பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Monday, September 29, 2014

மேடும், பள்ளமும் இவருக்கு சகஜம்
ரசியலில் எத்தனையோ தலைவர்கள் உண்டு. ஆனால், வாழ்க்கை முழுவதுமே மேடும், பள்ளமும் சகஜமாகக்கொண்டு வாழ்ந்தவர் என்றால், அது ஜெயலலிதாதான். குழந்தைப்பருவத்திலேயே செல்வத்தோடும், வசதி குறைந்த நிலையிலும் வாழ்க்கையை பார்த்துவிட்டார். அவருடைய தாயார் சந்தியா திரைப்படத்துறையில் கொடிகட்டிப்பறந்தபோது, அவர் வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. அதே நேரத்தில் சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்தபோது வசதிகுறைந்த நிலையிலும் சரி, அவர் தளர்ந்துவிடவில்லை. படிப்பில் முதல் இடத்தில் இருந்த அவருக்கு சட்டம் படிக்கவேண்டும் என்பதுதான் தணியாத ஆசையாக இருந்தது. ஆனால், குடும்ப நிதிநிலை அவரை சட்டம் படிப்பதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை. அவர் அந்த பள்ளத்திலும் தடுமாறிவிடவில்லை. அவர் விருப்பத்துக்கு மாறாக சினிமாவில் நடிக்க நிர்ப்பந்தம் ஏற்பட்ட நேரத்திலும், அதையும் முழுமனதோடு எடுத்துக்கொண்டு அதிலும் ஜொலித்தார். அரசியலில் ஈடுபடவேண்டும் என்று ஒருபோதும் அவர் நினைத்ததில்லை.

முதலில் 1982–ம் ஆண்டு எம்.ஜி.ஆர்தான் சத்துணவு திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினராக அரசு நியமனத்துக்குள்ளும், கொள்கைபரப்பு செயலாளராக அ.தி.மு.க.வுக்குள்ளும் கொண்டுவந்தார். அந்த நேரத்திலும் அவருக்கு கட்சிக்குள்ளேயும் எதிர்ப்பு இருந்தது. உடல்நலக்குறைவால் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சைக்கு சென்ற நேரத்தில், அவரை கட்சியில் இருந்தே வெளியே அனுப்பக்கூட முயற்சி நடந்தது. எம்.ஜி.ஆர். மரணம் அடைந்தபிறகு அவர் தலைமையில் ஒருபிரிவு இயங்கிய நேரத்தில், ஜானகி அம்மாள் தலைமையில் மற்றொரு அணி இயங்கி அவருக்கு எதிராக செயல்பட்டது. அப்போது 1989–ம் ஆண்டு தேர்தலில் ஜானகி அணி படுதோல்வியை அடைந்தவுடன், இரு அணிகளும் ஒன்றாக இணைந்து அ.தி.மு.க.வின் தன்னிகரற்ற தலைவராக திகழ்ந்தார். 

இதைத்தொடர்ந்து 1991 முதல் 1996 வரையில் முதல்–அமைச்சர் பொறுப்பில் முதல் முறையாக ஆட்சி அமைத்தார். அதன்பிறகு, அவர் தேர்தலில் தோல்வி அடைந்த நேரத்தில் அவர்மீது நிறைய வழக்குகள் போடப்பட்டன. ஒருநேரத்தில் சிறைவாசத்தைக்கூட அனுபவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அவர் துவண்டுவிடவில்லை. வீறுகொண்ட வேங்கையாக வெளியே வந்து அரசியல் பாய்ச்சலில் ஈடுபட்டார். மீண்டும் 2001–ல் ஆட்சி அமைத்தபோது சில மாதங்களிலேயே ஒரு வழக்கில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டதால் தற்போது ஏற்பட்டுள்ள நிலைபோல, 6 மாதங்கள் பதவியைவிட்டு விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2006 சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தார். மீண்டும் 2011 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றிபெற்றார். இந்தியாவே ஆச்சரியத்துடன் அவரை பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், 18 ஆண்டுகளுக்கு முன்பு அவர்மீது போடப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை, ரூ.100 கோடி அபராதம், 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை என்ற ஒரு சறுக்கலை சந்தித்துள்ளார். சட்டரீதியாக இது இறுதியான தீர்ப்பு இல்லை, மேல் முறையீடுகளுக்காக இன்னும் சில வாய்ப்புகள் இருக்கிறது, இதுவே முடிவான முடிவல்ல. இது அவர் வாழ்க்கையில் மற்றொரு பள்ளம்தான், நிச்சயமாக மேலே ஏறிவருவார் என்று ஒரு நம்பிக்கை பரவலாக இருக்கிறது. 

இந்த முறை அவர் ஆட்சியில் தமிழ்நாடு நல்ல முன்னேற்றங்களை அடைந்து இருக்கிறது. ஒட்டுமொத்த வளர்ச்சியில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது. தனிநபர் வருமானத்திலும் தமிழ்நாடு உயர்ந்து இருக்கிறது, இதுபோல, மனித மேம்பாட்டு பல குறியீடுகளில் உயர்ந்து இருக்கிறது. இதுபோல, பல வளர்ச்சிகளை தமிழ்நாடு கண்டுகொண்டு இருக்கிறது என்றால், இதற்கெல்லாம் காரணம் ஜெயலலிதாதான். அவர் இல்லாத நிலையில் தமிழ்நாடு என்ன ஆகுமோ? என்ற அச்சம் இருந்தாலும், அவரது சறுக்கல்கள் எதுவுமே அரசியல் வாழ்க்கையில் நிரந்தரம் அல்ல. எப்போதுமே, எல்லாவற்றிலும் அவர் வெற்றிகண்டு வருவதுதான் அவர் வாழ்க்கையில் நிதர்சனமான உண்மை என்பதற்கேற்ப, இதிலும் நிச்சயமாக மீண்டு வருவார் என்பதுதான் அ.தி.மு.க.வினரின் அசைக்க முடியாத எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நன்றி :- தினத்தந்தி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment