பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 22, 2014

நிறைய வைத்திருக்கிறேன் ‘உனது நினைவையும் நமது பிரிவின் வலி தீராத ‘எனது கண்ணீரையும்…

டகுவைத்து
மீட்டமுடியாத நகைகளைப்போல
ஆசைப்பட்டு கிடைக்காமல்
காலாவதியாகிப்போன நினைவுகளுள்
நிறைய இருக்கிறாய் நீ;

உன்னைத் தொடாமல்
அதிகம் பார்க்காமல்
ஓரிரு வார்த்தையைக் கூடப் பேசாமல்
ச்சீ எதற்கிது எனும் சலிப்பின்றி சிநேகித்த எனதன்பில்
என்றுமே புனிதம் குறையாதிருப்பவள் நீ;

படைப்பு பிரம்மாக்கள் வடிக்கும்
சிலைக்கீடாக
நீ எனக்குள்ளே சிரித்திருக்கும் காட்சியுள்தான்
எனக்கு சூரியன் உதிப்பதும்
நிலா மறைந்த இருளில் கனவுகள் பூப்பதும்

நாட்கள் -
வாழ்வதற்கென வசப்படுவதும்;
சிலிர்த்த வார்த்தைகளுள்
புற்கள் முளைத்துவிடும் பசுமையாய்
என்றேனும் -
தூரத்தே காற்றோடு சேர்ந்துகேட்கும்
உனது குரலும்,
சட்டென எதிர்பாராது –

நீ எனை நேராகப் பார்த்துவிடும் பார்வையும்
மொட்டவிழ்த்து மேகம் களையும் இடைவெளிக்குள்
வானம் பார்க்கும் செம்பருத்தியின்
மகரந்தம் போன்றதெனக்கு;
சங்குப்பூவின் மீது நீளம் கீறி
பளிச்சென தகிக்கும் வெண்மையாய் – நீ

எதிர்ப்படும் நாட்களில்
கிழிகிறது என் மனசு,
நித்தமும் அந்த கிழிதலில் வடியும் வலிக்காக
தவம் பூணும் தருணங்களே இப்பொழுதுதுவரை
உறைந்துக்கிடக்கிறது உள்ளே;;

கல்லூரி வாசல்,
உங்கள் வீட்டின் இரும்புக் கதவு,
தெருவில் வரும் போகும் ஐஸ்வண்டி,
கூவாமல் வந்து -
கொடுத்துப்போகும் மல்லிகை பூக்காரி,
உனை தொட்டு தொட்டு விலகாமல் -
எப்பொழுதும் கூட வரும் உனதழகிய நிழல்,
நிற்பது நீயெனில் நான் விலக – சிலவேளை
நானெனில் நீ விலக –

அவ்வப்பொழுது நம் மௌனத்தை உடைத்துவிடும்
வரப்பேறிய நம் குறுக்குவழிச் சந்து,
இன்னும்..
உன்கூட வருகையில் எனை முறைக்காத
உன் அப்பா,
எனைக் கண்டிக்க முண்டாசு கட்டிக்கொள்ளாத – எனது
பெற்றோர்,

இப்படி நமைச் சுற்றி
உனைச் சுற்றி
நாளெல்லாம் டிக் டிக்கென்று அடித்துக்கொண்டே
கணப்பொழுதும் நகர்ந்துகொண்டிருக்கும்
கடிகார முட்களாக
எனக்குள்
எத்தனை எத்தனை நினைவுகள்
மறக்கப்படாமல் நரைமறந்திருக்கிறது..

சுதந்திரம் என்பது விடுபடுவது எனில்
அது முழுமையாக நிகழாமல்
முழுச் சுதந்திர உணர்வை
உனது சிந்தனைக்குள் தருவது
இந்தக் காதல்; காதலொன்றே..
செத்து
பிணம்போகும் தெருவில் கூட – நாளை
எனக்காகப் போடப்படும் மலர்களோடு
தெருவெல்லாம் உதிர்ந்திருக்க’
வாசனை பூத்து உனையே நினைத்திருக்க’ மேள
சப்தங்களோடு -
மனக்கூச்சலாக இரைந்துக்கொண்டே வர’

நிறைய வைத்திருக்கிறேன் ‘உனது நினைவையும்
நமது பிரிவின் வலி தீராத ‘எனது கண்ணீரையும்…



வித்யாசாகர் 

vidhyasagar1976@gmail.com

                        

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment