பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Thursday, September 18, 2014

104 சேவை: 8 மாதங்களில் 4.37 லட்சம் அழைப்புகள்


தமிழக அரசின் 104 தொலைபேசி சேவைக்கு எட்டு மாதங்களில் 4.37 லட்சம் அழைப்புகள் வந்துள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
104 மருத்துவ உதவி சேவை, முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மருத்துவம் தொடர்பான தகவல்கள், ஆலோசனைகளைப் பெறவும், புகார்களைத் தெரிவிப்பதற்கும் பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.
4.37 லட்சம் அழைப்புகள்: இந்தச் சேவை தொடங்கியதில் இருந்து இதுவரை (செப்டம்பர் 10-ஆம் தேதி வரை) 4 லட்சத்து 37,288 அழைப்புகள் வந்துள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 4,500 அழைப்புகள் 104 சேவைக்கு வருகின்றன. மொத்த அழைப்புகளில் பயனுள்ள அழைப்புகள் மொத்தம் 1 லட்சத்து 51,888 ஆகும். அதில் மருத்துவ உதவி, ஆலோசனைகளுக்கான அழைப்புகள் மொத்தம் 1 லட்டசத்து 39,829 ஆகும். மனநல ஆலோசனைகளுக்கான அழைப்புகள் மொத்தம் 6,135 ஆகும். தமிழக அரசு மருத்துவமனைகள் குறித்த புகார்கள், சேவைகளை மேம்படுத்துவதற்கான அழைப்புகள் 3,118 ஆகும்.
தகவல்கள்: மருத்துவம் தொடர்பான தகவல்களைப் பொருத்தவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறித்த விசாரணை அழைப்புகள் அதிகமாக வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அருகிலுள்ள பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ரத்த வங்கி, ரத்த தானம் அளிப்பது தொடர்பான தகவல்கள், கண் வங்கி, கண் தானம் செய்வது தொடர்பான தகவல்கள், மேலும் உடலுறுப்பு தானம் குறித்த தகவல்கள் போன்றவை குறித்த அழைப்புகள் வருகின்றன எனத் தெரிவித்தனர்.
மனநலம்: மன அழுத்தம், பாலியல் தொடர்பான மனஅழுத்தம், திருமணம் தொடர்பான பிரச்னைகள், தூக்கமின்மை, தற்கொலை எண்ணம், தேர்வு தொடர்பான மன அழுத்தம், எச்.ஐ.வி. தொடர்பான மனநலப் பிரச்னைகள் ஆகியவை தொடர்பான அழைப்புகளும் அதிகம் வருகின்றன.
புகார்கள்: அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் இல்லை, மருத்துவமனைகளில் படுக்கைகள் ஒதுக்கப்படவில்லை, அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதில் தாமதம், மருத்துவமனையில் சுகாதாரக் குறைபாடு, குடிதண்ணீர், காற்றாடி, கழிப்பறை போன்றவை குறித்த புகார்கள் மக்களிடம் இருந்து பெறப்படுகின்றன.
உடனுக்குடன்....: மருத்துவமனைகள் குறித்த புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மைய அதிகாரிகளுக்கு மொத்தம் 2,581 செல்போன்கள் கடந்த ஜூன் 25-ஆம் தேதி வழங்கப்பட்டன. ஜூலை மாதம் அனைத்து செல்போன்களும் விநியோகிக்கப்பட்டன. ஆகஸ்ட் மாதம் முதல் அந்த செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன.
இது குறித்து 104 சேவையை நடத்தி வரும் ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. அதிகாரிகள் கூறியது:
பொதுமக்கள் 104 சேவை எண்ணுக்கு அழைத்து தங்கள் புகார்களைத் தெரிவித்த உடன், எந்த மருத்துவமனை குறித்து புகார் தெரிவிக்கப்படுகிறதோ அந்த மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
ஒருவேளை குறிப்பிட்ட மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் செல்போனை எடுக்கவில்லை அல்லது அழைப்பை ஏற்கவில்லை என்றால், அதற்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கப்படும். இந்த செல்போன் எண்கள் சங்கிலித் தொடர் போல இறுதியாக சுகாதாரத் துறைச் செயலர், சுகாதாரத் துறை அமைச்சரை இணைக்கும்.
இதன் மூலம் தமிழகத்தின் சுகாதரத் துறை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும். நாட்டிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்தத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

நன்றி : தினமணி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment