பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Saturday, September 6, 2014

கரு உருவாக வாய்ப்புள்ள நாட்களை அன்றே கூறியுள்ளது தொல்காப்பியம்!

தமிழரின் தலையாய சொத்து தொல்காப்பியம். மொழியியல் அறிஞர்கள் அதன் எழுத்து, சொல் இலக்கணங்களைப் பார்த்து, படித்து வியக்கின்றனர். பொருள் இலக்கணம் அவற்றினும் மேலானதாகப் போற்றப்படுகிறது. தொல்காப்பியர் தமிழரின் அக வாழ்க்கையை பொருள் இலக்கணத்தில் கூறியுள்ளார். அதில் அறிவியல் நுட்பங்கள் பலவற்றை அவர் பதிவு செய்துள்ளார்.

கற்பு வாழ்க்கை மேற்கொண்ட (குடும்ப வாழ்க்கை) தலைவன்-தலைவி இருவரும் குழந்தைப்பேறு பெறுதலுக்கான சூழ்நிலையை இன்றைய மருத்துவத்துறை வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிற அதே நேரத்தில், "உண்மைதான்' என்று சொல்கிற செய்தியைத் தொல்காப்பியம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பறைசாற்றியுள்ளது வியப்புக்குரியது!

உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் காண்போம்.

""பூப்பின் புறப்பா டீரறு நாளும்
நீத்தகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான''
(தொல்.கற்.நூ.46)

என்பது நூற்பா. இந் நூற்பாவின் மூலம், கற்பொழுக்கத்தில் பரத்தமை காரணமாகப் பிரிந்த தலைவன், தலைவி பூப்பு எய்திய மூன்று நாள் முடிந்து, அடுத்த மூன்று நாளும் முடிந்து வரக்கூடிய பன்னிரண்டு நாளும் தலைவியை விட்டுத் தலைவன் பிரிவது மரபு இல்லை என்கிறார்.

அதாவது, பெண்களுக்கு வரும் மாதவிடாய் முடிந்து மூன்று நாள் கழித்து, அடுத்தப் பன்னிரண்டு நாளும் தலைவன் தலைவியை விட்டுப் பிரிவதில்லை என்கிறார்.

அதற்கு இளம்பூரணர், ""இதனாற் பயன் என்னையெனின் அது கருத்தோன்றுங்காலம் என்க'' என்று விளக்கம் தருகிறார்.

நச்சினார்க்கினியர், தமிழ் அக இலக்கண மரபில் குறிப்பிடத்தக்க இறையனார் களவியல் உரைக்கு விளக்கம் தருகிறார்.

அதாவது, பெண் மாதவிடாய் அடைந்த முதல் மூன்று நாள் முடிந்த பின்பு நான்காம், ஐந்தாம், ஆறாம் நாள்கள் என அடுத்தடுத்த மூன்று நாளும் ஆணும் பெண்ணும் சேரக்கூடாது என்கிறார்.

அதற்கு இறையனார் களவியல் உரை, ""முதல் நாள் நின்ற கரு வயிற்றில் சாம்; இரண்டாம் நாள் நின்ற கரு குரு வாழ்க்கை உடைத்தாம்; மூன்றாம் நாள் நின்ற கரு திருவின்றாம்'' என்று கூறுகிறது.

தொல்காப்பியர் கூறிய இச் செய்தி உண்மையில் இன்றைய மருத்துவ உலகமே வியக்கும் உண்மையாகும்.

நன்றி :- முனைவர். கா.அய்யப்பன்,  தமிழ்மணி, தினமணி, 30-06-2013

திருமூலரின் திருமந்திரத்தில் எந்தெந்தச் சேர்க்கையில் எப்படிப்பட்ட கரு உருவாகும் என்பதை உறுதிபடக் கூறிடும் பாடல்கள் உள்ளன.

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment