுகாப்பாக வைக்கப்பட்ட சிலைகள்: நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளைத் திருடியது தொடர்பான வழக்கு, இரண்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குத் தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்ட சுபாஷ், இப்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான வழக்குகள் இரண்டு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. அர்த்தநாரீஸ்வரர் சிலையைக் கடத்தியது தொடர்பான வழக்கு விருத்தாசலம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்திலும், நடராஜர் சிலை கடத்தல் வழக்கு ஜயங்கொண்டம் நடுவர் நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகின்றன.
இந்த இரு வழக்குகளும் வரும் 17-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. அப்போது, இரு சிலைகளும் நீதிமன்றத்தில் வைக்கப்படும். அதுவரை, இரு சிலைகளையும் பாதுகாப்பாக வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மத்திய அரசின் தொல் பொருள் ஆய்வுத் துறை அலுவலகத்தின் பாதுகாப்பு அறையில் சிலைகள் வியாழக்கிழமை வைக்கப்பட்டன. இந்தச் சிலைகள் வைக்கப்பட்ட அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தொன்மையை ஆராய்கிறார் நாகசாமி
சென்னையில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சிலைகளின் தொன்மையை ஆராயவுள்ளார், தொல்லியல் துறையின் மூத்த அறிஞர் நாகசாமி. அவரது நேரத்தை அறிந்து, அந்த ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் தெரிவித்தார்.
அதன் பிறகு, வரும் 17-ஆம் தேதி விருத்தாசலம், ஜயங்கொண்டம் நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய இரு சிலைகளும், கடலூரில் உள்ள பழங்காலப் பொருள்கள் வைப்பகத்தில் சேர்க்கப்பட உள்ளன.
இந்த வைப்பகம், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானதாகும்.

சான்றிதழ் வழங்கத் திட்டம்


ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையினர் சான்றிதழ் வழங்கவுள்ளனர்.

இதற்காக, பெங்களூரில் உள்ள மண்டல தொல்லியல் ஆய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தமிழகம் வரவுள்ளனர்.
இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், 100 ஆண்டுகளைக் கடந்த பழைமையான சிலைகளுக்கு தொன்மையான சிலைகள் என்று தொல்லியல் ஆய்வுத் துறை சான்று வழங்குவது வழக்கம்.
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் மிகப் பழைமை வாய்ந்தவை. எனவே, அந்தச் சிலைகளுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் சான்றிதழ் மிகவும் அவசியம்.
இதைக் கருத்தில் கொண்டு, சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் போதோ அல்லது கடலூரில் வைப்பறையில் வைக்கப்பட்ட பிறகோ அவற்றை பெங்களூரில் இருந்து வரும் அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவர்.
இதன் மூலம், இரண்டு சிலைகளுக்கும் தொன்மையானவை என்ற சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி ம்: தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment