பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Tuesday, August 26, 2014

ஆன்ம விழிப்பை ஏற்படுத்திய விடுதலை இயக்கம் ; பகைமைச் சாம்பல் கொட்டிய திராவிட இயக்கம்

download (4)
முதுபெரும் எழுத்தாளர் வையவன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்  
யாருக்காக எழுதுகிறீர்கள்?
உங்களுக்கு.சுற்றி நிற்கும் இவர்களுக்கு. இந்த காலத்திற்கு, எதிர் காலத்திற்கு பிராமணர்களும், பிராமணர் அல்லாதோரும் சேர்ந்து வளர்த்த தமிழுக்கு முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பௌத்தர்கள் செய்திருக்கும் அரிய தொண்டுக்கு வணக்கம் செலுத்தி அதை அறியாதோருக்கு மௌனத்திலே அறிவிக்கவே நான் எழுதுகிறேன்
….எல்லாருக்குமாகத் தான் எழுதுகிறேன்.
ஏன் எழுதுகிறீர்கள்?
உழவன் யாருக்காக உழுகிறான்? நெசவாளி யாருக்காக நெய்கிறான்? தனக்கு மட்டுமல்ல. சமுதாயத்திற்காக. அதே தான் என் நிலைமையும்.என் பணி அது. அதைக் கலை என்று ஆடம்பரமாகச் சொல்லக்கொள்ள நான் விரும்பவில்லை. பணி.
எது சமூகம்?
நான். நீங்கள். இதோ இந்த வீதி. இந்த ஊர். இந்த சூழல். எல்லாமே சமூகம் தான். சுழலும் பூமி ஒரு கிரக வட்டத்திற்கு உள்ளே அடங்கி ஒரு சமூக வலயத்திற்குள் நிற்கிறது. அப்படியே தான் மனிதன்
மனிதன் என்று பிரித்துச் சொல்கிறீர்களே! அப்போது மனிதச் சமூகத்திற்கு மட்டும் தான் எழுதுகிறீர்களா?
பிறகு?மனிதர்களுக்கு எழுதாமல் வேறு யாருக்கு எழுதுவது? ஆனால் உலகில் மனிதன் மட்டுமே வசிக்கவில்லை. அவனது சமூக நடவடிக்கை பல்வேறு இயற்கைச் சக்திகளால் ஜீவராசிகளால், அவற்றோடு நடத்தும் போராட்டங்களால் கட்டுப் படுத்தட்டிருக்கிறது, அவை நிலைத்து நீடிக்காமல் மனிதன் என்ற தனிப்பட்ட உயிரியோ அவனது சமூகமோ நிலைக்க இயலாது
விளக்க இயலுமா?
உங்கள் குழந்தைக்கு உண்ணப் பால் தேவை. அதற்குப் பசுமாடு வேண்டும். அது மேய புல் வேண்டும் . புல் முளைக்க நல்ல நிலம் மனிதராலோ பிற உயிரிகளாலோ கெடுக்கப்படாத நிலம் .. கூடவே மழை,,இப்படி இப்படி அடுக்கிச் சிந்தித்தால் ஒன்றோ ஒருவரோ இன்றி மற்றொன்று இல்லை என்ற நிதர்சனம் வெளிப்படும்.
அதிகம் வடமொழி பயன்படுத்துகிறீர்களே!
மொழி கருத்தை வெளியிட்டால் போதும் அது வடமொழியா தென்மொழியா என்று நாக்கைப் புரட்டினால் அது அரசியல். வடமொழியே பயன்படுத்த மாட்டேன் என்று நான் வாய்ப்பூட்டு போட்டுக் கொள்ள மாட்டேன்
மனித வாழ்வு மொழியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் , நாடு மற்றும் பல பிற பிரிவினைகளின் பெயரால் போரிட்டு மாளவென்று உதித்ததாக நான் கருதவில்லை. என் கதைகளையும் என் கதா பாத்திரங்களையும் அப்படிப் பிரித்துப் பேதப்படுத்த நான் அனுமதித்ததில்லை . இப்போது மொழியின் பெயரால் நடந்து வரும் முரண்பாடு பகைமை தீயை வளர்த்து சொந்த நன்மைகளுக்காகக் குளிர் காய்ந்து பொய்வேடம் புனைந்து நாடகமாடுகிறது
அப்படி ஒன்றும் நீங்கள் அந்தப் போருக்கு எதிர்ப்போர் புரிந்து விடவில்லையே! அதே பழைய மனிதப் பண்பாடுகளையே அரைத்த மாவையே அரைக்கும் போக்கில் அல்லவா இலக்கியம் ஆக்கியிருக்கிறீர்கள்!
நல்ல கேள்வி. அரைக்கிற மாவு உடல் ஊட்டத்திற்கு.. உயிர் வளர்ச்சிக்கு.. உதவுமா அல்லவா? அரைத்த மாவை அரைக்காமல் புரட்சி புதுமை என்று பேரிகை கொட்டியவர்கள் பண்பாட்டு ரீதியாகவும் , மொழி வளர்ச்சி ரீதியாகவும் சாதித்தது என்ன? அடிப்படை மதிப்பீடுகளை தகர்த்து நொறுக்கி என்ன மதிப்பீடு வேண்டும் என்று இவர்கள் நிலை நாட்டுகிறார்கள்?
நீங்கள் யாரை எல்லாமோ தாக்குவது போல் கருதுகிறேன்
நான் எந்த தனி நபர்களையும் தாக்க வில்லை. அவர்கள் பிரதிநித்துவப் படுத்தும் மதிப்பீடுகள் முன்னே என் கேள்வியை வைக்கிறேன்!என்ன சாதித்தீர்கள்? வள்ளுவரும் கம்பரும் பாரதியும் கட்டிக் காத்து கை மாற்றிய தீப ஒளியை அயல் நாட்டு இலக்கியம் படித்து இதெல்லாம் பழமை, பத்தாம்பசலித்தனம் என்று ஊதி அணைத்துகுருடும் குருடும் குருட்டாட்டமாட கும்பல் சேர்த்ததைத் தவிர மிச்சம் என்ன?
மனிதநேயம், தத்தெடுத்தல், உயிர்காத்தல், மன்னித்தல் , உதவுதல் என்று சிற்சில அச்சுகளில் ஊற்றி கதையும் கவிதையும் நாவலும் படைத்தீர்கள்.இவையெல்லாம் தொன்று தொட்டு ஓதப்பட்டு வரும் பழைய பாட்டுகள் தானே!
நல்லது. பழைய பாட்டை பாடாதே! கொல்லு. பழிவாங்கு!வெட்டு!கொள்ளை அடி!சோரம் போ! எல்லாவற்றுக்கும் ஒரு நியாயம் கற்பி! இந்த வகை இலக்கியம் படைக்க என்னால் இயலாது. மனிதனை மேம்படுத்தவே எழுதவந்தவன் நான். குண்டு வெடித்து பட்டாசு வெளிச்சம் காட்டி என்னைப் பார் .. என் துணிவைப்பார்..என்று நற்பெயர் ஈட்ட நான் விரும்பவில்லை. அதற்கு நான் வந்த தமிழ் மரபு இடம் தராது!
உங்கள் எழுத்தின் அடிப்படைப் போக்கு.. அதாவது அது போகும் திசை என்ன?
முயன்று முயன்று மானுடம் தன மேன்மையைக் கைவிடாது காப்பாற்றி வரவேண்டும்.எதிர்மறையாக எழுதினால் எதிர்மறையே வளரும். நான் எதிர்மறைகளின் எதிர்மறை. உடன்பாடுகளின் உடன்பாடு, இது தான் என் போக்கும் .. என் திசையும்
உங்கள் படைப்புகளில் காதலே அதிகம் இடம்பெற்று இருக்கிறது.
இருக்கலாம். நான் அப்படி முன் நோக்கம் வைத்துப் படைக்கவில்லை. நான் காதலைக் காதலிப்பவன். காதலின் மேன்மையை …அது சுடர்ச்செய்யும் ஒளியை நேசிப்பவன். ஒருக்கால் அது அப்படி வெளிப்பட்டிருக்கலாம்.
உங்கள் படைப்புகளில் சிலவற்றைத்தவிர பெரும்பாலும் மற்றவைகளில் பெண்களுக்கு அதிக மதிப்பளிக்கிறீர்கள். ஏன்?
அது தான் சொன்னேனே! காதலைக் காதலிப்பவன் பெண்களை எப்படி நேசிக்காமல் இருப்பான்?
நாட்டின் சமூக இயக்கங்கள் உங்கள் படைப்புக்கு தாக்கம் அளித்ததுண்டா?
எனக்குள் ஆன்ம விழிப்பு ஏற்படுத்திய விடுதலை இயக்கம் .. அந்தக் கனல் மூண்டு எரிய விடாமல் பகைமைச சாம்பல் கொட்டிய திராவிட இயக்கம் ..எப்படி எனக்குள் தாக்கம் ஏற்படுத்தாது போய்விடும்?
உங்கள் படைப்புக்கள் பிறருக்குத் தாக்கம் ஏற்படுத்தும் ஏற்படுத்தவேண்டும் என்று நம்புகிறீர்களா? எதிர்பார்க்கிறீர்களா?
 எதையும் நம்பி எதிர்பார்த்து .. பரிசு விருது.. பட்டம் பதவி என்று உள்ளுக்குள் கணக்குப் போட்டு உபதேசம் செய்ய வரவில்லை நான்! என்றும் உள்ள என் தமிழுக்கு கைக்கும் இலக்கிய அறிவிற்கும் எட்டிய சிறு சிறுபாத்திரங்களில் நீர் முகர்ந்து கொண்டு வந்து என் சார்பாக நீர் வார்த்து என்னால் இயன்ற படி சற்றே வளர்த்து கிடைத்த வாய்ப்புக்கு உள்ளத்துள் நன்றி கூறி மேலும் என் தொடரவே நான் விரும்புகிறேன்.
கலந்துரையாடியவர் : சங்கர இராமசாமி

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →

0 comments:

Post a Comment