பெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.!

We'll not spam mate! We promise.

Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Sunday, October 26, 2014

ஒவ்வோர் உடம்பும் ஒவ்வோர் உலகம் !


பாவலரேறு பெருஞ்சித்திரனார்

ஒவ்வோர்  உடம்பும்
ஒவ்வோர்  உலகம் !
ஒவ்வோர்  உடம்பிலும்
உள்ளியங்(கு)  உயிர்தான்

உலகினில்  உள்ள
இயற்கையை  ஒத்ததாம்!
அலகிலா  அணுக்களே
அனைத்துலக  உயிரினம் !

மண்டுதசை  எலும்பெலாம்
மண்ணும்  மலைகளும் !
அண்டுசளி,  கோழை
அடுபனி,  குளிர்நிலை !

கடல்போல்  அரத்தம்
கனப்பே  நெருப்பு !
உடலிடை  ஓடும்
உயிர்ப்புவளி  காற்று !

மூளை,  ஆ  காயம்
மூண்டறிவு  இறைமை !
ஈளையும்  காய்ச்சலும்
எழுகுளிர்,  கோடை !

நம்முடல்  உலகினை
நல்லாட்சி  செய்திடும்
நம்மின்  ‘நான்’  உணர்வே
நாடாளும்  அரசனாம் !

அரசன்  எவ்வழி
அவ்வழி  குடிகள்போல்
இருக்கும்’நான்’  உணர்வே
இயல்பாய்  இயங்கினால்.

உடல்,  உலகு  ஆட்சி
ஒழுங்குற  நடந்திடும் !
உடலுறுப்  பனைத்தும்
ஒத்துழைத்  தியங்கும் !

இருக்கும்  ‘நான்’  உணர்வே
இறுமாப்பின்  இயங்கினால்
செருக்கு  மிகுந்  தாட்சி
சீர்கெட்டுப்  போகும் !

உடம்பின்  பூதங்கள்
ஒவ்வொன்றும்  நலமுடன்
திடம்பெற  அமைதலே
முதன்முதல்  தேவையாம் !

அவரவர்  உடம்பை
ஆளப்  பழகலே
எவர்க்கும்  இயற்கை
ஈந்த  வாழ்க்கையாம்!

அறிவெனும்  இறைமைத்
துணையுடன்  மாந்தச்
செறிவெனும்  நன்மனம்
சீர்மையோ  டியங்குதல்

உடலுலக  ஆட்சி
நடைபெற  உதவிடும் !
கடனிதாம்  எவர்க்கும்;
கடமை  தவ  றாதீர்!       -  1989

----------------------------------------------------------------------------------

கனிச்சாறு  -  தொகுதி -6  -காதல், இயற்கை, இறைமை

பாவலரேறு  பெருஞ்சித்திரனார்  பாடல்கள்
-------------------------------------------------------------------------------------

தென்மொழி  பதிப்பகம்,  மேடவாக்கம்  கூட்டுச்சாலை,

மேடவாக்கம்,  சென்னை - 600 100
-------------------------------------------------------------------------------------
94444 40449

Tuesday, October 21, 2014

அதுதான் என் ஆசை !





முன்னைப்  போலத்  தமிழ்  இனம்

இன்னல்  துயரம்  யாவும்  நீங்கித்

தன்னை  தானே  ஆள  வேண்டும்

அதுதான்  என்ஆசை !


மின்னைப்  போலக்  கதிரைப்  போல

அன்னைத்  தமிழ்த்  தாய்மொழி.  இம்

மண்ணை  ஆட்சி  செய்ய  வேண்டும் !

இதுதான்  உள்ஓசை!


உலகம்  முழுதும்  அலைந்து  சாகும்

இலக்கை  இழந்த  தமிழர்,  தமிழ்

நிலத்தில்  வந்து  வாழ  வேண்டும்!

அதுதான்  என்நோக்கம்!


புலத்தை  மீட்டுப்  புன்மை  தவிர்த்துக்

குலத்தில்  தமிழர்  ஒன்றே  என்னும்

இலக்கை  மீண்டும்  அடைய  வேண்டும் !

இதுதான்  என்ஆக்கம்!



ஊரும்  பேரும்  உலகம்  போற்ற

தாரும்  நிலமும்  தமிழர்  தாங்க

ஏரும்  நீரும்  செழிக்க  வேண்டும்

அதுதான்  என்வேண்டல்!



தூரும்  தும்பும்  கசடும்  நீக்கி

வேறும்  அன்பும்  மனதில்  ஊறக்

கூறும்  நலன்கள்  குவித்தல்  வேண்டும்

இதுதான்  என்தூண்டல்!


பாவலரேறு  -1985




தீவாளியா ?


எண்சீர் விருத்தம்

அசுரர்  என்று  தமிழர்களை,  ஆரியர்கள்
அழைத்தார்கள்;  சுரர்  என்று  தம்மைச்  சொன்னார்
பசிகொண்ட  நரி  போலே  ஆரியர்கள்
பழந்தமிழர்  தமையணுகி,  வயிற்றைக்  காட்டி
இசைந்தவர்பால்  கூத்தாடி,  இனத்தைக்  கூட்டி
இடம் பெற்றுக்  கலாம்  விளைத்துக்  குடித்தனத்தை
வசம்பார்த்துப்  பெரிதாக்கி  வைத்த  பின்னர்
வளநாட்டில்  ஆதிக்கம்  பெற  நினைத்தார்.


செங்கதிரை  நாழிகைகள்,  மேற்கில்  தள்ளும்
செயல்  போலே,  ஆரியர்கள்,  தமிழர்  வாழ்வில்
பொங்குதமிழ்க்  கலைச்செல்வம்  மறையும்  வண்ணம்
புனைசுருட்டுச்  செய்து  வந்தார்;  ஐயகோ  நம்
மங்காத  தமிழ்  மறவர்  வரலாறெல்லாம்
மங்கும்  வகை  செய்தார்கள்;  வையங்  கண்ட
தங்கத்தை  இரும்பென்று  சொன்னார்;  ஐயோ
தமிழரலெல்லாம்  அசுரர்கள் !  தாம்சு  ரர்கள் !


அரக்கரென்றார்;  அசுரர்  என்றார்;  நம்மையெல்லாம்
அழகற்ரோர்  ஒழுக்கமிலார்,  என  வரைந்தார்
சுரக்கவில்லை  மலையருவி !  உணர்ச்சி  வெள்ளம்
தோன்றவில்லை  நெஞ்சத்தில்  நம்மை  மறந்தோம்
குரங்கி னங்கள்  என்றுரைத்தார்,  நம்மை  யெல்லாம்
குறுங்கரடிக்  கூட்டமென்றார்  கேட்டி  ருந்தோம்
அரிக்கின்ற  செல்,  அழிக்க  மறந்த  தோள்கள்,
அன்று  போல்  இன்றுமுண்டு  குன்றத்  தைப்போல்.


வாலியின்  பால்  வஞ்சகத்தைச்  செய்த  ராமன்
வாலிக்கு  மோட்சத்தை  அருள்  செய்  தானாம் !
கோலைத்தன்  வசமாக்கச்  சதையை  விற்ற
கொடியவன்பேர்  ஆழ்வானாம் !  உடன்  பிறந்தீர்,
கேலி  யொன்று  கேட்டீரோ,  நரகன்  என்போன்,
கீழ்ச்  செயல்கள்  செய்தானாம்,  சுரர்கட்  கெல்லாம்
ஏலாத  செயல்  செய்த  பாவி  யாம்,  அவ்
விந்திரனின்  ஆட்சியையும்,  பறித்ததுண்டாம்.


பெண்ணினத்தைக்  கொல்லாமை  கடைப்  பிடித்த
பெரியானை,  நரகன்  எனும்  தமிழ்ச்  சேயைப்
பெண்டாட்டி  தனையனுப்பி,  மானமின்றிப்
பெருவெற்றி  கிழித்தாராம்  கண்ண  வீரர்,
பண்டிகையாம் !  தீவாளி  அந்த  நாளாம் !
பல்லக்கை  வழிகூட்டி  அனுப்பு  கின்ற
பெண்டுக்குப்  போடுதல்  போல்  கழுத்துக்  கோடி
பெரிது  பெரி  தாய்  வாங்கிப்  படைய  லிட்டே.


அணிந்திடவும்  வேண்டுமாம்,  அந்த  நாளில் !
அக  மகிழ  வேண்டுமாம்.  அதுவுமின்றித்
தணியாத  மகிழ்ச்சிதனை,  அறிவை  அந்  நாள்
தலைமுழுக  வேண்டுமாம்;  தமிழர்  மானம்
தணல்  பட்டுப்  படபடென  வெடிகொளுத்த  வேண்டுமாம்;  இப்
பணி  யிட்டோர்  ஆரியர்கள்  தமிழர்  என்னும்
பண்டிதர்கள்  இவற்றிற்குக்  கவிதை  செய்தார்.


இனமழிப்பார்  அடிசுமக்கும்  படிச்  சுவர்கள்
இனமழிப்பார்  அடிசுமப்பார்  படிச்சவர்கள் !
கன  லென்று  நடுங்கினரோ ?  நம்மினத்தைக்
கசந்தாரோ ?  வற்ரியதோர்  ஓலையைப்  போல்
மனம்  சுருண்டு  போனாரோ ?  தம்மைத்  தாமே
மறந்தாரோ,  ஐயகோ  தமிழர்  தம்முன்
முன  மிருந்தார்  சிலகம்பர்:  விட்டதாலே
முளத்தகம்  பக்கிளைகள்  மும்ம  டங்கோ ?


பாரதிதாசன்  பாடல்கள்

தொகுப்பு:

டாக்டர் தொ.பரமசிவன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

சென்னை- 600 098
-----------------------------------------
26359906, 26251968



Monday, October 20, 2014

யாத்திரை போகும்போது....


சீப்புக்  கண்ணாடி  ஆடை  சிறுகத்தி  கூந்தல்  எண்ணெய்

சோப்புப்  பாட்டரி  விளக்குத்  தூக்குக்  கூஜாதாள்  பென்சில்

தீப்பெட்டி  கவிகை  சால்வை  செருப்புக்  கோவணம்  படுக்கை

காப்பிட்ட  பெட்டி  ரூபாய்  கைக்  கொள்க  யாத்திரைக்கே.


பாரதிதாசன்  வாழ்ந்த  காலத்தில்  ஊர்ப்பயணம்  செல்ல  நேரிட்டால் 
எவ்வெவற்றைக்  கொண்டு  செல்ல வேண்டும்  என்பதனைப்
பாட்டாகப்  பாடியுள்ளார்.  காலம்  மாறினாலும்  கொண்டு செல்லக்கூடிய பொருட்களின்  வடிவம்  மாறினாலும்  இன்றும்
பொருத்தமாகவே  தோன்றுகின்றது.

பாரதிதாசன்  பாடல்கள்

தொகுப்பு

டாக்டர்  தொ.  பரமசிவன்

நியூ  செஞ்சுரி  பொக்  ஹவுஸ் (பி) லிட்

சென்னை - 600 098
-------------------------------
26359906  -  26251968

ஒரு  சந்தேகம்.  நாட்டுடைமையாக்கப்பட்ட  படைப்புகளுக்கும் 

பதிப்புரிமை  கொண்டாடுவதேன் ?

17 மணிநேரம் பக்கிங்காம் கால்வாயில் தோணியில் பயணித்து மாவலிபுரம் சேர்ந்த உண்மை நிகழ்வு !





மாவலிபுரச்  செலவு

 ( செலவு -பயணம் )

ஒரு  நாள்  மாலை  4  மணிக்குச்  சென்னை,  பக்கிங்காம்  கால்வாயிற் தோணியில்  ஏறி,  மறுநாள்  காலை  9  மணிக்குத் தன்  நண்பர்களுடன்   மாவலிபுரம்   சென்றடைகின்றார் பாரதிதாசன்,  .

அவரும்,  அவர்  தோழர்  பலரும்,  வழிப்போக்கின்  இடைநேரம் இனிமையாகக் கழித்தனர்.  எனினும்,  அப்பெருந்  தோணியைக்  கரையோரமாக  ஒரு கயிறுபற்றி  ஒருவன்  இழுத்துச்  சென்றமையும்,  மற்றோர்  ஆள்  பின்புறமாக ஒரு  நீளக்  கழியால்  தள்ளிச்  சென்றமையும்  இரங்கத்தக்க  காட்சியாய் அமைந்தது  என்று  குறிப்பிடுகிறார்.

அதையும்  ஆங்குக்  கண்ணைக்  கவர்ந்த  மற்றும்  சில  காட்சிகளையும் விளக்கி  அப்போது  எழுதிய  பாட்டு.



சென்னை  யில்ஒரு  வாய்க்கால்  -புதுச்
சேரி  நகர்  வரை  நீளும்.

அன்னதில்  தோணிகள்  ஓடும்  - எழில்
அன்னம்  மிதப்பது  போல.

என்னருந்  தோழரும்  நானும்  - ஒன்றில்
ஏறி  யமர்ந்திட்ட  பின்பு

சென்னையை  விட்டது  தோணி  - பின்பு
தீவிரப்  பட்டது  வேகம்.

தெற்குத்  திசையினை  நோக்கி  -  நாங்கள்
சென்றிடும்  போது  விசாலச்

சுற்றுப்  புறத்தினில்  எங்கும்  - வெய்யில்
தாவிடும்  பொன்னொளி  கண்டோம்.

நெற்றி  வளைத்து  முகத்தை  - நட்டு
நீரினை  நோக்கியே  நாங்கள்

அற்புதங்  கண்டு  மகிழ்ந்தோம்  - புனல்
அத்தனையும்  ஒளி  வானம்.

சஞ்சீவி  பர்வதச்  சாரல்  என்று
சாற்றும்  சுவடி  திறந்து

சஞ்சார  வானிலும்  எங்கள்  - செவி
தன்னிலும்  ஏற்றி

அஞ்சாறு  பக்கம்  முடித்தார்  - மிக்க
ஆசையினால்  ஒரு  தோழர்

செஞ்சுடர்  அச்சம  யத்தில்  - எம்மைச்
செய்தது  தான்  மிக்க  மோசம்

மிக்க  முரண்  கொண்ட  மாடு  - தன்
மூக்குக்  கயிற்றையும்  மீறிப்-

பக்க  மிருந்திடும்  சேற்றில்  - ஓடிப்
பாய்ச்சிடப்  பட்டதோர்  வண்டிச்

சக்கரம்  போலிருள்  வானில்  - முற்றும்
சாய்ந்தது  சூரிய  வட்டம்!

புக்க பெருவெளி  யெல்லாம்  - இருள்
போர்த்தது !  போனது  தோணி.

வெட்ட  வெளியினில்  நாங்கள்  - எதிர்
வேறொரு  காட்சியும்  கண்டோம்.

குட்டைப்  பனைமரம்  ஒன்றும்  - எழில்
கூந்தல்  சரிந்த  தோர்  ஈந்தும்

மட்டைக்  கரங்கள்  பிணைத்தே  - இன்ப
வார்த்தைகள்  பேசிடும்  போது

கட்டுக்  கடங்கா  நகைப்பப்  - பனை
கலகல  வென்று  கொட்டிற்றே.

எட்டிய  மட்டும்  கிழக்குத்  - திசை
ஏற்றிய  எங்கள்  விழிக்குப்

பட்டது  கொஞ்சம்  வெளிச்சம்  -அன்று
பெளர்ணமி  என்பதும்  கண்டோம்.

வட்டக்  குளிர்  மதி  எங்கே  - என்று
வரவு  நோக்கி  யிருந்தோம்.

ஒட்டக  மேல்  அரசன்  போல்  - மதி
ஓர்  மரத்  தண்டையில்  தோன்றும்-

முத்துச்  சுடர்  முகம்  ஏனோ  -  இன்று
முற்றும்  சிவந்தது  சொல்வாய்.

இத்தணை  கோபம்  நிலாவே  - உனக்கு
ஏற்றிய  தார்  என்று  கேட்டோம்.

உத்தர  மாகஎம்  நெஞ்சில்  - மதி
ஒன்று  புகன்றது  கண்டீர்.

சித்தம்  துடித்தது  நாங்கள்  - பின்னால்
திரும்பிப்  பார்த்திட்ட  போது.

தோணிக்  கயிற்றினை  ஓர்  ஆள்  - இரு
தோள்  கொண்டிழுப்பது  கண்டோம்.

காணச் சகித்திடவில்லை  - அவன்
கரையோடு  நடந்திடுகின்றான்.

கோணி  முதுகினைக்  கையால்
கோல்  நுனி  யால்  மலை  போன்ற

தோணியை  வேறொருவந்தான்  - தள்ளித்
தொல்லை  யுற்றான்  பின்  புறத்தில்

இந்த  உலகினில்  யாரும்  - நல்
இன்ப மெனும்  கரை  யேறல்

சந்தமும்  தொழிலாளர்  -புயம்
தரும்  துணையன்றி வேறே

எந்த  விதத்திலும்  இல்லை  - இதை
இருபது  தரம்  சொன்னோம்.

சிந்தை  களித்த  நிலாவும்  - முத்துச்
சிந்தொளி  சிந்தி  உயர்ந்தான்.

நீல  உடையினைப்  போர்த்தே  - அங்கு
நின்றிருந்தாள்  உயர்  விண்ணாள்.

வாலிப  வெண்மதி  கண்டான்  - முத்து
மாலையைக்  கையிலிழுத்து

நாலு  புறத்திலும்  சிந்தி  - ஒளி
நட்சத்திரக்  குப்பையாக்கிப்

பாலுடல்  மறையக்  காலை  - நாங்கள்
பலிபுரக்  கரை  சேர்ந்தோம்.

பாரதிதாசன்

தொகுப்பு

டாக்டர்.தொ.பரமசிவன்

நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

சென்னை- 600 098  26359906, 26251968


 

செவ்வாய்க்கு விண்கலம்  அனுப்ப நம்மால் முடியும்.
பக்கிங்காம்  கால்வாயைப் பயன்படுத்த  முடியவில்லை.
இதை விதி என்பதா?  அல்லது  சதி  என்பதா ?




Sunday, October 19, 2014

சாவானா மில் படுகொலைப் பாட்டு

செய்தித்தாள்கள் புகாத ஊர்ப் புறங்களில் செய்திகளை விரித்துச் சொல்ல, சிந்து கவிஞர்கள் தோன்றியதைப் பார்க்கிறோம். இச்சிந்து கவிஞர்கள் ‘டேப்பு’ எனும் கருவியின் மூலம் இசைத்து மக்களிடையே செய்திகளை உலவவிட்டார்கள்.

1895-ல் வந்த படுகளச் சிந்து, 1888-ல் வந்த தீப்பற்றிய சிந்து, 1906-ல் கம்பம் தாதப்பன் குளச்சிந்து, 1970-ல் திருத்தணி முருகன் குளத்தில் தற்கொலை செய்துகொண்ட தற்கொலைச் சிந்து, 1987-ல் அரியலூர் ரயில் விபத்து எனப் பாடப்பட்ட செல்வாக்குப் பெற்ற சிந்துகள் பல. இப்படிப்பட்ட சிறப்புக்குரிய பெருவழக்காகப் பாடப்பட்ட கொலைச் சிந்துவைக் கையாண்டதில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் ஒருவர். இவரின் பாடல்கள், மொழி உணர்வு இவரின் அரசியல் கருத்துகள் எனச் சிலவற்றைத்தான் யாவரும் பேசுவர். ஆனால் புரட்சிக் கவிஞருக்கு இருந்த நாட்டார் வழக்காற்றியல் குறித்த பார்வை தமிழகத்தின் கவனத்துக்கு வரவே இல்லை.

கொலைச்சிந்துவின் நோக்கம்

மனித உயிரிழப்புச் செய்திகளைப் பாடுபொருளாகக் கொண்டு பாடப்படும் கொலைச் சிந்துகளின் நோக்கம் செய்திகளை மட்டும் மக்களிடத்தே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதல்ல. கொலை நிகழ்வைக் காரணங்களாகச் சுட்டிக்காட்டி அத்தகைய காரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதேயாகும்.

குடும்ப நலத்திட்டம், மாமியார் மருமகள் சிக்கல், பொருந்தா மணம், பொருளாசை கூடாது, ஒற்றுமை, இரக்கம் எனப் பல பாடுபொருள்களை உள்ளடக்கியும் கொலைச் சிந்துகள் பாடப்பட்டவைதான். இதில் மிக முக்கியமானது புரட்சிக் கவிஞர் பாடிய ‘சாவானா மில் படுகொலைப் பாட்டு’. கவிஞர் குறிப்பிடும் படுகொலைப் பாட்டு என்பது கொலைச் சிந்துதான்.

தொழிலாளர் போராட்டம்

19-ம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸ் அரசு புதுவையில் பெரிய பஞ்சாலையைத் தொடங்கியது. இது அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருந்தது. ஆசிய நாடுகளிலேயே பெரிய பஞ்சாலைகளாகச் சென்னை பக்கிங்ஹாம் கர்நாட்டிக் மில்லும் (பி அண்ட் சி) புதுவை சாவானா டெக்ஸ்டைல்ஸ் மில்லும் விளங்கின. ‘சாவானா’, இப்போது சுதேசி மில் எனப் பெயர் மாறி உள்ளது.

1900-லிருந்து 1935 வரை சாவானா மில்லில் சங்கம் கிடையாது. தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சிறுசிறு போராட்டம் மட்டும் செய்து வந்தனர். ரேடியர் மில்லில் தொடங்கிய சம்பளப் போராட்டம், 1935-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காம் தேதியில், 10 மணிநேர வேலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துப் போராடத் தூண்டியது. 1936-ல் சோசலிஸ்ட், தீவிர சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டணி ஆட்சி பிரான்சில் வந்தது.

மக்கள் தலைவர் வ.சுப்பையா ஜூலை கடைசி வாரத்தில் 3 மில் தொழிலாளிகளையும் இணைத்துப் போராட, அப்போதைய புதுவை பிரான்சு அரசு போராடும் தொழிலாளிகள் மீது இராணுவத்தை ஏவி பீரங்கியால் சுட்டது. 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
1936-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தொழிலாளிகளின் மீது பாடப்பட்டதே இப்படுகொலைப்பாட்டு:

பார்க்கப் பரிதாபமே - மில்லில்
பாடுபட்டோர் சேதமே - உளம்
வேர்க்கும் அநியாயமே - மக்கள்
வீணில் மாண்ட கோரமே

அன்றைய அச்சம்பவம் வியாபாரிகள், தொழிலாளிகள், பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் எனப் பலரையும் கண்டனம் செய்ய வைத்தது. சர்வதேசத் தாக்கத்தையும் இச்சம்பவம் கண்டது. புதுவையின் அனைத்துப் பொதுக்கூட்ட மேடையிலும் பாரதிதாசனின் இப்படுகொலைப் பாட்டு தொடர்ந்து பாடப்பட்டது. தொழிலாளர் வர்க்க வரலாற்றையும் சமதர்மத்தையும் இப்பாடல் பேசியது.

ஏழையாம் தொழிலாளர் உரிமைதனைக் கேட்பதற்கும்
இங்கொரு வழியுமில்லை
ஏகாதிபத்தியத் திமிர் கொண்டு நம்மவர்க்கே
இழைத்திடு கின்றார் தொல்லை!

எனப் பாடிய பாரதிதாசனின் புதுவை சாவானா மில் படுகொலைப் பாட்டைத் தொடர்ந்து பல இடதுசாரிக் கவிஞர்களும் இந்நிகழ்வைப் பாடியும் எழுதியும்வந்தனர். ‘வெண்மணி தினம்’ என்பது போல புதுவை சாவானா மில் படுகொலைச் சம்பவத்தை ‘ஜூலை தியாகிகள் தினம்’ என இன்றும் நினைவுகூர்வர். இதற்கு பாரதிதாசனின் கொலைச்சிந்து எடுத்துகாட்டாகும்.

கட்டுரையாளர், பாரதிதாசன் ஆய்வாளர், 


தொடர்புக்கு: narpanbu@gmail.com

நன்றி :- தி இந்து 



Thursday, October 16, 2014

மயிர்ச்சாதி அருளி - தென்மொழி - அக்டோபர் 2014

தூயதமிழ்த்  திங்களிதழ்

தென்மொழி

அக்டோபர் -2014.


       


 முன்தோன்றி  மொழிதோற்றி  பண்பில்  நல்ல
            முழுநாக  ரிக  வாழ்வில்  முற்றித்  தோய்ந்து
நன்னெஞ்சஞ்  செழுமைமிகச்  சிறந்து  யர்ந்த
            நந்தமிழப்  பேரினத்தீர் !  ஒன்றும்  அற்றார்
மென்மெலவே  தொடருழைப்பால்  மேன்மேல்  ஏறி
             மினுமினுக்கு  உலகோரில்  உயர்ந்தோம்  என்றே
என்னென்ன  வொஆய்வில்  இயைந்(து)  ஆர்கின்  றீரே!

                                                                                                            - அருளி

குறிப்பு :- “இடு  மயிர்”  என்பதுவே  “இடை  மயிர்”  என்று  ஆயினது.

                     இன்றைய  ”சவரி”  முடி  அன்று  “இடு  மயிர்” !

                      சான்று : பத்துப்பாட்டு  ;-  மதுரைக்  காஞ்சி - வரி -391


மதுரைக்காஞ்சி :- பாடல்  வரிகள்  390 முதல் 394- வரை.

அடிபடு  மண்டிலத்து  ஆதி  போகிய,

கொடி  படு  சுவலவிடு  மயிர்ப்  புரவியும்;

வேழத்து  அன்ன  வெரு  வரு  செலவின்,

கள்  ஆர்  களமர்  இருஞ்  செரு  மயக்கமும்: .

நன்றி : - தென்மொழி  - 94444  40440, thamiznilam @ gmail.com

நன்றி :- செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள்
                  தமிழ்ப்  பல்களைக் கழகம், தஞ்சாவூர்.




........

    
 

Sunday, October 12, 2014

புறநானூறு -கடவுள் வாழ்த்து - பாடியவர் - பெருந்தேவனார் - பாடப்பட்டோன் -இறைவன்




கண்ணி  கார்நறுங்  கொன்றை;  காமர்

வண்ண  மார்பின்  தாருங்  கொன்றை:

ஊர்தி  வால்வெள்  ளேறே;  சிறந்த

சீர்கெழு  கொடியும்  அவ்வேறு  என்ப  :

கறைமிடறு  அணியலும்  அணிந்தன்று:  அக்கறை

மறைநவில்  அந்தணர்  நுவலவும்  படுமே:

பெண்ணுரு  ஒரு  திறன்  ஆகின்று:  அவ்வுருத்

தன்னுள்  அடக்கிக்  கரக்கினும்  சுரக்கும்;

பிறை  நுதல்  வண்ணம்  ஆகின்று;  அப்பிறை

பதினெண்  கணனும்  ஏத்தவும்  படுமே:

எல்லா  உயிர்க்கும்  ஏமம்  ஆகிய,

நீரறவு  அறியாக்  கரகத்துத்,

தாழ்சடைப்  பொலிந்த  அருந்தவத்  தோற்கே.  

செம்மொழித்தமிழ் 

பதிப்பாசிரியர்

பேராசிரியர் ம.வே. பசுபதி

முதல்வர்  (ஓய்வு )

காசிவாசி சுவாமிநாத  சுவாமிகள்

கலைக்கல்லூரி

திருப்பனந்தாள்

தமிழ்ப் பல்கலைக் கழகம்

தஞ்சாவூர்

முதற்பதிப்பு  சூன்  2010

பக்கம்  1568  + 20

விலை  ரு 300/-

Saturday, October 11, 2014

ஊரைத் திருத்துமுன், உலகைத் திருத்துமுன் உன்னைத் திருத்தடா தமிழா - பாவலரேறு பெருஞ்சித்திரனார்


ஊரைத்  திருத்துமுன்,  உ;லகைத்  திருத்துமுன்
உன்னைத்  திருத்தடா  தமிழா  -  நீ
உன்னைத்  திருத்தடா  தமிழா !

பாரைத்  திருத்திடல்  நல்ல  முயற்சியே !
பாட்டனும்  பூட்டனும்  செய்த  முயற்சியே !
யாரைத்  திருத்தினர்;  யாது  வளர்ச்சியே ?
யாங்கணும்  யாங்கணும்  வாழ்க்கை  தளர்ச்சியே !

வேரைத்  திருத்துதல்  பயனளித்திடலாம் !
வினையைத்  திருத்திடும்  முயற்சியோ  சுடலாம் !
கூரை  திருத்தினால்  நிற்குமோ  சுவரே ?
குழியைத்  திருத்தாமல்  இருப்பது  தவறே !

உலகைத்  திருத்திட  வலம்  வருகின்றாய் !
உன்னைத்  திருத்தெனில்  உள்ளம்நோ  கின்றாய் !
அலகிலா  முயற்சிகள்  அறங்கள்.  சட்டங்கள்
ஆரைத்  திருத்தின?  பணயம்கட் டுங்கள் !

ஆயிரம்  ஆண்டுக்கு  முன்னும்  இருந்தனர்:
அம்மண  மாகவே  உண்டு  திரிந்தனர்;
ஏயின  திருத்தங்கள்  என்னென்ன  கண்டாய்?
எழிலுடை !  தலைமயிர் !  மற்றென்ன  விண்டாய்?

வெள்ளுடை  மேனியில்  புரள்வதோ  நேர்மை ?
விஒரிமயிர்  வாளி  முடித்தலோ  சீர்மை ?
உள்ளத்துள்  கள்ளமும்  கரவும்  கிடப்பதா ?
ஊரினை  ஏமாற்றி,  மறைந்தே  நடப்பதா ?

பொத்குமையைக்  காணாத  உளம்என்ன  உளமோ ?
பூசலை  விலைத்திடும்  வளமென்ன  வளமோ?
புதுமைஎன்  றுரைப்பது  செல்வர்க்குச்  செழிப்பு
போக்கற்ற  ஏழையர்க்  கேதுஅதால்  விழிப்பு ?

மன்றங்கள்  எத்தனை ?  எத்தனைக்  கோயில் ?
மடிபவர்  எத்தனைப்  பேர்  தீமை  நோயில் ?
இன்றைக்கும்  நேற்றைக்கும்  வேற்றுமை  யாது ?
இழிவினை,  அழகினால்  மூடலன்  றேது ?

கல்வியும்  செல்வமும்  ஓங்குதல்  மேலோ ?
கணக்கிலா  இழிவுகள்  குவிதலெப்  பாலோ ?
சொல்,வினை  உளத்தோடு  பொருந்துதல்  வாழ்வே !
சொக்கட்டான்  காய்போல்  உருளுதல்  தாழ்வே ! 


கனிச்சாறு  -  தொகுதி -4   


தென்மொழி  பதிப்பகம்

மேடவாக்கம்  கூட்டுச்சாலை

மேடவாக்கம்,  சென்னை  - 600  100
--------------------------------------------------
94444  40449

Friday, October 10, 2014

எப்படியேனும் இத்தமிழகத்தை முப்படி உயர்த்திடல் வேண்டும் - என்றும் தமிழாய் வாழும் பெருஞ்சித்திரனார் !



எப்படியேனும்  இத்  தமிழகத்தை
முப்படி  உயர்த்திடல்  வேண்டும்  -  என்
மூச்சதற்  குதவிடல்  வேண்டும் !

முப்படி  நிலையில்  முதற்படி  தமிழ்ப்படி  !
முறைப்படி  அதன்நலம்  வேண்டும் !  -  முழு
முயற்சியும்  அதற்கிடல்  வேண்டும்  !

தமிழ்ப்படி  யேறின்  தமிழினம்  ஏறும் !
தமிழ்நிலை  இழிவுகள்  மாறும் !  -  நம்
தலைவிலை  எனின்  -  தரல்  வேண்டும்  !

தமிழின  உரிமையே  தமிழ்நில  உரிமை
தருமெனில்  மறுப்புரை  உண்டோ ?  -  இத்
தலைமுறைக்(கு)  உழைப்(பு)  -  அது  வன்றோ  ?

தமிழ்மொழி  வாழ்க  !  தமிழ்மொழி  வாழ்க  !
தமிழ்மொழி  வாழ்க  -  வென்  றுரைப்[போம் !  -  அதால்
தமிழினம்  மலர்க  -  வென்  றழைப்போம்  !

தமிழினம்  வாழ்க  !  தமிழினம்  வாழ்க  
தமிழினம்  வாழ்க  -  வென்  றுரைப்போம்  -  அதில்
தமிழ்நிலம்  தழைக்க  -  வென்  றுழைப்போம்  !

எப்படி  யேனும்  இத்தமி  ழகத்தை  
முப்படி  உயர்த்திடல்  வேண்டும்  !  -  என்
மூச்சற்  குதவிடல்  வேண்டும்  !   


கனிச்சாறு  -    தொகுதி 1  

தென்மொழி  பதிப்பகம்

மேடவாக்கம்  கூட்டுச்சாலை

மேடவாக்கம்

சென்னை - 600 100
-----------------------------
94444  40449

Thursday, October 9, 2014

தமிழா ! இனத்தை மறந்திடாதே ! - என்றும் தமிழாய் வாழும் பெருஞ்சித்திரனார்.


எந்தக்  கட்சியில்  நீ  இருந்தாலும்
இனத்தை  மறந்திடாதே !  -  தமிழா !
இனத்தை  மறந்திடாதே !   -  உன்
சொந்தக்  குடும்பம்  தனைப்பல  கருத்தால்
சுட்டுப்  பொசுக்கிடாதே  !  -  தமிழா
சுட்டுப்  பொசுக்கி  டாதே  !

எந்தத்  திசையில்  நீ  இருந்தாலும்
ஏற்றந்  துறந்திடாதே !  -  தமிழின்
எழிலைத்  துறந்திடாதே  !  -  பழங்
கந்தலை  யுடுத்துக்  கஞ்சியை  யருந்தினும்
கனிவை  யிழந்திடாதே  !  -  இனக்
கனிவை  யழித்தி  டாதே  !

எந்த  நிலத்தினில்  நீ  இருந்தாலும்
இயல்பை  மாற்றிடாதே !  -  இனத்தின்
இணைப்பை  யறுத்திடாதே  !  -  உன்
முந்தையர்  வாழ்ந்த  முதுதமிழ்  நாட்டின்
மொழியை  மறந்திடாதே  !  -  உணர்வை
மூளி  யாக்கிடாதே  !

எந்தப்  படையினில்  நீ  இருந்தாலும்
இனத்தை  எதிர்த்திடாதே  !  -  தமிழா,
எதிரிக்  குழைத்திடாதே  !  -  உன்
சொந்தத்  தமையனைத்  தம்பியைக்  கொல்லவே
சூழ்ச்சி  நினைந்திடாதே  !  -  பகைவன்
சோற்றில்  நனைந்திடாதே  !


என்றும் தமிழாய்  வாழும்,

பாவலரேறு  பெருஞ்சித்திரனார்

கனிச்சாறு  -  தொகுதி  2.

தென்மொழி  பதிப்பகம்

மேடவாக்கம்,  சென்னை  -  600 100
-----------------------------------------------------
94444  40449

Wednesday, October 1, 2014

தமிழ் வாழ வேண்டுமா ? பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1970



”தமிழ்  வாழ்க”  வென்பதிலும்  தமிழ்வா  ழாது;
தமிழ்ப்  பெயரை  வைப்பதிலும்  தமிழ்வா  ழாது!
குமிழ்  சிரிப்பைப்  பெருஞ்சிரிப்பாய்  அவிழ்த்துக் கொட்டுங்
கொக்கரிப்புப்  பேச்சாலுந்  தமிழ்  வாழாதே !
அமிழ்  கின்ற  நெஞ்  செல்லாம்;  குருதியெல்லாம்
ஆர்த்தெழும்  உள்  உணர்வெல்லாம்  குளிரு  மாறே
இமிழ்  கடல்சூழ்  உலகமெல்லாம்  விழாக்கொண்  டாடி
ஏற்றமிகச்  செய்வதிலும்  தமிழ்வா  ழாதே !


பட்டிமன்றம்  வைப்பதிலும்  தமிழ்வா  ழாது;
பாட்டரங்கம்  கேட்பதிலும்  தமிழ்வா  ழாது;
எட்டி  நின்றே  இலக்கியத்தில்  இரண்டோர்  பாட்டை
எடுத்துரைத்துச்  சுவைபடவே  முழக்கி  னாலும்,
தட்டி,  சுவர்,  தொடர்வண்டி,  உந்துவண்டி
தம்மிலெல்லாம்  “தமிழ்  தமிழ்”  என்றெழுதி  வைத்தே
முட்டிநின்று,  தலையுடைத்து  முழங்கி  னாலும்
மூடர்களே,  தமிழ்வாழப்  போவதில்லை !


செந்தமிழ்செய்  அறிஞர்களைப்  புரத்தல்  வேண்டும்;
செப்பமொடு  தூய  தமிழ்  வழங்கல்  வேண்டும்;
முந்தைவர  லாறறிந்து  தெளிதல்  வேண்டும்;
முக்கழக  உண்மையினைத்  தேர்தல்  வேண்டும்;
வந்தவர்செய்  தீங்குகளால்  தமிழர்க் குற்ற
வரலாற்று  வீழ்ச்சிகளை  எடுத்துக்  கூறி,
நொந்தவுளஞ்  செழித்ததுபோல்  புதிய  வையம்
நோக்கிநடை  யிடல்வேண்டும்!  தமிழ்தான்  வாழும்!


தண்டமிழில்  பிறமொழியைக்  கலந்து  பேசுந்
தரங்குறந்த  தமிழ்  வழக்கை  நீக்கல்  வேண்டும்!
தொண்டரெலாந்  தெருக்களிலே  கடைகள்  தோறும்
தொங்கு  கின்ற  பலகைகளை  மாற்றச்  சொல்லிக்
கண்டு  நிகர்  தமிழ்ப்  பெயர்பால்  புதுக்கல்  வேண்டும் !
கற்கின்ற  சுவடிகளில்,  செய்தித்  தாளில்,
விண்டுரைக்கா  அறிவியலில்,  கலையில்  எல்லாம்
விதைத்திடுதல்  வேண்டும்  தமிழ்;  வாழும்  அன்றே!

நன்றி :- கனிச்சாறு - தொகுதி - 1

தென்மொழி  பதிப்பகம், சென்னை - 600 100

94444 40449


Saturday, September 20, 2014

இனியவை நாற்பது - பூதஞ் சேந்தனார்

இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள 'நாற்பது' எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன் ஆவார். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அந்நூலாசிரியருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.

இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப் பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது.

வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.






தாள் - திருவடி தொழல் - வணங்குதல்

மூன்று கண்களையுடைய சிவபெருமானது திருவடிகளை அடைதல் இனிது. பழமையான திருத்துழாய் மாலையை அணிந்த திருமாலை வணங்குதல் இனிது. நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முன் அமர்ந்து அவனை வாழ்த்துதல் இனிது.


    ==நூல்==


பாடல்: 01 (பிச்சை புக்காயினும்...
பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. 1

இனிது - நல்லது சேர்வு - சேர்தல்

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

பாடல்: 02 (உடையான்...)

உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்,
மனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்,
நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்
தலையாகத் தான் இனிது நன்கு.

வழக்கு - ஈகை துறத்தல் - விடுதல்

பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று ஆராய்ந்துணர்ந்து முற்றும் துறத்தல் இவை அனைத்திலும் மிக இனிது.

பாடல்: 03 (ஏவது மாறா..).

ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே;
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே;
ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்கு இனிதே,
தேரின், கோள் நட்புத் திசைக்கு.

ஏவல் - ஏவுதல் வேளாண்மை - உழவு

சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லுந்திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.

பாடல்: 04 (யானையுடை...)

யானையுடைப் படை காண்டல் மிக இனிதே;
ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே;
கான் யாற்று அடை கரை ஊர் இனிது; ஆங்கு இனிதே,
மானம் உடையார் மதிப்பு. 4

அடை - முல்லை

அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றினது நீராட கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.

பாடல்: 05 (கொல்லாமை...)[தொகு]
கொல்லாமை முன் இனிது; கோல் கோடி, மா ராயன்,
செய்யாமை முன் இனிது; செங்கோலன் ஆகுதல்,
எய்தும் திறத்தால், இனிது என்ப; யார் மாட்டும்
பொல்லாங்கு உரையாமை நன்கு. 5

யார் மாட்டும் - யாவரிடத்தும்

கொல்லாமை முன் இனிது. அரசன் நடுவு நிலைமை தவறி சிறப்பு செய்யாமை இனிது. செங்கோலனாக இருப்பது இனிது. யாவரிடத்தும் திறமையால் கூடியமட்டும் குற்றம் கூறாமை மிக இனிது.

பாடல்: 06 ( ஆற்றும்...)

ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே;
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே;
வாய்ப்பு உடையாராகி, வலவைகள் அல்லாரைக்
காப்பு அடையக் கோடல் இனிது. 6

மாண்பு - மாட்சிமை

கூடிய மட்டும் தருமம் செய்தல் இனிது. சான்றோர்களின் பயனுடைய சொல் இனிது. கல்விச் செல்வம் அதிகாரம் ஆண்மை முதலிய எல்லாம் இருந்தும் 'நான்' என்ற குணம் இல்லாதவனைத் துணையாகக் கொள்வது இனிது.

பாடல்: 07 (அந்தணர்...)

அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே;
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே;
தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,
கொண்டு அடையான் ஆகல் இனிது. 7

பந்தம் - உறவு ஆண்மை - வீரம்

பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்றுபாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது.

பாடல்: 08 (ஊரும் கலிமா...)[தொகு]
ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே;
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெஞ்சமத்துக்
கார் வரை போல் யானைக் கதம் காண்டல் முன் இனிதே;
ஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை,
பேதுறார், கேட்டல் இனிது. 8

கலிமா - குதிரை தார் - மாலை

வீரனுக்கு வலிமையான குதிரை இனிது. மாலையணிந்த அரசர்களுக்கு போர்க்களத்தில் கரிய மலைபோன்ற யானைகள் சினம் கொண்டு போரிடுதலைப் பார்த்தல் இனிது. அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது இனிது.

பாடல்: 09 (தங்கண்...)[தொகு]
தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே;
அம் கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு இனிதே;
பங்கம்இல் செய்கையர் ஆகி, பரிந்து யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது. 9

அகல் நிலா - விரிந்த நிலா காண்பு - காணுதல்

தம்மை ஒட்டி வாழும் நண்பர்கள் செல்வத்துடன் வாழ்தல் இனிது. அழகிய அகன்ற வானத்தில் விரிந்த நிலாவைக் காணுதல் இனிது. குற்றமில்லாத செய்கை உடையவராய் அன்புடையவராயிருத்தல் இனிது.

பாடல்: 10 ( கடம்உண்டு...)

உண்டு வாழாமை காண்டல் இனிதே;
நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே;
மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
எனை மாண்பும் தான் இனிது நன்கு. 10

நீக்கல் - விலக்குதல் அஞ்சி - பயம்

கடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது. கற்பில்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.

பாடல்: 11 (அதர்...)[தொகு]
அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே;
குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே;
உயிர் சென்று தாம் படினும், உண்ணார் கைத்து உண்ணாப்
பெருமைபோல் பீடு உடையது இல். 11

அதர் சென்று - வழி சென்று குதர் சென்று - தவறான வழி

தவறான வழியிற் சென்று வாழாதிருப்பது இனிது. தவறான வழியிற் பொருள் தேடாமை மிக இனிது. உயிரே சென்றாலும் உண்ணத்தகாதார் இடத்து உணவு உண்ணாதிருத்தல் மிக இனிது.

பாடல்: 12 ( குழவிபிணி...)
குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே;
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே;
மயரிகள் அல்லராய், மாண்புடையார்ச் சேரும்
திருவும், தீர்வு இன்றேல், இனிது. 12

குழவி - குழந்தை திரு - செல்வம்

குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது.

பாடல்: 13 ( மானம்...)

மானம் அழிந்தபின், வாழாமை முன் இனிதே;
தானம் அழியாமைத் தான் அடங்கி, வாழ்வு இனிதே;
ஊனம் ஒன்று இன்றி, உயர்ந்த பொருள் உடைமை
மானிடவர்க்கு எல்லாம் இனிது. 13

ஊனம் - குறைபாடு

மானம் அழிந்தபின் வாழாமை மிக இனிது. செல்வம் சிதையாதபடி செல்வத்திற்குள் அடங்கி வாழ்தல் இனிது. குறைபாடு இல்லாத சிறந்த செல்வத்தைப் பெற்று வாழ்வது மிக இனிதாகும்.

பாடல்: 14 ( குழவி...)
குழவி தளர் நடை காண்டல் இனிதே;
அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே;
தவினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து,
மனன் அஞ்சான் ஆகல் இனிது. 14

தளர் நடை - தளர்ந்த நடை

குழந்தைகளது தளர்ந்த நடையைக் காணுதல் இனிது. அவர்களின் மழலைச் சொல் கேட்டல் இனிது. தீயவர்களின் சினத்தைக் கண்டபோதும் மனம் அஞ்சாமல் இருப்பது இனிது.

பாடல்: 15 ( பிறன்மனை...)[தொகு]
பிறன் மனை பின் நோக்காப் பீடு இனிது ஆற்ற;
வறன் உழக்கும் பைங் கூழ்க்கு வான் சோர்வு இனிதே;
மற மன்னர் தம் கடையுள், மா மலைபோல் யானை
மத முழக்கம் கேட்டல் இனிது. 15

பீடு - பெருமை

பிறனுடைய மனைவியை திரும்பிப் பாராத பெருமை இனிது. நீரில்லாமல் வாடும் பசிய பயிர்களுக்கு மழை பொழிதல் இனிது. வீரத்தையுடைய அரசர்களின் அரண்மனையில் பிளிற்றொலியைக் கேட்பது இனிது.

பாடல்: 16 ( கற்றார்...)[தொகு]
கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே;
மிக்காரைச் சேர்தல் மிக மாண முன் இனிதே;
எள் துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது. 16

ஈதல் - கொடுத்தல்

கற்றவர்களின் முன் தான் பெற்ற கல்வியை உணர்த்துதல் இனிது. அறிவின் மேம்பட்டவர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது. எவ்வளவு சிறிதாயினும் தான் இரவாது பிறருக்குக் கொடுத்தல் எல்லாவற்றையும் விட இனிதாகும்.

பாடல்: 17 ( நட்டார்க்கு...)[தொகு]
நட்டார்க்கு நல்ல செயல் இனிது; எத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே;
பற்பல தானியத்ததாகி, பலர் உடையும்
மெய்த் துணையும் சேரல் இனிது. 17

நட்டார் - நண்பர்

நண்பர்களுக்கு இனியவற்றைச் செய்தல் இனிது. அதனைவிட எள் அளவும் நட்பு இல்லாதவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது அதனைவிட இனியது. எல்லாவகைப் பொருட்களை உடையவராய் சமயத்தில் உதவும் நண்பர்களைத் துணையாக வைத்துக் கொள்வது இனிது.

பாடல்: 18 (மன்றில்...)[தொகு]
மன்றில் முதுமக்கள் வாழும் பதி இனிதே;
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே;
எஞ்சா விழுச் சீர் இரு முது மக்களைக்
கண்டு எழுதல் காலை இனிது. 18

தந்திரம் - நூல் முதுமக்கள் - அறிவுடையோர்

அறிவுடையவர்கள் வாழுகின்ற ஊரில் வாழ்வது இனியது. அறநூல்படி வாழும் முனிவர்களின் பெருமை இனியது. தாய் தந்தையரைக் காலையில் கண்டு வணங்குதல் இனிது.

பாடல்: 19 ( நட்டார்ப்...)

நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே;
பட்டாங்கு பேணிப் பணிந்து ஒழுகல் முன் இனிதே;
முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது
தக்குழி ஈதல் இனிது. 19

பேணி - பாதுகாத்து ஈதல் - கொடுத்தல்

நட்பு கொண்டவர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது. சத்தியத்தை பேணிப் பாதுகாத்து வாழ்தல் மிக இனியது. பெரும் பொருளைத் தேடி அதனைத் தக்கவர்களுக்கு ஈதல் மிக இனிது.

பாடல்: 20 (சலவரை...)
சலவரைச்ரைச் சாரா விடுதல் இனிதே;
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே;
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது. 20

சலவரை - வஞ்சகரை ஞாலத்து - பூமியில்

வஞ்சகர்களை நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது.

பாடல்: 21 ( பிறன்கை...)

பிறன்கைப் பொருள் வெளவான் வாழ்தல் இனிதே;
அறம்புரிந்து, அல்லவை நீக்கல் இனிதே;
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறம் தெரிந்து வாழ்தல் இனிது. 21

வௌவான் - அபகரிக்காமல் மயரிகள் - அறிவிலிகள்

பிறருடைய கைப்பொருளை அபகரிக்காமல் வாழ்வது இனியது. தர்மம் செய்து பாவத்தை நீக்குதல் இனிது. மாட்சிமை இல்லாத அறிவிலிகளைச் சேராத வழிகளை ஆராய்ந்து வாழ்தல் இனிது.

பாடல்: 22 ( வருவாய்...)

வருவாய் அறிந்து வழங்கல் இனிதே;
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே;
பெரு வகைத்து ஆயினும், பெட்டவை செய்யார்,
திரிபு இன்றி வாழ்தல் இனிது. 22

வழங்கல் - கொடுத்தல் ஊக்கம் - மனவெழுச்சி

தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது. ஒருவனுக்குச் சார்பாகாத ஒழுக்கம் இனிது. பெரிய யானையை உடையவராயினும் தாம் விரும்பியவற்றை ஆராயாது செய்யாதவராய், தம் இயல்பிலிருந்து மாறாதவராய் வாழ்தல் இனிது.

பாடல்: 23 (காவொடு...)[தொகு]
காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே;
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே;
பாவமும் அஞ்சாராய், பற்றும் தொழில் மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது. 23

தொட்டல் - வெட்டுதல் ஆ - பசு

சோலையுடன் கூடிய பொதுக் குளத்தை வெட்டுதல் இனிது. அந்தணர்க்குப் பசுவோடு பொன்னைக் கொடுத்தல் இனிது. பாவத்திற்கு அஞ்சாமல் சூதாடுகிறவர்களை நீக்கி வாழ்தல் இனியது.

பாடல்: 24 ( வெல்வது...)
வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே;
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே;
இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது. 24

வெகுளி - கோபம் பொறை - பொறுத்தல்

மேம்படுத்தலை விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.

பாடல்: 25 (  ஐவாய...)
ஐ வாய் வேட்கை அவா அடக்கல் முன் இனிதே;
கைவாய்ப் பொருள் பெறினும், கல்லார்கண் தீர்வு இனிதே;
நில்லாத காட்சி நிறை இல் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது. 25

வேட்கை - ஆசை புல்லா - சேராது

ஐந்து வழியால் வருகின்ற ஆசைகளை அடக்குதல் இனிது. கையில் நிற்கக்கூடிய பொருளைப் பெறுவதாக இருந்தாலும் கல்லாதவரை விடுதல் இனிது. இந்த உலகம் நிலையானது என்போரின் நட்பினைக் கை விடுதல் இனியது.

பாடல்: 26 ( நச்சி...)

நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே;
உட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே;
எத் திறத்தானும் இயைவ கரவாத
பற்றினில் பாங்கு இனியது இல். 26

நசை - விருப்பம் பாங்கு - அன்பு

ஒரு பொருளை விரும்பித் தன்னை அடைந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல் இனிது. மதிப்பு இல்லாதவிடத்து வாழாதவனின் மனவெழுச்சி இனிது. எப்படியானாலும் பிறருக்குக் கொடுக்கும் பொருளை மறைக்காதவனின் அன்பு மிகப்பெரியது.

பாடல்: 27 ( தானம்...)

தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே;
ஊனம் கொண்டாடார், உறுதி உடையவை
கோள் முறையால் கோடல் இனிது. 27

ஆண்மை - பெருமை

அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.

பாடல்: 28 (ஆற்றானை...)[தொகு]
ஆற்றானை, 'ஆற்று' என்று அலையாமை முன் இனிதே;
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;
ஆக்கம் அழியினும், அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல். 28

ஆற்றானை - செய்யமாட்டாதவனை கூற்றம் - எமன்

ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.

பாடல்: 29 ( கயவரை...)

கயவரைக் கை இகந்து வாழ்தல் இனிதே;
உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே;
'எளியர், இவர்!' என்று இகழ்ந்து உரையாராகி,
ஒளி பட வாழ்தல் இனிது. 29

கயவரை - கீழ்மக்களை இகழ்ந்து - அவமதித்து

கீழ் மக்களை நீக்கி வாழ்தல் இனியது. தன் உயர்வினை நினைத்து ஊக்கத்துடன் வாழ்தல் இனிது. வறியவர் என்று இகழாது புகழ்பட வாழ்தல் இனிதாகும்.

பாடல்: 30 ( நன்றி...)
நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
'அன்று அறிவார் யார்?' என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின், நன்கு இனியது இல். 30

மாண்பு - மாட்சிமை வௌவாத - அபகரியாத

ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.

பாடல்: 31 (  அடைந்தார்...)
அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே;
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே;
சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து
அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது. 31

கூரா - துன்பம்

தம்மை அடைக்கலமாக வந்தவன் துன்பத்தை நீக்குவது இனிது. கடன் வாங்கியாவது செய்ய வேண்டியவற்றைச் செய்வது இனிது. மிகச் சிறந்த நுட்பமான அறிவுடையவர்களாக இருந்தாலும் ஒரு பொருளை ஆராய்ந்து உரைப்பது இனிது ஆகும்.

பாடல்: 32 ( கற்றறிந்தார்...)
கற்று அறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே;
பற்று அமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே;
தெற்றெனவு இன்றித் தெளிந்தாரைத் தீங்கு ஊக்காப்
பத்திமையின் பாங்கு இனியது இல். 32

தெற்றனவு - ஆராய்ந்து

கற்று அறிந்தவர்கள் உறும் கருமப் பயன் இனிதாகும். அன்பில்லாத அரசனின் கீழ் வாழாதிருத்தல் இனிதாகும். ஆராயாமல் கெடுதல் செய்தவர்களுக்கு தீங்கு செய்யாமல் அன்புடையவராக இருத்தலைப் போன்று இனியது வேறு இல்லை.

பாடல்: 33 (ஊர்முனியா...)[தொகு]
ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே;
தானே மடிந்து இராத் தாளாண்மை முன் இனிதே;
வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர்
தானை தடுத்தல் இனிது. 33

தாள் - முயற்சி

ஊர் வெறுக்காதவற்றைச் செய்து வருபவனின் ஊக்கம் இனிதாகும். சோம்பல் இல்லாது முயற்சி உடையவனின் ஆண்மை இனிதாகும். வாள் கலக்குகின்ற போரில் மாறாத பெருமை உடைய அரசர்களின் படைகளை எதிர்த்தல் ஓர் அரசனுக்கு இனிதாகும்.

பாடல்: 34 ( எல்லிப்..).
எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே;
சொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு இனிதே;
புல்லிக் கொளினும் பொருள் அல்லார் தம் கேண்மை
கொள்ளா விடுதல் இனிது. 34

கேண்மை - நட்பு சோர்வு - மந்தி

இரவில் செல்லாமல் இருப்பது இனியது. சொல்லும் இடத்து மறதியின்று சொல்லுதல் இனிதாகும். தானாக வலிய வந்து நட்புக் கொள்ளும் கயவர்களின் நட்பினைக் கைவிடுதல் இனிதாகும்.

பாடல்: 35 ( ஒற்றினான்...)
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் மாண்பு இனிதே;
முன்தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே;
பற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்து உற்றுப் பாங்கு அறிதல்
வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது. 35

ஒற்று - வேவு உற்று - சமமாக

வெற்றியைத் தருகின்ற பெருமை உடைய அரசன் ஒற்றன் கூறியவற்றை, வேறு ஒற்றராலே ஆராய்ந்து பார்ப்பது இனிது. ஆராய்ந்து பார்த்து நீதி வழங்குதல் இனிதாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்து முறை செய்தல் இனிதாகும்.

பாடல்: 36 ( அவ்வித்து...)
அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே;
செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வு இனிதே;
கவ்வித் தாம் கொண்டு, தாம் கண்டது காமுற்று,
வவ்வார் விடுதல் இனிது. 36

அழுக்காறு - பொறாமை

மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு இல்லாமல் சினத்தை விடுத்து வாழ்வது இனிதாகும். தனக்கு வேண்டிய பொருளை அபகரிக்காமல் அதனை மறந்து விடுதல் இனிது.

பாடல்: 37 (இளமையை...)[தொகு]
இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே;
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே;
தட மென் பணைத் தோள் தளிர் இயலாரை
விடம் என்று உணர்தல் இனிது. 37

கிளைஞர் - சுற்றத்தார் பணை - மூங்கில்

தனக்குள்ள இளமைப் பருவத்தை மூப்பென்று உணர்தல் இனிது. சுற்றத்தாரிடம் இனிய சொற்களைக் கேட்பது இனிதாகும். மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.

பாடல்: 38 ( சிற்றாள்...)
சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே;
நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே;
எத்துணையும் ஆற்ற இனிது என்ப, பால் படும்
கற்றா உடையான் விருந்து. 38

நட்டார் - நண்பர்கள் ஆ - பசு

ஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை இனிது. சுற்றத்தை உடையவனின் பகையை அழிக்கும் தன்மை இனிது. கன்றோடு பொருந்திய பசுவுடையவனது விருந்து எல்லா வகையினும் இனியது.

பாடல்: 39 (பிச்சைபுக்குண்பான்...)
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே;
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே;
உற்ற பொலிசை கருதி, அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது. 39

பிளிற்றாமை - கோபம்கொள்ளாமை ஒற்கம் - மனத்தளர்ச்சி

பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக் கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.

பாடல்: 40 ( பத்து...)

பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே;
வித்துக் குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;
பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல். 40

வித்து - விதை

பத்துப் பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.

பகுப்பு: பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்