பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Wednesday, September 10, 2014

மாமழை தூற்றுதும்!



சென்னையில் திடீரென மழை பெய்கிறது. அஞ்சலி தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வேகமாக சாலையைக் கடந்து எதிர்வரிசையில் அணிவகுத்திருக்கும் கடைகளுக்கு இடையே தஞ்சம் புகுகிறார். அன்று மட்டுமல்ல, மழை பெய்யும் நாளெல்லாம் இப்படித்தான் செய்கிறார் அவர்.

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில், சாலையோரத்தில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட பாடுகளுடன் மற்றொரு அல்லலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில், சாலையோரங்களில் வாழும் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் தங்களை தற்காத்துக் கொள்ள தவிக்கிறார்கள்.

வேணல்ஸ் சாலை - காந்தி இர்வின் சாலை சந்திப்பில் உள்ள ஒரு பிளாட்பாரம் தான் அஞ்சலியின் (20) வீடு. பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட அஞ்சலி இப்போது 2 சிறு குழந்தைகளுக்கு தாய். ஒவ்வொரு முறை திடீரென மழை பெய்யும் போதும் பிள்ளைகளை தூக்கிக் கொண்டு, பரபரப்பான சாலையை வேகமாக கடந்து கடைகளுக்கு நடுவே தஞ்சமடைவதே அவருக்கு பிழைப்பாக இருக்கிறது. 'என் வாழ்க்கை பூராம் இப்படியேத்தான் அலையுறேன்' என்கிறார் அஞ்சலி.

ஆனால், அஞ்சலி போன்றவர்கள் மழையில் இருந்து பாதுகாப்புக்கு ஒதுங்க சென்னை மாநகராட்சி 28 'இரவு நேர காப்பகங்களை' நடத்துகிறது. இந்த 'இரவு நேர காப்பகங்களை' பராமரிக்க மாநகராட்சி ஒருங்கிணைப்பாளர்களை பணியமர்த்தியுள்ளது.

மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்: "மாநகராட்சி இரவு நேர காப்பகங்களில் நிரந்தரமாக தங்குபவர்கள், அவ்வப்போது வந்து செல்பவர்கள் என 1000 பேர் இருக்கின்றனர். நகர் முழுதும் பல்வேறு இடங்களில் உள்ள 28 காப்பகங்களில் ஒவ்வொன்றிலும் தலா 35 பேர் வீதம் தங்குகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த காப்பகங்கள் நிரந்தர வசிப்பிடமாகவே மாறிவிட்டது. இந்த காப்பகங்களை இயக்க பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாநகராட்சிக்கு உதவி வருகின்றன. மாநகராட்சி உயரதிகாரிகள் இந்த காப்பகங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்கின்றனர்" என்றார்.

காப்பகங்கள் இருந்து, அவை மாநகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில், கண்காணிப்பில் சரியாக இயங்கி வந்தாலும் வீடு இல்லாத எல்லோரும் இதனால் பயனடைகிறார்களா என்றால், இல்லை.
மெமோரியல் ஹால் அருகே, கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசிக்கும் மஞ்சு, 'எனக்கு இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை' என கூறுகிறார். மஞ்சு பூவியாபாரி, அவரது கணவர் கூலித் தொழிலாளி. நினைவு தெரிந்த நாள் முதலே, மஞ்சுவுக்கு மெம்மோரியல் சாலையோர பிளாட்பார்ம்தான் வசிப்பிடம். "நாங்கள் பல ஆண்டுகளாக இங்கே தங்கியுள்ளோம். மழைக்காலங்களில் ஒதுங்க இடமில்லை. இதில், போக்குவரத்துக் காவலர்கள் நெருக்கடி வேறு. எங்களுக்கு என்று பாதுகாப்பான இடம் இல்லை" என வேதனையை பதிவு செய்தார். அவர் இருக்கும் மெம்மோரியல் ஹால் பகுதியில், மாநகராட்சியின் இரவு நேர பாதுகாப்பகம் இல்லாததே மஞ்சுவின் துயருக்குக் காரணம்.

பாதுகாப்பகங்கள் அமைப்பதில் சிக்கல் என்ன?

மெம்மோரியல் சாலையில், இரவு நேர பாதுகாப்பகம் அமைப்பதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது என மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, "நீங்கள் குறிப்பிட்ட அந்த பெண் வாழும் பகுதி மாநகராட்சியின் மண்டலம் 4 மற்றும் 5-ன் கீழ் வருகிறது. சவுகார்பேட்டை, ஜார்ஜ்டவுன், பாரிமுனை போன்ற மக்கள்தொகை அதிகமுடைய மண்டலம் 4,5-ல் இரவுநேர காப்பகம் அமைக்க மாநகராட்சி தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், அப்பகுதியில் இருக்கும் கட்டிட உரிமையாளர்கள் பலரும் தங்கள் இடத்தை காப்பகங்கள் அமைப்பதற்காக வாடகைக்குத் தர முன்வருவதில்லை. இப்பகுதிகளில், மாநகராட்சிக்கு சொந்தமான இடமும் எதுவும் இல்லை. இதுவே, நகரின் முக்கியப் இடமான இப்பகுதியில் இரவு நேர காப்பகங்கள் அமைப்பதில் இருக்கும் சிக்கலாகும்" என தெரிவித்தார்.

2010-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஒரு உத்தரவில், அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 5 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில், ஒரு லட்சம் பேருக்கு ஒரு இரவு நேர காப்பகம் விகிதாச்சாரத்தில் காப்பகங்கள் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

சென்னையில் 70 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அந்த வகையில், சென்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 70 காப்பகங்கள் இருக்க வேண்டும்.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "அடுத்த ஆண்டு இறுத்திக்குள் நகர் முழுவதும் இன்னும் 42 இரவு நேர காப்பகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வீடு இல்லாதவர்கள் பட்டியலை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் சேகரித்து வருகிறோம். அடுத்த ஒரு மாதத்தில் இந்த பணி நிறைவு பெறும் என நம்புகிறோம்" என்றார்.

தமிழில்: பாரதி ஆனந்த்

நன்றி : தி இந்து


Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment