பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Sunday, January 11, 2015

தமிழுக்கு விடுதலை தா .. !

Hands tied

 
 
சி. ஜெயபாரதன், கனடா.

தமிழைச் சங்கச் சிறையில்
தள்ளாதே ! 
தங்கச் சிறை வேண்டாம் !
கை கால்களில்​ 
பொன் விலங்கு பூட்டாதே !​
மூச்சு விடட்டும்;
முன்னுக்கு வரட்டும் ! 
வேரூன்றிக் கிளைகள் விட்டு
விழுதுகள் 
வைய மெங்கும் பரவட்டும்
கழுத்தை நெரிக்காதே !
காற்றில் நீந்தட்டும் ! 
கால் பந்தாய் எற்றாதே !
தமிழைத் தவழ விடு !
நடைத் தமிழில் 
நடக்க விடு !
நடக்க நடக்கக் குருதி ஓடும் ! 
முடக்காதே தமிழை ! 
தவறி விழுந்தால்
எழுந்து நடக்கக் கைகொடு ! 
தோள் கொடுதூக்கி விடு !
தனித்தமிழ் தேடிதூய தமிழ் நாடி
வடிகட்டி ஏந்தி
வலை உலகில் மேயாதே ! 
பழமை பேசிப் பேசி 
ஆறிய கஞ்சியை மீண்டும்
சூடாக்கிக் குடிக்காதே !
அழுக்குச் சட்டையைத்
தூய நீரில்
துவைத்து துவைத்துக் கிழிந்தது !
புத்தாடை அணிய விடு ! 
புத்துயிர் பெற்றுப் பைந்தமிழ்
இத்தரணி ஆளவிடு !

Wednesday, October 1, 2014

குஞ்ஞுண்ணி மாஷ் கவிதைகள்

குஞ்ஞுண்ணி (1927 – 2006) மலையாளக் கவிஞர். கோழிக்கோடு இராமகிருஷ்ண மிஷன் சேவாஸ்ரம பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆசிரமவாசியாகவே வாழ்ந்தார். மலையாள மொழியின் நெளிவுகளை விடுகதை/வார்த்தை விளையாட்டு போல பயன்படுத்தி எளிய வாக்குகளில் சின்னஞ்சிறிய கவிதைகள் நிறையப் புனைந்திருக்கிறார். அதனால் கேரளத்தில் குழந்தைக் கவிஞர் என்று பரவலாக அறியப்பட்டாலும், ஆழ்ந்த தத்துவர்த்தமான பொருளுள்ள கவிதைகள் இவருடையது

---------------------------------------------------------------------------------------------------------------
Kunjunni mashநான்(நான் என்னும் தலைப்பில் எழுதிய சில குறுங்கவிதைகள்)
கு வுக்குப்பிறகு ஞ்ஞு
ஞ்ஞு வுக்குப்பிறகு ண்ணி
குவுக்கும் ஞ்ஞுவுக்கும் ண்ணிக்கும் பிறகு
குஞ்ஞுண்ணி
குஞ்ஞுண்ணிக்குப் பிறகு?
நான் ஒரு பூவிலிருக்கிறேன்
வேறொரு பூவின் தேனுக்காக
ஏங்குகிறேன்
குந்துமணியைவிடப் பெரியவன் நான்
என்னும் நினைப்பு உண்டாகும் போது
எள்ளைவிடச் சிறியவன் நான்
என்னும் உண்மையை
எள்ளளவும் அறிவதில்லை
என் முதுகில் ஒரு பெரிய யானை
என் நாக்கில் ஒரு ஆட்டுக்குட்டி
நானோ ஒரு எறும்புக் குட்டி
நான்
நானென்னும் சொல்லின்
இடையிலிருக்கிறேனா
விளிம்பிலிருக்கிறேனா
முன்னிலிருக்கிறேனா
பின்னிலிருக்கிறேனா
மேலேயிருக்கிறேனா
கீழேயிருக்கிறேனா
எள்ளில் எண்ணைபோல
விரவியிருக்கிறேனா
அல்லது
நானென்னும் சொல்லாயிருக்கிறேனா?
நான் எனக்கு நாணோ
ஆமென்றால் அம்பு எது?
எனக்கு நான் உபயோகமேயில்லை
அதற்கு ஒரு உதாரனம் சொல்கிறேன்
ஒருகைக்கு சொரியவேண்டுமானால்
அதேகையால் முடியாதில்லையா?
ஐயோ என்னையே எனக்கு துர்நாற்றம் அடிக்கிறதே
ஐயோ என் மனதிலிருந்து வெளிவர
என்னால் முடியவில்லையே
ஐயோ நான் என்னை
எங்கோ
மறந்துவைத்துவிட்டு வந்திருக்கிறேனே
நானொரு கவிதைக்காரன்
கபட கவிதைக்காரன்
விகட கவிதைக்காரன்
ஆனாலும் விதைக்காரன்
நான் இனி என் தந்தையாவேன்
அப்புறம் தாயாவேன்
அப்புறம் மகனாவேன், மகளாவேன்
அப்புறம் நான் என்னுடைய
நானுமாவேன்
என்னிடமே வந்துசேர்கின்றன
நான் அனுப்புவதெல்லாம்
யாரிலிருந்து அவற்றை பார்ப்பது
முட்டாள் தபால்காரன் கடவுள்
நெடும்பாதை
மழைக்கால அந்திப்பொழுது
நான் தனியன்
குஞ்சாயிருந்ததிலிருந்தே உண்ணுபவன்
குஞ்ஞுண்ணி
குஞ்ஞுண்ணி என்கிற நானா
நான் என்கிற குஞ்ஞுண்ணியா
என்பேர் என்பேர்
என் பேர் என் வேர்
என் மனம் என் மனை
என்னுடைய கவிதை நானேதான்
கற்பனையில் ஒரு
புலியைத் தேடுகிறேன் நான்
எனக்கு உறங்கத்தெரியாது
விழிப்பதற்கு தெரியவே தெரியாது
அரண்மனைக்கு காவல்நிற்கும்
நாய்தானே நான்
நாயின் விலாசம் என்ன?
நான் விழித்தபோது
என்னைக் காணவில்லை
ஆஹா அதிர்ஷ்டம்!
எனக்கு உயரம் குறைவு
என்னை உயர்த்தாதிருங்கள்
எனக்கு வேகம் குறைவு
என்னை தடுக்காதிருங்கள்
உயரமில்லாததே என்
உயர்வு என்றறிகிறேன் நான்
எனக்கொரு உலகம் உண்டு
உனக்கொரு உலகம் உண்டு
நமக்கொரு உலகம் இல்லை
நான்
யாருடைய கற்பனை
என்னைப் பெற்றது
நானே
என்னூடாக நடக்கவே
என்கால்களுக்குத் தெரியும்
நான் ஒரு கால்கவி
பெண் அறை அறியாததால் இருக்கலாம்
அறிந்தால்
நானொரு அரைக்கவி ஆவேனா
அல்லது
அரைக்கால்கவி ஆவேனா
நான்
அதிநவீனனில்லை
நவீனனுமில்லை
வெறும் வீனன்
நானொரு வாடகை வீடு
யாருடைய?
யாரில் இதில் வசிப்பது?
நான் இறப்பதற்காக
நான் வாழவேண்டுமென்று வைப்போம்
நான் வாழ்வதற்காக
யார் இறப்பார்?
நானென்னும் சிலுவையின் மேல்
அறையப்பட்டிருக்கிறேன் நான்
ஆனாலும்.. ஆ!
கிறிஸ்துவாய் மாறவில்லையே
நான் ஒரு துக்கம் மாத்திரம்
நானென்னும் பூவில்
நானென்னும் தேனைத் தேடியலையும்
நானென்னும் வண்டினை
கூவியழைக்கும் விளக்காய்
எரிகிறேன்
நான்
இந்த நான் இப்படியல்லாமலானால்
இந்த பிரம்மாண்டம் இப்படியல்லாமலாகும்
அடேயப்பா… நான்!
எனக்கு
பசிக்கும்போது உண்பேன்
தாகிக்கும்போது அருந்துவேன்
சோர்வடையும்போது உறங்குவேன்
உறங்கும்போது எழுதுவேன்
கவிதைகள்.
நான்
எனக்காக உண்கிறேன்
பிறருக்காக உடுக்கிறேன்
என்னைக் காணாது
என்னில் உருகாது
என்னுள்ளில் என்றும் இருக்கவேண்டும்
நான்
நான் போனாலே ஞானம் வரும்
ஞானம் வந்தாலே நான் போவேன்
இவ்வளவுதான் நான்
சொல்லவந்த விஷயமும்
இவ்வளவுதான்
அதற்குத் தேவையான வார்த்தைகளும்
இவ்வளவுதான்
தமிழில் இரட்டுற மொழிதல், சிலேடை போல மலையாள மொழியில் சில இடங்களை மிகச் சுவையாக எழுதியுள்ளார் (ஞானெனிக்கொரு ஞானோ, என்மனமென் மன…) வார்த்தைக்கூட்டுக்களை வைத்து விளையாடியுள்ளார் (குஞ்ஞில்நின்னுண்ணுன்னோன் குஞ்ஞுண்ணி). தமிழுக்கு இதைப் பெயர்ப்பது சவால்தான். அதன் தத்துவார்த்தப் பொருள் கெடாதவாறு முடிந்தவரை முயன்றிருக்கிறேன். நான் என்னும் வார்த்தைக்கு பெரும்பாலும் இடங்களில் மேற்கோள் இட்டு (‘நான்’) வாசித்தால் உள்பொருள் விளங்கும்.
இவரின் இன்னொரு கவிதை,
பறவை பறந்து வந்தது
பாறை மீது அமர்ந்தது
பறவை பறந்து சென்றது
பாறை மீதமானது
தேவதேவன் கவிதைகளை நினைவுபடுத்துகிறது. இன்னொன்று,
சர்க்கரைக் குன்றின் மேலிருந்து
குஞ்ஞுண்ணி எறும்பு அழுதது -ஒரு
குஞ்ஞுண்ணி எறும்பு அழுதது
எத்தனை சிறியது என் வாய்
எத்தனை சிறியது என் வயிறு
கம்பன் தந்துசென்ற “பாற்கடலை நக்கிக் குடிக்க ஆசைப்படும் பூனை” என்கிற படிமம் போலவே இந்த எறும்பும். பிரபஞ்சத்தையும் வாழ்க்கையையும் பற்றிய நேர்மறைப் பொருளும் எதிர்மறைப்பொருளும் ஒருங்கே இருக்கிறது.
(இரா.முருகன் மொழிபெயர்த்த குஞ்ஞுண்ணி மாஷின் சில கவிதைகளை இங்கே படிக்கலாம்)
-பிரகாஷ் சங்கரன்

Thursday, September 25, 2014

தமிழ்த் தலைவர்க்கு - பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1950-இல் எழுதியது !







































தமிழ்த்  தலைமை   தாங்குவரே,   தண்டமிழ்க்குத்   
தணிப்பறியாக்   கொடுமை    செய்தே
அமிழ்பகைவர்   தம்பாலே   தகுபொருளைத்
தண்டுகின்றார்,   அவர்க்குச்   சொல்வோம்!
தமிழ்க்குலத்தீர் !   தமிழ்குலைத்தீர் !   தமிழ்ப்பண்பு
தனை   விட்டீர்,   உங்கள்   வாழ்வும்
தமிழ்த்தாயின்   வாழ்வன்றோ ?   அந்நன்றி
தனக்கேனும்   தமிழ்காப்   பீரே !   

கனிச்சாறு -  1 - பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்

வெளியீடு

தென்மொழி   பதிப்பகம்

செந்தமிழ்   அடுக்ககம்

( சி.கே. அடுக்ககம் )

மேடவாக்கம் கூட்டுச்  சாலை

மேடவாக்கம்

சென்னை - 600 100.

94444 40449     

Wednesday, September 24, 2014

தன்னைத் தான் உணர்வதே ஞானம்..

முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும்
முடிவுகளால் தளர்ந்தவர்கள்,
நினைத்ததைச் சாதித்தும்
நடக்காததில் நோகும் பிறப்புகள்;

ஏக்கப் பெருமூச்சினுள் வெந்துவெந்தே
நித்தம் வாழ்பவர்கள்,
என்றேனும் மாறும் வாழ்க்கைக்கு
என்றென்றும் கனாக்காணும்; ஈசல் பூச்சிகள்;

வந்தவர் போனவர் பற்றியெல்லாம்
பகடி பேசும் பழையப் போர்வாள்கள்;
அடிப்பவன் ஓங்கியடித்தால் - அதிர்ச்சியிலேயே
மூச்சைவிடும் அற்ப உயிரின் பாவப் பிராணிகள்;

எதிலெல்லாம் ஏற்றம் உண்டென
தேடித் தேடியே இருப்பதை தொலைப்பவர்கள்,
இருக்க இருக்க மேலேறி
பேராசையின் பள்ளத்தில்வீழ்ந்து தானேஒழிபவர்கள்;

குடிக்க கஞ்சு போதும்
உடுத்த ஆடை போதும் என்றிருந்திருந்தால்
அடுத்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி என்பதை
அறிந்தும் ஆழ்கடலை தொடாதவர்கள்;

பிடித்தது பிடிக்காதது என்று பகுத்துப் பகுத்தே
உணர்ச்சிகளைக்கூட ஏற்றயிறக்கத்துள் தள்ளியவர்கள்,
பின் தவிக்கத் தவிக்க மூச்சடக்கி
வாழ்க்கையை ஞானம்தேடியே இழப்பவர்கள்;

இருப்பது ஒரு வாழ்க்கை யென்றதே - நாம்
இருப்பதைச் சிறப்பாக வாழ்வதற்கன்றி வேறென்ன? இன்னும்
நீள்வது உண்டெனில் பிறப்புகள் நீளட்டுமே – நாம்
பெறுவதைப் பேறென்று வாழுவமே' என உணர்தலேப் பேரறிவு;

இருப்பதும் மறைவதும் இயல்பு தானே
கிடைப்பதும் தொலைப்பதும் இயல்பு தானே
பிறப்பதும் அழிவதும் கூட இயல்பு தானே,
இயல்பில் - மாற்றமும் தோற்றமுமே மாறாதது;

ஏற்றத்தை இறக்கத்தை கண்டதும் ஆடாத
கிடைத்ததும் தொலைத்ததும் சட்டென மாறாத
இருப்பதை பகிர்ந்து இருப்பதில் சிறந்து
இயல்பின் அசைவுகளை முடியக் கண்களுள் பார்த்தால் -

மூளும் நெருப்பிலிருந்து பெய்யும் மழை
வீசும் காற்றுவரை தன்னுள் அடக்கமென்று தானே தெரியும்,
அதற்கும் ஆடாத எதற்கும் அசையாத மனமது
எப்போதும் தனித்திருக்கும், ஏகத்திலும் சுகித்திருக்கும்.
,
கலங்காத மனம் அறியாமை நோயின்றி
கேட்பதையெல்லாம் பெற்றுத்தரும், எதைக்
கேட்பது கேட்க மறுப்பதென்பதையும்
இயல்பிலடங்கி எண்ணம்வழியே எடுத்தியம்பும்!

எங்கும் அமைதி நிலவும், எவ்வுயிரும் சுகம் பெரும்!!
யாவருக்கும் மங்களம் மங்களமே யுண்டாகும்!!
----------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்









வித்யாசாகர் vidhyasagar1976@gmail.com

Monday, September 22, 2014

நிறைய வைத்திருக்கிறேன் ‘உனது நினைவையும் நமது பிரிவின் வலி தீராத ‘எனது கண்ணீரையும்…

டகுவைத்து
மீட்டமுடியாத நகைகளைப்போல
ஆசைப்பட்டு கிடைக்காமல்
காலாவதியாகிப்போன நினைவுகளுள்
நிறைய இருக்கிறாய் நீ;

உன்னைத் தொடாமல்
அதிகம் பார்க்காமல்
ஓரிரு வார்த்தையைக் கூடப் பேசாமல்
ச்சீ எதற்கிது எனும் சலிப்பின்றி சிநேகித்த எனதன்பில்
என்றுமே புனிதம் குறையாதிருப்பவள் நீ;

படைப்பு பிரம்மாக்கள் வடிக்கும்
சிலைக்கீடாக
நீ எனக்குள்ளே சிரித்திருக்கும் காட்சியுள்தான்
எனக்கு சூரியன் உதிப்பதும்
நிலா மறைந்த இருளில் கனவுகள் பூப்பதும்

நாட்கள் -
வாழ்வதற்கென வசப்படுவதும்;
சிலிர்த்த வார்த்தைகளுள்
புற்கள் முளைத்துவிடும் பசுமையாய்
என்றேனும் -
தூரத்தே காற்றோடு சேர்ந்துகேட்கும்
உனது குரலும்,
சட்டென எதிர்பாராது –

நீ எனை நேராகப் பார்த்துவிடும் பார்வையும்
மொட்டவிழ்த்து மேகம் களையும் இடைவெளிக்குள்
வானம் பார்க்கும் செம்பருத்தியின்
மகரந்தம் போன்றதெனக்கு;
சங்குப்பூவின் மீது நீளம் கீறி
பளிச்சென தகிக்கும் வெண்மையாய் – நீ

எதிர்ப்படும் நாட்களில்
கிழிகிறது என் மனசு,
நித்தமும் அந்த கிழிதலில் வடியும் வலிக்காக
தவம் பூணும் தருணங்களே இப்பொழுதுதுவரை
உறைந்துக்கிடக்கிறது உள்ளே;;

கல்லூரி வாசல்,
உங்கள் வீட்டின் இரும்புக் கதவு,
தெருவில் வரும் போகும் ஐஸ்வண்டி,
கூவாமல் வந்து -
கொடுத்துப்போகும் மல்லிகை பூக்காரி,
உனை தொட்டு தொட்டு விலகாமல் -
எப்பொழுதும் கூட வரும் உனதழகிய நிழல்,
நிற்பது நீயெனில் நான் விலக – சிலவேளை
நானெனில் நீ விலக –

அவ்வப்பொழுது நம் மௌனத்தை உடைத்துவிடும்
வரப்பேறிய நம் குறுக்குவழிச் சந்து,
இன்னும்..
உன்கூட வருகையில் எனை முறைக்காத
உன் அப்பா,
எனைக் கண்டிக்க முண்டாசு கட்டிக்கொள்ளாத – எனது
பெற்றோர்,

இப்படி நமைச் சுற்றி
உனைச் சுற்றி
நாளெல்லாம் டிக் டிக்கென்று அடித்துக்கொண்டே
கணப்பொழுதும் நகர்ந்துகொண்டிருக்கும்
கடிகார முட்களாக
எனக்குள்
எத்தனை எத்தனை நினைவுகள்
மறக்கப்படாமல் நரைமறந்திருக்கிறது..

சுதந்திரம் என்பது விடுபடுவது எனில்
அது முழுமையாக நிகழாமல்
முழுச் சுதந்திர உணர்வை
உனது சிந்தனைக்குள் தருவது
இந்தக் காதல்; காதலொன்றே..
செத்து
பிணம்போகும் தெருவில் கூட – நாளை
எனக்காகப் போடப்படும் மலர்களோடு
தெருவெல்லாம் உதிர்ந்திருக்க’
வாசனை பூத்து உனையே நினைத்திருக்க’ மேள
சப்தங்களோடு -
மனக்கூச்சலாக இரைந்துக்கொண்டே வர’

நிறைய வைத்திருக்கிறேன் ‘உனது நினைவையும்
நமது பிரிவின் வலி தீராத ‘எனது கண்ணீரையும்…



வித்யாசாகர் 

vidhyasagar1976@gmail.com

                        

Sunday, September 7, 2014

கர்ப்பம்- தெய்வப் பிறவி-ஆண்-பெண்-அலி-கூன்-கு்ருடு-முடம் -குள்ளம்- என்ன சொல்கிறார் திருமூலர்?







தந்திரம் எண் 07:பகுதி எண் 37:பாடல் எண் 03: மொத்தப் பாடல்களின் வரிசை எண் 2104

ஒன்றே குலமும் ஒரு்வனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்க்கதி இல்லுநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்னினைந் து்ய்மினே. 07:37:03:2104

(திராவிடநாடு கோரிக்கையைக் கைகழுவியபின்,பகுத்தறிவுப் பகலவர்கள் தேர்தலில் ஓட்டுச் சேகரி்த்திட ஏற்றுக்கொண்ட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" திருமூலர் தந்ததுதான்.)

திருமூலர் ஓர் சித்தர். தமிழகத்தில் வாழ்ந்தவர். திருமந்திரம் என்ற நூலை இயற்றியவர். திருமந்திரத்தில் 3000-ம் பாடல்கள் இருக்கின்றன. திரு்மந்திரம் கூறும் உடற்கூறு் வாழ்வியல் தத்துவங்கள் அறிவியல் அறி்ஞர்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. திருமூலர், நாகை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை-என்னும் திருத்தலத்தில் ஜீவசமாதி அடைந்தவர்.

மதம் என்பதைவிட, சமயம் என்று சொல்வதே சரியாகத் தோன்றுகின்றது.
சமயம்- என்றால் சமைத்தல் பக்குவப் படு்த்துதல் என்று பொருள் கொள்ளலாம். மனிதனைப் பக்குவப் படுத்துவதற்கு தோற்றுவிக்கப் பட்டவையே சமயங்கள் .அவற்றுள் .சைவமும் ஒன்று. சைவ சமயம் பேணிடப் பாடிய பாடல்களின் தொகுப்பு, பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன். அவற்றுள் பத்தாவதாக வருவது திருமந்திரம்.

3000-ம் பாடல்களைக் கொண்டது திருமந்திரம்.பாயிரம் மற்றும் ஏழு தந்திரங்களைக் உள்ளடக்கியது. ஒவ்வொரு தந்திரத்திலும் பல தலைப்புக்களில் பாடல்கள் உள்ளன். நாம் இங்கே காணவிருப்பது இரண்டாம் தந்திரம். அதில் 14-வதாக வரு்வது் கர்ப்பக் கிரியை 41 பாடல்களை உள்ளடக்கியது.

கருவுறுதல், பத்துமாத கால வரையறை, ஆண்,பெண்,அலி, குட்டை,நெட்டை, முடம்,கூன்,குருடு, முதலான மனிதப் பிறப்புக்கள் மற்றும் குழந்தயின்மைக்கான காரணங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன். அந்தப் பாடல்களை மட்டும் இங்கே காண்போம்.

இறைவன்,திருமால்,பிரமன்,அரசாள்வோர் போன்ற பிறப்புக்கள் எப்பொழுது தோன்றும்?



ஏற எதிர்க்கில் இறையவன் தானாகும்

மாற எதிர்க்கில் அரியவன் தானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே. 02:14:08:488

எண்சாண் அளவு உடம்பு குழந்தைக்கு உண்டாவது எப்போது?



சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்

அக்கிர மத்தே தோன்றுமவ் யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டு்மெண் சாணது வாகுமே. 02:14:14:464

உயிரில் பால் வேறுபாடு இல்லை;உடம்பில்தான் பாலியில் வேற்றுமை தோன்றும்: எப்படி?



மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்
காண்பதுஆண்பெண் அலிஎயனும் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான் அச்சோதிதன் ஆண்மையே. 02:14:27:477

ஆண்,பெண்,அலி உருவாதல் மற்றும் அரசாள் உருவாதல் எவ்வாறு?nt>



ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண்டு ஒத்துப் பொருந்த்தில் அலியாகும்
தாள்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. 02:14:28:478

ஆயுட்காலம் 100/80 ஆண்டுகள் என்றாக்கிட எப்படிப் பொருந்த வேண்டும்? 



(யோகியரால்தான் முடியும் என்கிறர்ர் திருமூலர்).
பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந்து இவ்வகை
பாய்ந்த்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே. 02:14:29:479

குட்டை(குள்ளம்),மூடம்,கூனம் பிறப்பது எப்போது?




பாய்கின்ற வாயுக் கு்றையில் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
காய்கின்ற வாயு நடுப்படில் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே. 02:14:30:480

மந்தபுத்தியுள்ளவரும், ஊமையரும், குருடரும் பிறப்பது எப்போது?



மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வைத்த குழவிக்கே. 02:14:31:481

ஆண், பெண், இரட்டைக்குழந்தை, அலி பிறப்பது எப்போது?



குழவி ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே. 02:14:32:482

குழந்தை அழகாய்ப் பிறப்பதும் கருத்தரிக்காமல் போவதும் எப்போது?



கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளையாட்கே. 02:14:

Thursday, September 4, 2014

கனிச்சாறு 7 : அனைத்தும் ஒன்றே ! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்



புகழ்எனக்குப் பொருட்டில்லை; நோக்கமில்லை:
பெருமையில்லை; பொருளும் இல்லை !
இகழ் எனக்குத் தாக்கமில்லை; துன்பமில்லை;
இழிவில்லை; இழப்பும் இல்லை !
திகழ்தமிழின் இனம்நாட்டின் பெருமையெல்லாம்
தேய்ந்தழிந்த உரிமை எல்லாம்
அகழ்வெடுக்கும் முயற்சியிலே இழிவெனினும்
அழிவெனினும் அனைத்தும் ஒன்றே !


துன்பம்எனைத் தொளைப்பதில்லை; அரிப்பதில்லை;
தொய்வடையச் செய்வ  தில்லை!
இன்பமெனக் கினிப்பதில்லை;  உவப்பதில்லை;
ஏக்கழுத்தும் செருக்கும்  இல்லை !
அன்புறுநம் செந்தமிழுக்கும்  இனத்திற்கும்
நாட்டிற்கும் உழைக்கும்  என்னைத்
தென்புறுத்தும் நல்லுணர்வில் மூழ்கிவிட்ட
திளைப்பினிலே எவையும் ஒன்றே !


சிறையெனக்குத் துன்பமில்லை; கொடுமையில்லை;
சிறிதுமெனைச் சிதைப் பதில்லை !
நிறைபணியால் சோர்வதில்லை; சலிப்பதில்லை;
நேர்மைநிலை குறைவ தில்லை !
குறைவறுநம் தூய்தமிழ்க்கும் மக்கட்கும்
நாட்டிற்கும் தொண்டு செய்தே
மறைவுறுநம் பெருமைகளை, உரிமைகளை
மலர்த்துகையில் அனைத்தும் ஒன்றே.  1994

கனிச்சாறு -ஏழாம் தொகுதி

தென்மொழி பதிப்பகம்

செந்தமிழ் அடுக்ககம்

(சி.கே.அடுக்ககம் (

மேடவாக்கம் கூட்டுச்சாலை

மேடவாக்கம், சென்னை - 600 100
-----------------------------------------
94444 40449


 

கனிச்சாறு 6 : இயற்கையும் தமிழும் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்



சோலையில் ஊதுங் குழலிசையில் - தமிழ்ச்
சொற்களுண்டு தம்பி கேட்கிலையோ ? - அதி
காலையில் பாடி யெழுப்பு கின்ற - கருங்
காகத்திடைத் தமிழ் ஓசையுண்டு.


கறவைப் ‘பசு’ விங்கே கத்துது பார் ! - அதில்
கன்னித் தமிழ்ச் சொல் லொலிக்குது பார் ! - நல்ல
கறவை யினங்கள் மரக்கிளையில் - குந்திப்
பாடுஞ் சொல் தமிழுக்குச் சொந்தந் தம்பி !


குழலுக்கு மிஞ்சிய குரலைக் கொண்டு - பச்சைக்
குழவி யொலித்திடுஞ் சொல்லென்ன சொல்?
குழலுடைப் பெண்டிர் ‘கணவரே’ என்று - தாம்
கொண்டாரைக் கூப்பிடும் சொல்லென்ன சொல் ?


அன்புக்கு  ‘நார்’ என்ற சொல்லெதைக் காட்டும்;
அன்புள்ளோர் தம்மைப் பிணைப்பதல்லால்,
;கண்’ ணென்ன்ற பெயர்ச்சொல்லை நீட்டிப்பார் - தம்பி,
;காண்’ என்ற வினைச்சொல் தெரிந்திலையோ ?


முழமுடைக் கைகட்கு ‘முழங்கைகள்’ என்றும் - ஓர்
முழமுடைக் கால்கட்கு “முழங்கால்கள்” என்றும்
எழுந்தன தமிழில், வேறேங்கே உண்டு ? - இது
எங்கள் தமிழ்மொழி தம்பி, படி!


தொடுப்பதால் மாலைக்குத் ’தொடை’ என்றுபேர்,
தொங்கினால் மாலையைத் ‘தொங்கல்’ என்பார்,
உடுப்பதால் ஆடைக்கு ‘உடை’ யென்று பேர்,
உண்பதெல்லால் சோர்றுக்கு ‘உண’” வென்று பேர்.


புல்லினைப் பறித்தற்குப் ‘பிடுங்கல்’ என்றும், மென்மைப்
பூவினை எடுத்தற்குக் கொய்தல் என்றும்
சொல்லிலே செயல் கண்ட தமிழனைப் போல் - வேறு
சொற்களைக் கொண்டது எந்த மொழி ?


‘சங்கம்’ வளர்த்த தமிழ் மொழி போல் - நின்று
சாகாமல் வாழ்வதுவும் எந்த மொழி ?
பொங்கிட்ட ஆழிக்குப் பொன்னான ஏடுகள்
போகப் பெருமை கொண்ட தெந்த மொழி ?


கன்னித்தமிழ் நாட்டினர் என்றுரைக்கு - மக்கள்
காது கொடாமல் இருப்பதென்னோ - இந்த
நனிதமிழ் நாட்டுக்குத் தீங் கென்று கண்டும் - நம்
நட்ட கற்கள் போல் இருப்ப தென்னோ?

( ஓரிரு வடசொற்கள் களையப்படவில்லை.)

1947-இல் எழுதி, 1952-இல் வெளி வந்தது.

கனிச்சாறு -ஆறாம் தொகுதி

தென்மொழி பதிப்பகம்

செந்தமிழ் அடுக்ககம்

(சி.கே. அடுக்ககம் )

மேடவாக்கம் கூட்டுச்சாலை

மேடவாக்கம்

சென்னை - 600 100
------------------------------
94444 40449



கனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா ? - பாவலரேறு பெருஞ்சித்திரனார்



‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது:
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது! !
தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும்
கொக்கரிப்புப் பேச்சாலும் தமிழ் வாழாது !
ஆர்த்தெழும் உள் உணர்வெலாம் குளி ருமாறே
இமிழ் கடல்சூழ் உலகமெலாம் விழாக்கொண் டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே !



பட்டிமன்றம் வைப்பதினும் தமிழ்வா ழாது:
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது:”
எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி நாலும்,
தட்டி, சுவர் ,தொடர்வண்டி, உந்துவண்டி
தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்’ என்றெழுதி வைத்தே
முட்டிநின்று, தலையுடைத்து முழங்கி னாலும்
மூடர்களே, தமிழ்வாழப் போவதில்லை !



செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும்
செப்பமொடு தூய தமிழ் வழங்கல் வேண்டும்:
முந்தைவர லாறறிந்து தெளிதல் வேண்டும்:
முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்;
வந்தவர்செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி,,
நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம்
நோக்கிநடை யிடல்வேண்டும் ! தமிழ்தான் வாழும் !



தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்
தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும் !
தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும்
தொங்கு கின்ற பலகைகள மாற்றச் சொல்லிக்
கண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும் !
கற்கின்ற சுவடிகளில், செய்தித் தாளில்,
விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்
விதைத்திடுதல் வேண்டும் தமிழ்: வாழும் அன்றே ! -பாவலரேறு -1970

நன்றி :

தூய தமிழ்த் திங்களிதழ், தென்மொழி. ஆகஸ்டு 2014

--------------------------------------------------------94444 40449---------------------------------------------------------






கனிச்சாறு 4 : பள்ளிக்குச் செல்லும் பயனுள்ள தம்பி, கேள் ! - பாவலர் பெஞ்சித்திரனார்

பள்ளிக்குச் செல்லும்
பயனுள்ள தம்பி, நீ!
எள்ளி நகைக்காமல்
இவ்வுரையை எண்ணிப்பார்.!

ஹ்க்ஷ்ச்ச்வீரத் திருமகன், நீ !
வீணான புன்செயல்கள்
ஆரத் தழுவி
அழித்தொழிந்து போவதுவோ ?

மன்னுந் தமிழ்மகன், நீ !
மக்கள்தொண் டாற்றாமல்
தின்னுந் தொழில்செய்தே
தீர்ந்துவிட எண்ணுவதோ ?

ஆறறிவு பெற்ற
அருமாந்த சேயோன், நீ !
சோறுடைக்க்கே வாழ்ந்து
சொந்தவுயிர்   மாய்வதுவோ?

தேய்ந்துவரும் எங்கள்
திருவினத்துக் கால்முளை, நீ !
ஏய்ந்துநில் ! நின்றியங்கு !
எந்தமிழுக்குத் தொண்டுசெய் !

சாய்ந்த தமிழினத்தைச்
சாகாமல் காத்துநில் !
வாய்ந்த தமிழகத்தீரே !
வந்தஇருள் சீப்பாயே ! -

கனிச்சாறு - ஐந்தாம்  தொகுதி

செந்தமிழ் அடுக்ககம்

(சி.கே.அடுக்ககம் )

மேடவாக்கம் கூட்டுச்சாலை

மேடவாக்கம், சென்னை - 600100
---------------------------------------------
94444 40449

கனிச்சாறு : 3 :எண்ணமும் செயலும் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்



எண்ணங்கள் வலியன !
     எண்னிய  வற்றுள்
திண்ணமாய்ச் சரியென
     நினைத்ததை எழுதுக !


எழுதிய வற்றைப்
   பலமுறை. படிப்பாய்
பழுதிலாக் கருத்தையே
   பரப்பிட முயல்வாய் !


பரப்பிய கருத்துக்கு
    மறுப்புகள் வரும் !
திருப்பி யவற்றைத்
     தேர்வுசெய் ! ஒன்றுநேர் !


தேர்ந்த்து தெளிந்த
       கருத்துக்குச்  செயல்படு
நேந்த செயலுக்கு
       எதிர்ப்புகள்  வரலாம் !


எதிர்ப்புகள், ஏளனம்,
      இழிவுகள்   கண்டு,
விதிர்விதிப்  புறாமல்
       வேகமாய் வினைபடு !


ஊக்கமும் வலிமையும்
        உள்ளத்தின் உரமும்
தாக்குறும்  எத்தகை
        எதிர்ப்பையும் தகர்க்குமே !  1985

கனிச்சாறு - நான்காம் தொகுதி

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 

பாடல்கள்

செந்தமிழ் அடுக்ககம்

(சி.கே.அடுக்ககம் )

மேடவாக்கம், சென்னை - 600 100
---------------------------------------------------
94444 40449







.

தென்மொழி : தென்மொழி : தமிழ் வாழ வேண்டுமா ? - பாவலரேறு பெருஞ்சித்திரனார் -1970



தமிழ் நாட்டின் உரிமை மீட்போம் !

தமிழை மீட்க வேண்டும் - தமிழ்

இனத்தை மீட்க வேண்டும் !

கமழக் கமழத் தமிழன் நாட்டைக்

கடிதில் மீட்க வேண்டும் !



அமிழப் போவதில்லை - வேறு

ஆசை நமக்கிங்கில்லை !

இமையும் பொறுப்பதில்லை - முன்

இழந்த உரிமை வேண்டும் !



வடவன் மொழியும் வேண்டா - அவன்

வழியும் நமக்கு வேண்டா !

வடவர் ஆட்சி வேண்டா ! - நாம்

வாழ உரிமை வேண்டும் !



பொறுத் திருந்து விட்டோம் - பூனை

போல் வாழ்ந்து விட்டோம் !

வெறுத்து விட்ட தாட்சி - தமிழ்

வீர வாழ்க்கை வேண்டும் !



கோழை யாகப் போனோம் - ஊமைக்

குருட ராக வாழ்ந்தோம் !

ஏழ்மை தொலைய வில்லை - தமிழ்

நாட்டின் உரிமை மீட்போம் !    -1993

கனிச்சாறு  - மூன்றாம் தொகுதி

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாடல்கள்

தென்மொழி பதிப்பகம்

செந்தமிழ் அடுக்ககம்

( சி.கே. அடுக்ககம் )

மேடவாக்கம் கூட்டுச்சாலை

மேடவாக்கம்

சென்னை - 600 100
------------------------
94444 40449

கனிச்சாறு : 2 : போர்ப்பாட்டு - பாவலரேறு பெருஞ்சித்திரனார்




முரசே முழங்குக ! முரசே முழங்குக !

முரசே முழங்குக, நீ !

அரசே செந்தமிழ் அரசே வாழ்கென,

முரசே முழங்குக நீ !



சங்கே ஊதுக ! சங்கே ஊதுக !

சங்கே ஊதுக, நீ !

எங்கோ மூவர் ஏற்றிய தமிழெனச்

சங்கே ஊதுக, நீ !




பம்பை பம்புக ! பம்பை பம்புக !

பம்பை பம்புக, நீ !

எம்பைந் தமிழர சோச்சுக என்றே

பம்பைஒ பம்புக, நீ !



கொம்பே அலறுக ! கொம்பே அலறுக !

கொம்பே அலறுக நீ !

எம்பே ரிசைத் தமிழ் எங்கணும் முழங்கிடக்

கொம்பே அலறுக, நீ !



கரடிகை உறுமுக ! கரடிகை உறுமுக !

கரடிகை உறுமுக, நீ !

நெருடர் நுழைக்கும் வடமொழி விரட்டிடக்

கரடிகை உறுமுக, நீ !



முழவே முரலுக ! முழவே முரலுக !

முழவே முரலுக, நீ !

கழலணி மறவர்கள் விறல்பெற நடந்திட

முழவே முரலுக, நீ !



பறையே பிறங்குக ! பறையே பிறங்குக !

பறையே பிறங்குக, நீ !

பொறையே கொண்டவர் பொங்கிடில் தீதெனப்

பறையே பிறங்குக, நீ !



உறும்பே கறங்குக ! உறும்பே கறங்குக !

உறும்பே கறங்குக, நீ !

உறும்பே ரிடும்பினும் உணர்வுளோம் யாமென

உறும்பே கறங்குக, நீ !  - 1952


கனிச்சாறு -இரண்டாம் தொகுதி

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்

தென்மொழி பதிப்பகம்

செந்தமிழ் அடுக்ககம்

(சி.கே.அடுக்ககம் )

மேடவாக்கம் கூட்டுச்சாலை

மேடவாக்கம்

சென்னை - 600 100
-------------------------
94444 40449